துயரங்கள் அகற்றும் திருநள்ளாறு ஈசன்


சனி பகவான்;  நள தீர்த்தம்
x
சனி பகவான்; நள தீர்த்தம்
தினத்தந்தி 5 Feb 2019 9:19 AM GMT (Updated: 5 Feb 2019 9:19 AM GMT)

வியாசர் இயற்றிய மகாபாரதத்தின் வன பருவத்தில், சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள் வனத்தில் இருக்கிறார்கள். அப்போது அவர்களை சந்தித்து ஆறுதல் சொன்ன பிரகஸ்தவ முனிவர், பாண்டவர்களுக்கு ‘நளபுராணம்’ என்னும் நளன்- தமயந்தி சரித்திரத்தை சொல்கிறார். இதிலிருந்து மகாபாரத காலத்திற்கு முந்தையது, நளன்- தமயந்தி சரித்திரம் என்பது புலனாகிறது.

நிடத நாட்டை வீரசேனன் எனும் மன்னன் ஆண்டு வந்தான். அவனுடைய மகன் நளன். ஒருநாள் நளன், அன்னப்பறவை ஒன்றைக் கண்டான். அவனது பேரழகைக் கண்ட அன்னப் பறவை, “மன்னா! உன் அழகுக்கு ஏற்புடையவள், விதர்ப்ப நாட்டை ஆண்டு வரும் வீமசேனனின் மகள் தமயந்தி தான். அவள் அழகும், பொலிவும், நால்வகை குணங்களும் கொண்டவள். உனக்காக அவளிடம் தூது சென்று வருகிறேன்' என்றது.

இப்படி தமயந்தியின் குணநலன்களை, அன்னத்தின் மூலம் கேட்டறிந்த நளன், தமயந்தியின் மீது காதல் கொண்டான். அதே போல் நளனைப் பற்றி அன்னம் கூறுவதைக் கேட்டு, தமயந்தியும் நளன் மீது மையல் கொண்டாள்.

இந்த நிலையில் தமயந்திக்கு சுயம்வரம் ஏற்பாடு செய்யப்பட்டது. சுயம்வரத்திற்கு நளன் உட்பட மண்ணுலக மன்னர்கள் பலரும் வந்தனர். அதே நேரத்தில் தமயந்தியின் அழகில் மயங்கிய இந்திரன் உள்ளிட்ட விண்ணுலக தேவர்களும் வந்திருந்தனர். நளன் மீது தமயந்தி கொண்டக் காதலை ஏற்கனவே அறிந்திருந்த தேவர்கள், அவளின் கண்ணுக்கு நளனாகவே காட்சி தந்தனர். தன் முன்பாக இத்தனை நளன் உருவம் இருப்பதை கண்டு தமயந்தி திகைத்துப் போனாள்.

‘இவர்களில் உண்மையான நளனை எப்படிக் கண்டறிவது?’ என்று சிந்தித்தாள். ‘தேவர்களின் கண்கள் இமைக்காது; அவர்கள் சூடும் மாலை வாடாது’ என்பதை அறிந்திருந்த தமயந்தி, உண்மையான நளனை கண்டறிந்து மணமாலை சூட்டினாள். அவர்களின் இனிமையான இல்லற வாழ்விற்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன.

இதற்கிடையில் நளன் மீது கோபம் கொண்ட தேவர்கள், சனி பகவானிடம், நளனை துன்புறுத்தும்படி கூறினர். அவரும் நளனை 7½ ஆண்டுகள் பிடித்தார். இதனால் புஷ்கரனோடு சூதாடி, நளன் தன் நாட்டை இழந்தான். மனைவியோடு காட்டிற்குச் சென்றான். அங்கிருந்து மனைவியையும் பிரிந்தான். அப்போது நளனை, கார்கோடகன் என்ற பாம்பு தீண்டியது. இதனால் அவனது உடல் கருப்பாகி, குள்ள உருவம் பெற்றான்.

இதையடுத்து வாகுனன் என்ற பெயரோடு, அயோத்தி அரசனாக இருந்த ரிதுபன்னனிடம் தேரோட்டியாக சேர்ந்தான் நளன்.

அப்போது தனக்கு சுயம்வரம் என்று அறிவித்தால், நளன் நிச்சயமாக திரும்பி வருவான் என்று தமயந்தி நினைத்தாள். அதன்படி தன் தந்தையிடம் கூறி சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்தாள். சுயம்வரத்திற்கு ரிதுபன்னன் சென்றான். அவனுக்கு தேரோட்டியாக நளனும் சென்றான். அவனைக் கண்டு கொண்ட தமயந்தி, அவனுக்கு மாலை அணிவித்தாள். பின்னர் கார்கோடகன் அளித்த ஆடையை நளனுக்கு போர்த்தியதில் அவன் சுய உரு பெற்றான். நளனும் தமயந்தியும் மீண்டும் ஒன்றிணைந்தனர்.

பின்னர் பரத்வாஜ முனிவரின் வழிகாட்டலின்படி, தர்ப்பைப் புற்கள் நிறைந்த வனத்திற்கு வந்தான் நளன். அங்கு தீர்த்தம் உண்டாக்கி நீராடி, சுயம்புவாக தோன்றிய தப்பைப் புற்கள் படிந்த தழும்புடன் காணப்பட்ட லிங்கத்திற்கு, குங்கிலிய தூபம் காட்டி வழிபட்டான். என்ன ஆச்சரியம் அதுவரை அவனைப் பிடித்திருந்த சனி தோஷம் நீங்கியது. அந்த இடம் தான் இப்போதைய திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம் ஆகும். இத்தல ஈசனின் உடனுறை சக்தியாக ‘போகம் ஆர்த்த பூண்முலையாள்’ எனும் ‘பிராணாம்பிகை’ தெற்குப் பார்த்த வண்ணம் அருள்கிறாள்.

இந்த ஆலயத்தின் கருவறைக்கு வலது புறம், உன்மத்த நடனம் புரியும் தியாக விடங்கர் சன்னிதி இருக்கிறது. அருகில் மரகத லிங்கம் உள்ளது. தியாகராஜருக்கு எதிரில் நந்தி நின்ற வண்ணமும், பிரகாரத்தில் சுந்தரர் சன்னிதியும் உள்ளது. இத்தல தியாக விடங்கர் சன்னிதி அருகில் பிற ஆறு விடங்கத் திருத்தல லிங்கங்கள் பலிபீடங்களுடன் அமைந்துள்ளன.

இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் ஈசனின் கருவறைக்குள் நுழைந்ததுமே, நளனைப் பிடித்திருந்த சனி தோஷம் முழுமையாக நீங்கிவிட்டது. அதனால் தான் அம்பாள் சன்னிதிக்கு அருகே, கட்டை கோபுரத்தின் வெளிச் சுவற்றின் மாடத்தில் சனி பகவானின் சன்னிதி அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆலயத்தில் நவக்கிரக சன்னிதி இங்கு கிடையாது. இங்கு சொர்ண கணபதி, நால்வர், வள்ளி- தெய்வானை உடனுறை முருகப்பெருமான், ஆதிபுரீஸ்வரர், காளகஸ்தீஸ்வரர், ஆதிசேஷன், நாகலிங்கம், நாகர்கள், கலி நீங்கிய நளன், கஜலட்சுமி, மகாவிஷ்ணு, ஜுரதேவர், அறுபத்து மூவர், சப்தமாதர்கள், அர்த்தநாரீஸ்வரர் சன்னிதிகளும் உள்ளன. இங்கு நான்கு பைரவர்கள் அருள்கிறார்கள். மூன்று பைரவர்கள் ஒரே சன்னிதியிலும், ஒரு பைரவர் சூரியனுக்கு அருகிலும் உள்ளனர்.

திருநள்ளாறு ஆலயத்தின் வட மேற்கில் நள தீர்த்தம் உள்ளது. இதில் நீராடி, உடுத்திக் குளித்த ஆடையை, அதற்கென குளக்கரையில் வைக்கப்பட்டுள்ள தொட்டியில் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் அங்குள்ள நளனின் கலி தீர்த்த விநாயகர், பைரவர் சன்னிதியில் முறைப்படி வழிபடவும். பிறகு தர்ப்பாரண்யேஸ்வரர் கருவறையில் குங்குலிய தூபம் காட்டி, தீபம் ஏற்றி நறுமண மலர்கள் சாற்றி வழிபட வேண்டும். அதேபோல் அம்பாள் சன்னிதியில் குங்குமார்ச்சனை செய்து வழிபட்டு, சனி பகவானையும் தரிசிக்க வேண்டும். இதன் மூலம் கர்மவினைகள், கலி தோஷங்கள், பாவங்கள், கிரக தோஷங்கள் அகன்று நீண்ட ஆயுள், நற்புத்தி, செல்வம், ஆரோக்கியம் கிடைக்கும்.

காரைக்காலில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 5 கிலோமீட்டர் தூரத்தில் திருநள்ளாறு அமைந்துள்ளது.

துன்பம் நீக்கும் நள புராணம்
தன்னால் மிகவும் துன்பப்பட்ட நளனிடம், சனி பகவான், “உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்” என்றார். உடனே நளன், “சனீஸ்வரா! நான் பட்ட துன்பம் யாருக்கும் ஏற்படக்கூடாது. என் மனைவி பட்ட துன்பமும் எந்தப் பெண்ணுக்கும் வரக்கூடாது. அதுபோல வருங்காலத்தில் எனது கதையைப் படிப்பவர்களுக்கு உங்களால் எந்தவிதமான துன்பமும் நிகழக்கூடாது” என்று வரம் கேட்டான். சனி பகவானும் அப்படியே வரம் அளித்து அருளினார்.

எனவே சனியினால் ஏற்படும் பாதிப்புகள், சனி தசாபுத்தி பாதிப்புகள் நீங்க ‘நளபுராணம்’ மற்றும் சம்பந்தரின் இத்தல ‘போகமார்த்த பூண்முலையாள்’ எனத் தொடங்கும் பதிகத்தை, ஒருமண்டலம் பாராயணம் செய்து, திருநள்ளாறு திருத்தலம் வந்து வழிபட வேண்டும்.

இடையனுக்கு தனி சன்னிதி
இடையன் ஒருவன், அரசன் ஆணைப்படி திருநள்ளாறு கோவிலுக்குப் பால் கொடுத்து வந்தான். கோவில் கணக்கன், அந்தப் பாலை தன் வீட்டுக்கு பயன்படுத்தியதோடு, பொய் கணக்கு எழுதி இடையனையும் அச்சுறுத்தி வந்தான். உண்மையறியாத மன்னன், இடையன் மேல் கோபம் கொண்டான். இடையனைக் காக்க நினைத்த ஈசன், தன்னுடைய திரிசூலத்தை ஏவினார். அது கணக்கனின் தலையை கொய்தது. இடையனுக்கு ஈசன் காட்சி தந்து அருள்புரிந்தார். கணக்கனை அழிக்க சூலம் வந்தபோது, ஆலய பலிபீடம் சற்று ஒதுங்கியது. இன்றும் ஆலயத்தின் பலிபீடம் விலகி இருப்பதைக் காணலாம். ஈசனின் அருளைப் பெற்ற இடையனுக்கு, கிழக்கு கோபுரம் அருகில் சன்னிதி உள்ளது. வாழ்வில் திக்கற்ற நிலையில் இருப்பவர்களுக்கு, இத்தல ஈசன் கவசமாய் இருந்து காப்பார்.


அருள் செய்யும் தீர்த்தங்கள்
பிரம்மன், சரஸ்வதி மற்றும் சரஸ்வதியின் வாகனமான அன்னப் பறவை மூவரும் இத்தலத்தில் தீர்த்தம் உண்டாக்கி நீராடி, ஈசனை வழிபட்டு பேறு பெற்றனர். அந்த தீர்த்தங்கள் முறையே பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம் மற்றும் அன்ன தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. பிரம்ம தீர்த்தத்தில் மார்கழி மாதம் அதிகாலையில் நீராடி வழிபட்டால் தோஷங்கள், காக்கை வலிப்பு, குன்மம் முதலிய நோய்கள் நீங்கும். சரஸ்வதி தீர்த்தம் என்னும் வாணி தீர்த்தத்தில், தொடர்ந்து ஒரு மண்டலம் நீராடி வழிபட்டால் கல்வி, நற்குணம் கிட்டும். அன்ன தீர்த்தத்தில் நீராடி வழிபட்டால் பிரம்மஹத்தி முதலான தோஷங்கள் விலகும் என்று தலபுராணம் கூறுகிறது.

ஓவியம் பேசும் வரலாறு
மதுரையில் சமணர்களுடன், திருஞானசம்பந்தர் அனல் வாதம் செய்தார். அப்போது தாம் அருளிய பதிகங்கள் அடங்கிய ஓலைச்சுவடிகளில், ஈசனை வேண்டி சம்பந்தர் கயிறு சாத்திப் பார்த்தார். அதில் திருநள்ளாற்றில் தாம் அருளிய ‘போகமார்த்த பூண்முலையாள்’ எனும் பதிகம் வந்தது. உடனே சம்பந்தர் ‘தளிர் இளவளர் ஒளி தனது எழில்’ எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடி, திருநள்ளாறு பதிக ஓலைச்சுவடியை நெருப்பில் இட்டார். அந்த ஓலைச்சுவடி எரிந்து போகாமல் அப்படியே பச்சையாக இருந்தது. சமணர்களின் பாடல்கள் அடங்கிய ஓலைச்சுவடி எரிந்து சாம்பலானது. ஆகவே தான் திருநள்ளாற்றுப் பதிகத்தைப் ‘பச்சைப் பதிகம்’ என்று போற்றுகிறார்கள். நளனின் வரலாறும், திருஞானசம்பந்தரின் பச்சைப் பதிகத்தின் வரலாறும், திருநள்ளாறு ஆலயத்தின் வெளிப்பிரகாரச் சுவற்றில் வண்ண ஓவியங்களாக இன்றும் காணப்படுகின்றன.


Next Story