ஆன்மிகம்

பெருமை நிறைந்த கோலாலம்பூர் மாரியம்மன் + "||" + