தீர்க்க சுமங்கலி வாழ்க்கை எது?
திருமணமான பெண்களை வாழ்த்தும் பெரியவர்கள் ‘தீர்க்க சுமங்கலியாக வாழ்க’ என்று வாழ்த்துவதைக் கேட்டிருக்கலாம்.
புராணங்களும், இதிகாசங்களும், வேதங்களும் சொல்லும் ‘தீர்க்க சுமங்கலி பவா’ என்ற அந்த வார்த்தைக்கு, ‘நூறு வயதைக் கடந்தும் சுமங்கலியாக வாழ வேண்டும்’ பொருள் கொள்ளலாம்.
இந்த ‘தீர்க்க சுமங்கலியாக வாழ்க’ என்ற ஆசிக்குப் பின்னால், மனைவி தன் கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்பதை உணர்த்தும் தத்துவம் அடங்கியிருக்கிறது.
அந்த 5 மாங்கல்யங்கள் எவை தெரியுமா?
* திருமணத்தில் ஒன்று
* ஷஷ்டியப்த பூர்த்தி (60 வயது)யில் ஒன்று
* பீமரத சாந்தி (70 வயது) யில் ஒன்று
* சதாபிஷேகத்தில் (80 வயது) ஒன்று
* கனகாபிஷேகத்தில் (96 வயது) ஒன்று
திருமணம் என்பது பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்டு, ஊர்மக்கள் வாழ்த்த நிகழும் ஒரு வைபவம். அது பெரும்பாலானவர்களுக்கு வாய்த்து விடக்கூடிய ஒன்று. ஆனால் ஷஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் போன்ற சடங்குகளை நடத்திக்கொள்வது என்பது எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை. அவற்றை நடத்துவதற்கு பெரும் பாக்கியமும், பூர்வ புண்ணியமும் செய்திருக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. இது தவிர இது போன்ற வைபவங்களை செய்வது என்பது பொதுவாக ஆயுள் விருத்தியை பிரதானமாகக் கொண்டே அமைகிறது.
திருமணத்திற்கு பிறகு நடைபெறும் நான்கு சடங்குகளும், உறவு முறைகள் கூடி நின்று குதூகலத்தோடு பங்கேற்கும் போது அந்த தம்பதியரின் மனம் மகிழும். ‘நமக்கென்று இத்தனை சொந்தங்களா?’ என்கிற சந்தோஷம் அவர்களின் மனதை பரவசப்படுத்தும். மேலும் அந்த சடங்குகள் சகல தேவர்களையும் மகிழ்விக்கும் பொருட்டும் நடத்தப்படுகிறது. அன்றைய தினம் வேத பாராயணங்களும், ஹோமங்களும் நடைபெறுவதும் காரணம்.
பூமியானது 360 பாகைகளாகவும், அந்த 360 பாகைகளும் 12 ராசி வீடுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த 360 பாகைகளையும் கடந்துசென்று ஒரு வட்டப் பாதையை பூர்த்தி செய்வதற்கு சூரியனுக்கு ஓர் ஆண்டும், செவ்வாய்க்கு 1½ ஆண்டும், சந்திரனுக்கு ஒரு மாதமும், புதனுக்கு ஒரு வருடமும், வியாழனுக்கு 12 வருடங்களும், வெள்ளிக்கு ஒரு வருடமும், சனி பகவானுக்கு 30 வருடங்களும், ராகுவுக்கு 1½ வருடங்களும், கேதுவுக்கு 1½ வருடங்களும் ஆகின்றன.
இந்த சுழற்சியின் அடிப்படையில் ஒருவர் பிறந்து, அறுபது வருடங்கள் நிறைவடைந்த தினத்துக்கு அடுத்த தினம், அவர் பிறந்த நாளன்று இருந்த கிரக அமைப்புகளும் வருடம், மாதம் போன்றவையும் மாறாமல் அப்படியே அமைந்திருக்கும். மிகவும் புனித தினமான அந்த தினத்தில் தான், சம்பந்தப்பட்டவருக்கு ஷஷ்டியப்த பூர்த்தி வைபவம் மிகவும் ஆச்சாரமான முறையில் தெய்வாம்சத்துடன் நிகழ வேண்டும். ஷஷ்டியப்த பூர்த்தி தினத்தன்று வேத பண்டிதர்களின் முன்னிலையில் நிகழ்த்தப்படும்.
