தோல் நோய் தீர்க்கும் கருடன்
தோல் நோய்கள், ஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறுகளை நீக்கும் சிறப்பு பெற்ற தலமாக, கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் வட்டம், ஆலத்தியூர் அருகில் உள்ள திரிப்பிரங்கோடில் அமைந்திருக்கும் கருடன் கோவில் திகழ்கிறது.
தல வரலாறு
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முனிவர் ஒருவர், மனித ஆன்மாவிற்கு ஏற்படும் வலி மற்றும் பாவங்களில் இருந்து விடுபடுவதற்கான சிறந்த வழிமுறைகளைத் தெரிவிக்க வேண்டி விஷ்ணுவை நினைத்துத் தவமியற்றி வந்தார். விஷ்ணு தனது வாகனமான கருடனிடம், மனிதனின் ஆன்மா இழிநிலையில் இருந்து மீண்டு நன்னிலை பெறுவதற்கும், ஆன்மா இக்கட்டான சூழ்நிலையில் இருந்து விடுபடுவதற்குமான வழிமுறைகளைச் சொல்லத் தொடங்கினார்.
உடனே கருடன், இறைவன் சொல்லும் வழிமுறைகளைத் தவமியற்றி வந்த முனிவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, முனிவர் தவமியற்றி வந்த இடத்தின் அருகிலிருந்த குளத்தின் கரையில் சென்று அமர்ந்தது. விஷ்ணு, கருடனிடம் சொன்ன வழிமுறைகள் அனைத்தும், முனிவருக்கும் நன்றாகக் கேட்டது. மனித வாழ்வுக்கான நன்னெறிகளை விஷ்ணு வழங்கிய அந்த இடம் புனிதமாகக் கருதப்பட்டது. பிற்காலத்தில் இதனையறிந்த வேட்டாத்து நாட்டு மன்னர், அவ்விடத்தில் கருடனுக்கான கோவில் ஒன்றைக் கட்டுவித்தார் என்று இக்கோவிலின் தல வரலாறு சொல்கிறது.
கேரளத்து சிற்பியான பெருந்தச்சன், தான் செய்த கருடன் சிலை ஒன்றை வேட்டாத்து நாட்டு மன்னருக்குப் பரிசாகத் தந்தார். அந்தச் சிலையின் அழகைக் கண்டு மகிழ்ந்த மன்னன், ‘இந்தக் கருடன் சிலை நல்ல உயிரோட்டத்துடன் அழகாக வடிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சிலை உண்மையாகப் பறந்து சென்றால் எப்படி இருக்கும்?’ என்று கேட்டார்.
உடனே சிற்பி, “இந்தக் கருடன் சிலையை கற்புடைய பெண் எவராவது தொட்டு, பறக்கும்படி வேண்டினால், உண்மையாகவே கருடன் பறந்து செல்வார்’ என்றார்.
அதனைக் கேட்ட மன்னன் கோபமடைந்து, ‘சிற்பியே! சிலை எப்படிப் பறந்து செல்லும்? தாங்கள் சொன்னதை இன்னும் சில நாட்களில் நீங்கள் நிரூபித்துக் காட்ட வேண்டும். இல்லையெனில் உமது உயிரை இழக்க நேரிடும்’ என்று எச்சரித்தார்.
அங்கிருந்து வீட்டுக்குச் சென்ற சிற்பி, தனது மனைவியிடம் அரசவையில் நடந்ததைப் பற்றிச் சொன்னார். மறுநாள் அந்தச் சிற்பியின் மனைவி, சிற்பியை அழைத்துக் கொண்டு அரசவைக்குச் சென்றாள். பின்னர், அங்கிருந்த கருடன் சிலையைத் தொட்டு வணங்கிய அவள், ‘சிலையாக இருக்கும் தாங்கள் உயிர் பெற்றுப் பறந்து சென்று, என் கணவர் உயிரைக் காப்பாற்ற வேண்டும்’ என்று வேண்டினாள்.
என்ன ஆச்சரியம்.. கருடன் சிலை உயிர் பெற்றுப் பறக்கத் தொடங்கியது. அங்கிருந்து பறந்து சென்ற கருடன் குளக்கரை ஒன்றில் போய் அமர்ந்து மீண்டும் சிலையாக மாற்றம் பெற்றது. பறந்து சென்றக் கருடனைப் பின் தொடர் ந்து வந்த மன்னரும், மற்றவர்களும் குளக்கரையில் இருந்த கருடன் சிலையை வணங்கினர். அதன் பிறகு அந்த மன்னன், அங்கு கருட னுக்குத் தனிக்கோவில் ஒன்றைக் கட்டினான் என்று மற்றொரு வரலாற் றுக் கதையும் சொல்லப்படுகிறது.
