ஆன்மிகம்

கருணை ஆலயம் கதிர்காமம் + "||" + Grace house kathirkamam

கருணை ஆலயம் கதிர்காமம்

கருணை ஆலயம் கதிர்காமம்
வள்ளியை மணந்த கந்தன் விரும்பிய திருத்தலம், கருவறை வாசலை திரையிட்டு மூடியுள்ள அதிசயக் கோவில், அருணகிரிநாதர் திருப்புகழ் பாடிய திருத்தலம், புத்தர் தவம் இயற்றிய புனித பூமி, அசோக மன்னனின் மகள் சங்கமித்தை வெள்ளரசு நட்ட பூமி என பல்வேறு சிறப்புக்கள் கொண்ட தலமாக விளங்குவது, இலங்கை நாட்டின் புகழ்பெற்ற கதிர்காமம் கந்தன் திருக்கோவில் ஆகும்.
தொன்மைச் சிறப்பு

முருக வழிபாட்டில் மூர்த்தி, தலம், தீர்த்தம் கொண்ட இலங்கையின் புகழ்பெற்ற முருகன் தலமாக விளங்குவது கதிர்காமம் திருத்தலம் ஆகும். இது கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் புத்தர் தியானம் செய்த பதினாறு தலங்களில் ஒன்று என்ற பெருமையைப் பெற்றுள்ளது. அசோகரின் மகளான சங்கமித்தை புத்த கயாவில் இருந்து புனித வெள்ளை அரசு மரக்கன்றைக் கொண்டுவந்து நட்டதை ‘மகா வம்சம்’ என்ற சிங்கள நூல் குறிப்பிடுகிறது.

கந்தப்பெருமானின் புனிதத்தலமாக கதிர்காமம் விளங்கியதை இலக்கியங்களும், புராணங்களும் கூறுகின்றன. கதிர்- ஒளி, காமம்-அன்பு என்பது பொருளாகும். ஆறு கதிர்ப்பொறிகளால் தோன்றிய முருகப்பெருமான், வள்ளியம்மை மீது காதல் கொண்டு, மணம் புரிந்த இடமாதலால் ‘கதிர்காமம்’ என்பது பொருத்தமான பெயராகவே அமைந்து விட்டது.

ஏமகூடம், பூலோகக் கந்தபுரி, வரபுரி, பிரமசித்தி, கதிரை எனப் பல்வேறு பெயர்களால் இன்றைய கதிர்காமம் வழங்கப்படுகிறது. அதேபோல முருகப்பெருமானும் கதிர்காமசுவாமி, கதிரைநாயகன், கதிரைவேலன், மாணிக்க சுவாமி, கந்தக்கடவுள் எனப் பல்வேறு திருநாமங்களால் அழைக்கப்படுகிறார்.

புராண வரலாறு

சூரபதுமனை வதம்செய்யும் நோக்கில், முருகப்பெருமான் கதிர்காமத்தை அடைந்தார். இங்கு ஓடும் மாணிக்க கங்கை நதி அருகே பாசறை அமைத்து வீற்றிருந்தார். இப்பகுதி ‘ஏமகூடம்’ என வழங்கப்பட்டது. சூரபதுமனை வதம் செய்து வென்று, நவகங்கைத் தீர்த்தம் உண்டாக்கி, தேவர்கள் வணங்குவதற்கு எழுந்தருளினார் என, தட்சிண கைலாச புராணம் குறிப்பிடுகிறது.

தெய்வயானையை மணம் முடித்த பின், வள்ளிமலையில் வள்ளியம்மையை மணம்புரிந்த முருகப்பெருமான் திருத்தணிகையில் அமர்ந்தார். பிறகு தாம் விரும்பும் தலம் கதிர்காமமே என்று தன் துணையான இருவரிடமும் கூறி, கதிர்காம கிரியை அடைந்து, அன்பர்களுக்கு அருள் வழங்குகின்றார் என தட்சிண கைலாசபுராணம் கூறுகிறது.

வேடுவர்கள் பகுதியான இதுவே வள்ளி வாழ்ந்த தலம் என்று சொல்கிறார்கள். இங்கே வள்ளி தினைப்புனம் காத்த இடம், முருகன் மரமாக நின்ற இடம் என பல்வேறு இடங்களை அதற்குச் சான்றாக அடையாளம் காட்டுகின்றனர் இப்பகுதியினர்.

தல வரலாறு

‘யாழ்ப்பாண வைபவ மாலை’ என்ற நூலும், ‘மகாவம்சம்’ என்ற சிங்கள வரலாற்று நூலும் கதிர்காமம் குறித்து குறிப்பிட்டுள்ளன. கி.மு. 500-ல் விஜயன் என்ற மன்னன், கதிரை வேலனுக்குக் கோவில் அமைத்ததாக யாழ்ப்பாண வைபவ மாலை கூறுகிறது.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அசோக மாமன்னனின் மகளான சங்கமித்தைப் புனித வெள்ளரசுக் கன்றை, அனுராதபுரத்தில் நட்ட பின்பு, இரண்டாவதாக கதிர்காமத்தில் நட்டார். அந்த ‘கிரிவிகாரை’ என்ற ‘பவுத்தவிகார்’, முருகன் ஆலயத்தின் அருகே அமைந்துள்ளது. இதனை மக்கள் ‘சூரன் கோட்டை’ என அழைக்கின்றனர்.

எல்லாளன் என்ற தமிழ் வேந்தனை வெற்றி கொள்ள விரும்பிய துட்டகெமுனு என்ற சிங்கள மன்னன், கதிர்காமத்து கந்தனிடம் வேண்டுதல் வைத்து விரதமிருந்தான். அதன்படியே, கந்தன் அருளால் வெற்றி பெற்றான். அதற்கு நன்றிக்கடனாக கி.மு. 101-ம் ஆண்டில் கந்தனுக்குத் தனிக்கோவில் எழுப்பினான் என, ‘கந்த உபாத’ என்ற சிங்கள நூல் கூறுவதாக பொன். அருணாசலம் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் சோழர் ஆட்சியில் சிறைப்பட்டிருந்த சிங்கள மன்னன் ஐந்தாம் மகேந்தரனும், அவன் மனைவியும் கதிர்காமத்தானிடம் விடுதலை வேண்டி விரதமிருந்தனர். கந்தன் கருணையால் சோழமன்னனைத் துரத்தியதாக மகாவம்சம் குறிப்பிடுகிறது. இதன் வாயிலாக கந்தனின் அருள்சக்தியை மகாவம்சம் என்ற சிங்கள நூல் ஏற்றுக்கொண்டுள்ளதை நம்மால் அறிய முடிகிறது.

இத்திருக்கோவில், கி.பி. 1581-ம் ஆண்டில் முதலாம் ராஜசிம்மனால் கட்டப்பட்டதாக ஆய்வாளர் வ.குமாரசுவாமி குறிப்பிடுகின்றார். அதே நேரம் கி.பி.1634-ல் இரண்டாம் ராஜசிங்கனால் கட்டப்பெற்றதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆலய அமைப்பு

கதிர்காம ஆலயத்தில், நம்நாட்டு கோவில் போல, ராஜகோபுரம், முன்மண்டபம், மகாமண்டபம், கருவறை எனும் எதுவும் கிடையாது. கோவிலின் முகப்பில் ஒரு வளைவு உள்ளது. அதிலும் சிங்கள மொழியில் எழுதியுள்ளார்கள். ஆங்கிலத்திலும், தமிழிலும் சிறிய எழுத்துக்களால் பெயர் எழுதப்பட்டு உள்ளது.

