கல்வியும் வேலையும் அருளும் லட்சுமி வராக மூர்த்தி


கல்வியும் வேலையும் அருளும் லட்சுமி வராக மூர்த்தி
x
தினத்தந்தி 16 Oct 2018 10:51 AM GMT (Updated: 16 Oct 2018 10:51 AM GMT)

கல்வி மேம்பாடு அடையவும், வேலைவாய்ப்பு பெற்றிட வேண்டியும் வழிபடும் சிறப்புமிக்கக் கோவிலாகக் கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாநகரத்தில் ஸ்ரீ வராகம் எனுமிடத்தில் அமைந்திருக்கும் லட்சுமி வராகமூர்த்தி கோவில் இருக்கிறது.

தல வரலாறு

காசியப முனிவர் - திதி தம்பதியருக்கு இரண்யகசிபு, இரண்யாட்சன் என்று இரு மகன்கள் பிறந்தனர். இரண்யகசிபு பிரம்மனை நோக்கித் தவமியற்றி, ‘எவராலும், எந்த ஆயுதத்தாலும் தனக்கு மரணம் நேரக்கூடாது’ என்பது உள்ளிட்ட மூன்று வரங்களைப் பெற்று, மூன்று உலகங்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஆட்சி செய்து கொண்டிருந்தான்.

அவனுடைய சகோதரனான இரண்யாட்சனும் தவமியற்றிப் பிரம்மனிடம் வரங்களைப் பெற்று, பெரும் ஆற்றலுடையவனாக இருந்தான். அவன், தனது ஆற்றலைத் தவறாகப் பயன்படுத்தித் தேவலோகத்தைச் சேர்ந்தவர்களைப் பிடித்து வந்து துன்புறுத்துவதை வழக்கமாக வைத்திருந்தான். அதனால், அவன் கண் பார்வையில் படாமல், தேவர்கள் அனைவரும் மறைந்து வாழ்ந்தனர்.

ஒரு சதுர்யுகம் முடிந்து, மறு சதுர்யுகம் தோன்ற இருந்த நிலையில், இரண்யாட்சன் பூமியைக் கவர்ந்து சென்று கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். புதிய சதுர்யுகத்தில் உயிரினங் களைத் தோற்றுவிக்கப் பிரம்மாவின் மகன் சுயம்பு, படைப்புத் தொழிலைத் தொடங்கினார். கடலுக்கடியில் பூமி மூழ்கிக் கிடந்ததால், அவரால் படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தும் வாழ்விடம் இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது. எனவே அவர், கடலுக்கடியில் மூழ்கிக் கிடக்கும் பூமியை மீட்டுத் தரும்படி தந்தையான பிரம்மனிடம் வேண்டினார்.

பிரம்மனுக்கு, இரண்யாட்சனிடம் இருந்து பூமியை மீட்டுத் தரும் பலமில்லாததால், அவர் விஷ்ணுவைத் தேடிச் சென்று பூமியை மீட்டுத் தரும்படி வேண்டினார். விஷ்ணுவும் பூமியை மீட்பதற்காக, வராகம் (பன்றி) அவதாரம் எடுத்து, இரண்யாட்சனை அழித்து, கடலில் மூழ்கிக் கிடந்த பூமியைத் தனது தெற்றுப் பற்களினால் மேலேத் தூக்கி வந்தார்.

பூமியை மீட்பதற்காக இரண்யாட்சனுடன் செய்த போரினால், கோபமடைந்திருந்த விஷ்ணுவை அமைதிப் படுத்த வந்த லட்சுமி, அவரது மடியில் சென்று அமர்ந்தார். மனைவி லட்சுமியின் அன்பில் கோபம் குறைந்த விஷ்ணு, மனம் குளிர்ந்து மகிழ்ச்சியடைந்தார். இந்தக் கதையினை நினைவுபடுத்தும் வகையில், இக்கோவில் அமைக்கப்பட்டிருக் கிறது என்று கோவிலுக்கான தல வரலாறு தெரிவிக்கப்படுகிறது. இக்கோவிலை இறைவன் விஷ்ணுவே உருவாக்கியதாக வராக புராணத்தில் தெரிவிக்கப்பட் டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

கோவில் அமைப்பு

இக்கோவிலில் வட்ட வடிவிலான கருவறையில் வராக மூர்த்தி மேற்கு நோக்கி, அமர்ந்த நிலையில் இருக்கிறார். அவரது மடியில் லட்சுமி இருக்கிறார். அவருடைய நாற்கரங்களில், பின்புறமுள்ள இரு கரங்களில் சங்கு, சக்கரம் இருக்கின்றன. முன்புறமுள்ள கரங்களில் இடது கரம், அவரது மடியில் அமர்ந் திருக்கும் லட்சுமியை அணைத்த நிலையிலும், வலது கரம் பக்தர்களுக்கு அருளும் நிலையிலும் இருக்கின்றன.

கருவறைக்கு வெளியிலான சுற்றம்பலத்தில் கணபதி, சிவபெருமான், ஐயப்பன், நாகராஜா போன்ற திருவுருவங்கள் நிறுவப்பட்டிருக்கின்றன. இவை தவிர, இக்கோவிலில் வெள்ளிக்கவசம் பொருத்திய அனுமன் சிலை ஒன்றும் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டிருக்கிறது. கோவிலின் முன்பகுதியில் தங்கக் கொடிமரம் உள்ளது. இங்குள்ள ‘வராக தீர்த்தம்’ என்று அழைக்கப்படும் குளம், கேரள மாநிலக் கோவில்களில் இருக்கும் குளங்களில் இரண்டாவது மிகப்பெரிய குளம் என்பது குறிப்பிடத்தக்கது.

வழிபாடும் பலன்களும்

இங்கு நாள்தோறும் காலை, மதியம், இரவு என்று மூன்று வேளைகளில் சீவேலி வழிபாடு செய்யப்படுகிறது. இக்கோவிலில் மலையாள நாட்காட்டியின்படி, மீனம் (பங்குனி) மாதம் எட்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறும் பிரம்மோற்சவ விழா மற்றும் வராக ஜெயந்தி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் பால்பாயசம், அரவணை, மோதகம், பானகம், பஞ்சாமிர்தம் போன்றவைகளைச் சமர்ப்பித்து இறைவனை வழிபடுகின்றனர். கல்வியில் முதன்மை பெற விரும்புபவர்கள், வியாழக் கிழமை அன்று நெய் தீபம் ஏற்றிச் சிறப்பு வழிபாடுகளைச் செய்கின்றனர். இதே போன்று, வேலைவாய்ப்பு வேண்டிப் பயனடைந்தவர்கள், இறைவனுக்குச் சந்தனக்காப்பு செய்து, லட்சார்ச்சனை, மலர் அபிஷேகம், கலசத் திருமஞ்சனம், துலாபாரம், கருட வாகனச் சேவைகளைச் செய்து வழிபடுகின்றனர். நாகதோஷம் இருப்பவர்கள், இக்கோவிலில் இருக்கும் நாகராஜாவுக்குப் பாலாபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.

ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அமைவிடம்

கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாநகரப் பகுதியில் ஸ்ரீ வராகம் எனுமிடத்தில் அமைந்திருக்கும் இக்கோவிலுக்குச் செல்ல நகரப்பேருந்து வசதிகள் இருக்கின்றன.

Next Story