கோவில் அமைப்பு
இக்கோவிலில் இறக்கைகளை விரித்துப் பறப்பதற்குத் தயாராக நின்ற நிலையில், மேற்கு நோக்கியபடி இருக்கிறார் கருடன். இவர் பாதி மனிதத் தோற்றத்திலும், பாதி கருடன் தோற்றத்திலுமாக காட்சி தருகிறார். ஆலயத்தின் உட்பகுதியில் விஷ்ணு, கூர்ம (ஆமை) தோற்றத்தில் இருக்கிறார். கோவிலின் கிழக்குப் பகுதியில் சங்கர நாராயணன், சிவபெருமான் ஆகியோருக்கும், மேற்குப் பகுதியில் சாஸ்தா, பகவதி, கணபதி மற்றும் பத்ரகாளி ஆகியோருக்கும் சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கோவில் வளாகப் பகுதியில் ஓரிடத்தில், மேடை ஒன்றில் பல நாகங்களின் சிலைகள் இடம் பெற்றிருக்கின்றன. ஆலயத்திற்குத் தெற்கே பெரிய அளவிலான தீர்த்தக்குளம் ஒன்று இருக்கிறது.
வழிபாடும்.. பலன்களும்..
வெள்ளமச்சேரி கருடன் கோவிலில் மலையாள நாட்காட்டியின்படி, விருச்சிகம் (கார்த்திகை) மாதம் முதல் நாள் தொடங்கி 41 நாட்கள் ‘கருடன் விழா’ நாட்களாகக் கொண்டாடப்படுகிறது. தனு (மார்கழி) மாதம் 12 மற்றும் 13-ம் நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
கோவிலுக்கு வரும் பக்தர்கள், பழங்கள் மற்றும் இளநீரை கருடனுக்குச் சமர்ப்பித்து வழிபடுகின்றனர். பருவ நோய்களில் இருந்து குழந்தைகளைக் காக்க வேண்டி, பெற்றோர்கள் கோவில் முன்பகுதியில் விற்கப்படும் தங்கம் அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட நாகம் மற்றும் அதன் முட்டைகளை வாங்கிச் சமர்ப்பித்துக் கருடனை வழிபடுகின்றனர்.
தோல் நோய்கள் மற்றும் ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசக்கோளாறு நோய் பாதிப்பு உள்ளவர்கள், கோவிலின் முன்பகுதியில் விற்பனை செய்யப்படும் தங்கம், வெள்ளி, தாமிரம், வெண்கலம் அல்லது மரத்தால் செய்யப்பட்ட கூடையிலான வெள்ளரிக் காயை வாங்கிச் சமர்ப்பித்துக் கருடனை வழிபடுகின் றனர். இவை தவிர பறவைகளால் வந்த காயம் மற்றும் நோய்களில் இருந்து விடுபடுவதற்கும், இக்கோவி லில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. தங்கள் விளைநிலங்களில் விளையும் பயிர்களைப் பறவைகளிடம் இருந்து பாதுகாக்க விவசாயிகள் இங்கு சிறப்பு வழிபாடுகளைச் செய்கின்றனர்.
அமைவிடம்
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் இருக்கும் திரூர் நகரிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், கோழிக்கோடு நகரிலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது, வெள்ளமச்சேரி. இக்கோவிலுக்குச் செல்லக் கோழிக்கோடு மற்றும் திரூர் நகரங்களிலிருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கருடாழ்வார்
கருடனுக்குக் ‘கருடாழ்வார்’ என்ற பெயரும் உண்டு. கிருதயுகத்தில் அகோபிலத்தைக் கொடுங்கோலனாக ஆட்சி செய்து கொண்டிருந்தான், இரண்யகசிபு. அவனை அழித்துத் தன் பக்தனான பிரகலாதனைக் காப்பாற்ற விஷ்ணு எடுத்த மனிதன் மற்றும் சிங்க உருவிலான அவதாரமே நரசிம்மர் தோற் றமாகும். பிரகலாதனைக் காக்க இறைவன் நரசிம்ம மூர்த்தியாக, இரண்யகசிபுவின் அரண்மணைத் தூணில் இருந்து வெளிவந்தார். அதனால் நரசிம்மர் கருடன் மேல் எழுந்தருளி வராமல், கருடனை விடுத்துத் தனியாக வரவேண்டியதாயிற்று.
இது பற்றி அறிந்த கருடன் மிகவும் துயரமடைந்து, இறைவனிடம் தனக்கு நரசிம்மத் தோற்றக் காட்சியைக் காட்டி அருளும்படி வேண்டினார். இறைவன் கருடனை அகோபிலம் சென்று தவமியற்றும்படி கூறினார். அதன்படி கருடனும் அகோபிலம் சென்று தவமியற்ற, இறைவன் அங்கிருந்த மலைக்குகையில், உக்ர நரசிம்மராய் அவருக்குக் காட்சியளித்தார். இறைவன் மீது மாறாத பக்தி கொண்டு, இறைவனின் சேவையே பெரிது என்று அவரிடம் முழுமையாகச் சரணடைந்ததால், கருடனை ‘கருடாழ்வார்’ என்று போற்றுகிறார்கள்.