வலதுபுறம் விநாயகர் சன்னிதி, அருகே பெருமாள் சன்னிதி என்று கூறப்படும் இடத்தில் புத்தர்சிலை உள்ளது. முருகன் சன்னிதியின் இடதுபுறம், சற்றுத் தள்ளி தெய்வானை சன்னிதி கிழக்கு முகமாய் அமைந்துள்ளது. இதன் வழிபாடுகளைத் தமிழர்கள் கவனிக்கின்றனர். கதிர்காமர் சன்னிதி தெற்கு நோக்கியும், வள்ளியம்மன் சன்னிதி வடக்கு நோக்கி, எதிரெதிர் பார்வையில் அமைந்துள்ளன. தெய்வயானை சன்னிதி கிழக்கு நோக்கி இருக்கிறது.

கதிர்காமத்து திருத் தலம் நான்கு பிரிவுகளாக அமைந்துள்ளது. முதல் பிரிவில் கதிர்காமர் கோவில், வள்ளியம்மன் கோவில், கண்ணகியம்மன் கோவில் இருக்கிறது. இம்மூன்றும் பவுத்தமத கோவில் பரிபாலன சட்டப்படி நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. இரண்டாவது பிரிவில் மாணிக்கப் பிள்ளையார் கோவில், தெய்வானை அம்மன் கோவில், பைரவர் கோவில், முத்துலிங்கசுவாமி கோவில், கதிரை மலையில் ஐந்து கி.மீ. தொலைவில் உள்ள பழைய கதிர்காமம் எனும் செல்லக் கதிர்காமம் மற்றும் பிள்ளையார் கோவில், கதிரைமலை இவை அனைத்தும் பாபாக்களின் நிர்வாகத்தில் இயங்குகின்றன. மூன்றாம் பிரிவில் கிரிவிகாரை, பெருமாள் கோவில் ஆகியவை பவுத்த குருமார்களால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நான்காவது பிரிவில் சோனகருடைய பள்ளிவாசல் அமைந்துள்ளது.

பொதுவாக, கருவறையில் உள்ள தெய்வ வடிவங் களைத் தரிசிக்கும் விதமாக இருப்பதே வழக்கம். ஆனால் இங்கே கருவறையைக் காண இயலாதபடி, கருவறை வாசலை வண்ணத் திரையிட்டு மூடியிருக்கின்றனர். திரையில் வள்ளி, தெய்வானை சமேத கந்தனின் ஓவியம் வரையப்பட்டிருக்கிறது. இங்கு பூஜை செய்பவர்களை ‘கப்புராளைமார்’ என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் நாம் தரும் அர்ச்சனைப் பொருட்களைப் பெற்றுக் கொண்டு திரைக்குள் சென்று முருகனுக்கு சமர்ப்பித்து, மீண்டும் நம்மிடம் திருப்பித் தருகின்றனர். எவ்வளவு பெரிய மனிதரானாலும், திரையை விலக்கி காண இயலாது. திரைமீது உள்ள வடிவத்தை மட்டுமே தரிசித்து வரவேண்டும்.

கதிர்காமத்துக் கந்தனின் புகழைக் கேள்விப்பட்டு, பெரிய எதிர்ப்பார்ப்புடன் செல்லும் நமக்கு அவரைக் காண இயலாததும், கோவில் எளிய வடிவத்தில் அமைந்திருப்பதும் சற்று ஏமாற்றமாகத்தான் உள்ளது. என்றாலும், இவரின் சக்தியும், அருளாற்றலும் அதை ஈடுசெய்து விடுகிறது.

திருவிழாக் காலங்களில் சன்னிதிக்குள் இருந்து, என்னவென்று அறிய முடியாத ஒரு பொருளை பெரிய துணியில் மூடி, யானை மீது உள்ள பெட்டியில் வைத்து இறுகக் கட்டி விடுகின்றனர். இது முத்துலிங்க சுவாமி அமைத்த எந்திரம் என்று கூறுவோரும் உண்டு. அப்பெட்டி வள்ளியம்மை கோவிலுக்குச் சென்று திரும்பி வரும்.