பூஜையின் போது 84 கலசங்களில் தூய நீரை நிரப்பி, மந்திரங்களை உச்சரித்து ஹோமங்கள் நடைபெறும். அங்கே உச்சரிக்கப்படும் வேத மந்திரங்களின் ஒலியால், கலசத்தில் உள்ள நீர் தெய்வீக சக்தி பெற்று, புனிதம் அடைகிறது. பின்னர், அந்தக் கலசங்களில் உள்ள நீரைக் கொண்டு ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியினருக்கு அபிஷேகம் நடைபெறும்.
அபிஷேகத்துக்குப் பயன்படும் இந்த 84 கலசங்கள் எதைக் குறிக்கின்றன? தமிழ் வருடங்களாக மொத்தம் 60 வருடங்கள் இருப்பது அனைவருக்கும் தெரியும். அந்த 60 ஆண்டுகளுக்கான தேவதைகளையும், அந்த தேவதைகளின் அதிபதிகளாகிய அக்னி, சூரியன், சந்திரன், வாயு, வருணன், அமிர்தகடேஸ்வரம், நவநாயகர்கள், அஷ்டதிக் பாலகர்கள் மற்றும் பாலாம்பிகை ஆகியோரையும் சேர்த்துக் குறிப்பதற்காகவே 84 கலசங்கள் வைக்கப்படுகின்றன.
பிரபவ முதல் விஷூ வரையான 15 ஆண்டுகளுக்கு அக்னி பகவானும், சித்ரபானு முதல் துன்முகி வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சூரிய பகவானும், ஹேவிளம்பி முதல் விரோதிகிருது வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சந்திர பகவானும், பரிதாபி முதல் அட்சய வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு வாயு பகவானும் அதிபதிகள் ஆவார்கள்.
பீமரத சாந்தி
தன்னுடைய 60-வது வயதில் ஐம்புலன்களால் வரும் ஆசையை வெற்றிகொள்ளும் மனிதன், அது முதல் தனது என்ற பற்றையும் துறக்க முயற்சி செய்ய வேண்டும். தன்னுடைய மகன், மகள், சொந்த பந்தம் என்ற கண்ணோட்டத்தைத் துறந்து, இந்த உலகில் வாழும் அனைவரும் தன் மக்களே என்றும், எல்லாரும் ஒரே குலம் என்றும் எண்ணும் எண்ணமானது ஒருவரது 70-வது வயதில் பூர்த்தியாக வேண்டும். தான், தனது என்ற நிலை மறந்து, அனைவரையும் ஒன்றாகக் காணும் நிலை பெற்றவர்களே 70-வது நிறைவில் ‘பீமரத சாந்தி’யைக் கொண்டாடும் தகுதியைப் பெறுகிறார்கள். காமத்தை முற்றிலும் துறந்த நிலையே பீமரத சாந்திக்கான அடிப்படை தகுதியாகும்.
சதாபிஷேகம்
70-வது வயதில் இருந்து ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சுற்றி உள்ள எல்லா உயிர்களிலும், இறைவனைக் காண முயற்சிக்க வேண்டும். ஒவ்வொரு உயிரிலும் உறையும் இறைவனுடன் உரையாடப் பழகிக் கொள்ள வேண்டும். அந்த வயதுடைய மனிதனுக்கு ஜாதி, மதம், இன பேதம் எதுவும் இல்லை. இப்படி அனைத்திலும் இறைவனையும், அனைத்தையும் இறைவனாகவும் காணும் நிலையை ஒரு மனிதன் 80-வது வயதில் அடைகிறான். அதே வேளையில் ‘சஹஸ்ர சந்திர தர்ஸன சாந்தி’ என்றும் ஆயிரம் பிறை கண்டவன் என்ற தகுதியையும் பெறுகிறான். அந்த நேரத்தில் தான் சதாபிஷேகம் செய்து கொள்ள வேண்டும்.
கனகாபிஷேகம்
இறையோடு இரண்டறக் கலந்து இறை சிந்தனை கொண்ட தம்பதிகளுக்கு, 96 வயதில் கனகாபிஷேகம் செய்ய வேண்டும். அந்த கனகாபிஷேகத்தில் தான் ஒரு பெண், தன் கணவன் மூலமாக ஐந்தாவது மாங்கல்யத்தைப் பூட்டிக் கொள்கிறாள். மேலும் ‘தீர்க்க சுமங்கலியாக வாழ்க’ என்ற ஆசிக்கு உரியவளாகவும் மாறுகிறாள்.
Related Tags :
Next Story