தீபாவளியின் உண்மைப் பொருள்


தீபாவளியின் உண்மைப் பொருள்
x
தினத்தந்தி 30 Oct 2018 10:25 AM GMT (Updated: 30 Oct 2018 10:25 AM GMT)

தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து இருளைப் போக்கி ஒளியை வரவழைத்து இறைவனை வழிபடுவது என்பது தீபாவளியின் ஆழ்ந்த அர்த்தமாகும்.

‘ஆவளி’ என்பதற்கு வரிசை என்பது பொருள். தீப+ஆவளி= தீபாவளி. ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்சத் திரயோதசி இரவுப் பொழுது கழிந்து, புலரும் காலத்தில் வரும் சதுர்த்தசி தினம் தீபாவளியாகும். நரகாசுரனை கிருஷ்ணன் வதம் செய்த தினம் என்பதால், இதனை ‘நரக சதுர்த்தசி’ என்றும் அழைப்பார்கள்.

பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் ஞான பிரகாசத்தை, ஞான ஒளியை அடைய வேண்டும் என்பது தான் தீபாவளியின் உண்மையான தத்துவம். நல்லெண்ணம் ஆகிய எண்ணெய்யை நமது உடலில் பூச வேண்டும். சித்தமாகிய அரப்பினால் தேய்த்து, சஞ்சலம், கெட்ட எண்ணம் போன்ற மனதில் படிந்திருக்கும் அழுக்காற்றை போக்குதல் வேண்டும். ஞானமாகிய வெண்ணிற புத்தாடைகளை உடுத்தி புனிதமாக இருத்தல் வேண்டும்.

காமம், தேவையற்ற கெட்ட சிந்தனைகள் போன்ற அரக்கர்களை பட்டாசு என்னும் திட உறுதிகளால் சுட்டுப் பொசுக்க வேண்டும். இவை அனைத்தையும் செய்யும் போது நம்மையும் அறியாமல் நம் அகத்தில் ஒருவித ஒளிப் பிரகாசம் தோன்றும். அதன் மூலம் ஆனந்தம் உண்டாகும். அந்த நிலையை உருவாக்குவதே தீபாவளி போன்ற பண்டிகையின் உள்நோக்கம்.

கண்ணபிரான் நரகாசுரனை அழிக்க சென்ற போது, அவனது கோட்டைகளான கிரி துர்க்கம், அக்னி துர்க்கம், ஜல துர்க்கம், வாயு துர்க்கம் என்ற நான்கையும் தாண்டி உட்புகுந்தார். பஞ்ச பூதங்களால் ஆன நமது உடலின் உள்ளே புகுந்து தீயவற்றை விலக்கி இறைவன் நமக்கு அருள்புரிகிறார் என்பதை உணர்த்தும் தத்துவம் இதுவாகும். கிரி துர்க்கம் - மண், அக்னி துர்க்கம் - நெருப்பு, ஜல துர்க்கம் - நீர், வாயு துர்க்கம் - காற்று (நான்கு பூதங்கள் இருக்கும் இடத்தில் ஆகாயமான ஐந்தாவது பூதமும் இருக்கும்).

பஞ்சபூதங்களால் ஆன நமது உடலில் இறைவனை குடியமர்த்திக் கொள்ள வேண்டும். இறைவன் நம் உள்ளத்தில் இருக்க இடம் அளித்தால், அவன் நம் உள்ளத்தில் இருக்கும் அறியாமையை அகற்றி உள்ளத்தில் ஒளியேற்றுவான். அவ்வாறு ஒளிபெற்ற ஒருவனது வாழ்வில் ஆண்டின் ஒரு தினம் அல்ல, ஆண்டின் ஒவ்வொரு தினமும் தீபாவளியாகவே அமையும்.

அதனால் தான் தீபாவளியைப் பற்றி ரமண மகரிஷி இப்படிச் சொல்கிறார். ‘தீய எண்ணங்கள் தான் நரக(ம்)ன். அவன் குடியிருக்கும் வீடு, நம் உடம்பு. நமது உடலில் இருந்து அந்த மாயாவியை அழித்து நாம் அனைவரும் ஆத்மஜோதியாக திகழ்வதே தீபாவளி’

Next Story