பெரிய திருவடி
வைணவ சமய ஈடுபாடுடையவர்கள், கருடனைப் ‘பெரிய திருவடி’ என்றும், அனுமனை ‘சிறிய திருவடி’ என்றும் அழைப்பதுண்டு. கருடனின் வலிமையைக் கண்ட விஷ்ணு, கருடனைத் தனது வாகனமாக ஆக்கிக் கொண்டார். ‘இவனது வலிமை கண்டு திருமால் கேட்டுக் கொள்ள, வாகனமும் கொடியும் ஆனவன்’ என்று அபிதான சிந்தாமணி கருடனைப் பற்றிச் சொல்கிறது. வாகனத்தின் மீது ஏறி அமர்கின்ற போது, அதன் மீது திருமாலின் திருவடி படுகின்ற தன்மையால், ‘திருவடி’ என்னும் சிறப்புப் பெயர் விளங்குகிறது. கருடன் தான் விஷ்ணுவின் முதன்மை வாகனம் என்பதால், கருடன் ‘பெரிய திருவடி’ என்று அழைக்கப்படுகிறார். ராமாயண காலத்தில் இறைவனுக்கு அனுமன் வாகனமாக இருந் ததால், அவர் ‘சிறிய திருவடி’ எனப்படுகிறார்.
மஞ்சள் பாயசம்
இந்தக் கோவிலுக்கு வரும் பக்தர் களுக்கு, மஞ்சள் மற்றும் பாயசம் கலந்த, மஞ்சள் நிறத்திலான பாயசம் வழங்கப் படுகிறது. இந்தப் பாயசத்தைப் பெற்றுச் சாப்பிடுபவர்களுக்கு, அவர்களுடைய தோல் நோய் எதுவாயினும் விரைவில் குண மாகிவிடும் என்கிற நம்பிக்கை நிலவுகிறது. கேரளாவில் இக்கோவிலில் மட்டுமே மஞ்சள் கலந்த பாயசம் அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பெயர்க்காரணம்
கருடன் கோவில் அமைந்திருக்கும் இடம் ‘வெள்ளமச்சேரி’ என்று அழைக்கப் படுகிறது. கோவிலுக்கு அருகில் தீர்த்தக் குளம் ஒன்று உள்ளது. இந்த தீர்த்தக்குளத் தில் முன்காலத்தில் வெள்ளை ஆமைகள் அதிக அளவில் இருந்திருக்கின்றன. இதனால் இப்பகுதி ‘வெள்ளை ஆமைச் சேரி’ என்று அழைக்கப்பட்டிருக்கிறது. அதுவே காலப்போக்கில் ‘வெள் ளமச்சேரி’ என்று மருவிவிட்டதாக கூறுகிறார்கள்.
கருடசேவை
கருட வாகனத்தில் வலம் வரும் பெருமாளை வழிபடுபவர்களுக்கு, மறு பிறவி கிடையாது என்பது வைணவர்க ளின் நம்பிக்கை. பெருமாள் கோவில்களில் பத்து நாட்கள் நடைபெறும் பிரம்மோற் சவத்தின் முக்கிய நிகழ்வாகக் கருடசேவை நடைபெறுகிறது. இப்பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவாகப் பெருமாள் கருட வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் ‘கருடவாகன சேவை’ நடைபெறுகிறது.
நாகதோஷம் நீங்க..
நாகதோஷம் இருப்பவர்கள், ஒரு மண் கலசத்தில் உயிருள்ள பாம்பை உள்ளே வைத்து, கலசத்தின் மேற்பகுதியில் வெள்ளை நிற பருத்தித் துணி ஒன்றினால் மூடி, இக்கோவிலுக்குக் கொண்டு வருகின் றனர். பின்னர், கோவில் வளாகத்தில் அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் அந்தக் கலசத்தைப் போட்டு உடைக்கின்றனர். கலசத்தில் இருந்து வெளியேறும் பாம்பு சீற்றத்துடன் எழுந்து நிற்கும் வேளையில், அங்கிருக்கும் அர்ச்சகர், கருட பஞ்சாட்சர மந்திரம் சொல்லி, பாம்பின் மேல் தீர்த்த நீரைத் தெளிக்கிறார். உடனே அந்தப் பாம்பு அங்கிருந்து தென்திசையில் வெளியேறிச் சென்று விடுகிறது. அப்படிச் சென்று விட்ட பின்பு, அவர்களது நாகதோஷம் நீங்கி விடும் என்பது நம்பிக்கையாக உள்ளது. உயிருடன் பாம்பைப் பிடித்து வந்து செய்யப்படும்இந்த வழிபாடு, பலருக்கும் ஆச்சரியதை அளிப்பதாக இருக்கிறது.
Related Tags :
Next Story