அமைவிடம்

இலங்கை நாட்டின் தென்பகுதியில், ஊவா மாகாணத்து புத்தல பிரிவில், தீயனகம காட்டில், மாணிக்க கங்கை நதிக்கரையில், கதிர்காமக் கந்தன் திருக்கோவில் அமைந்துள்ளது. இது கொழும்பில் இருந்து 280 கி.மீ, கண்டியில் இருந்து 210 கி.மீ. தொலைவில் இருக்கிறது.

கண்டியும்.. கதிகாமமும்..

இத்தலத்தைக் ‘கண்டி கதிர்காமம்’ என்று சொல்வது, இந்தியாவில் வழக்கமான ஒன்றாக அமைந்துள்ளது. கண்டியில் புத்தரின் புனிதப்பல்லைக் கொண்ட கோவில் பிரசித்தி பெற்றது. அதேபோல், கதிர்காமத்தில் கந்தப்பெருமானின் கோவில் புகழ்பெற்றது. இரண்டு இடங்களுக்கும் உள்ள தூரம் 210 கி.மீ. ஆகும். ஆகவே, கண்டி வேறு, கதிர்காமம் வேறு என்பதை நாம் நினைவில் கொள்வது நல்லது. இந்தியாவில் காசி -ராமேஸ்வரம் என்ற சொல் வழக்கு போல, கண்டி- கதிர்காமம் என்ற சொல் வழக்கு ஏற்பட்டிருக்கலாம்.

திரைச்சீலை ஓவியம்

எந்தக் கோவிலிலும் இல்லாத வழக்கமாக, இந்த ஆலய கருவறை எப்போதும் திரையிட்டபடியே இருக்கிறது. இதற்குப் பல்வேறு யூகங்கள் கூறப்படுகின்றன. திருப்புகழில் வரும் ‘கனக மாணிக்க வடிவனே மிக்க கதிர்காமத்தில் உறைவோனே’ என்ற வரிகளை வைத்து பார்த்தால், மாணிக்கத்தால் செய்த விலை மதிப்பற்ற திருவுருவம் உள்ளே இருப்பதை உணர முடிகிறது. கதிர்காமத்தை தரிசனம் செய்த டாக்டர் டேவி என்பவரின் கூற்றில், கதிர்காமத்து திருவுருவம் காட்டில் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்களவர்களின் ஆட்சியின் கீழ் வரும் வரை, தமிழர்களால் சைவ முறைப்படி முருகப்பெருமானின் திருவுருவத்தோடு பூஜைகள் நடந்து வந்தன. இதன்பின் சிங்களவரிடம் கோவில் கை மாறியது. ஆனால் அவர்களுக்கு நமது வழிபடும் முறைகள் தெரியாததால், கருவறையைத் திரையிட்டனர் என்று கூறப்படுகிறது. மொத்தத்தில் கருவறை வாசலை மறைத்து தொங்கும் திரைசீலையின் மீது ஓவியமாக விளங்கும் வள்ளி -தெய்வானை சமேத கந்தனையே வழிபட வேண்டியுள்ளது.

முத்துலிங்க சுவாமி

காஷ்மீரில் இருந்து கதிர்காமத்திற்கு வந்தவர், கல்யாணகிரி ஆவார். இவர் இங்கு பன்னிரண்டு ஆண்டுகள் தவமியற்றி இத்தலத்திலேயே சமாதி அடைந்தார். இவரே முத்துலிங்க சுவாமி என அழைக்கப்படுகிறார். இவர் ஆகர்ஷணம் செய்து தந்த யந்திரம் தான் மூலஸ்தானப் பேழையில் வைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்கிறார்கள்.

இதேபோல, இந்தியாவில் இருந்து வந்த கேசவபுரி என்ற பால்குடி பாவா என்ற மகானும் இத்திருக்கோவிலில் தவமியற்றி சமாதியடைந்துள்ளார்.

பனையபுரம் அதியமான்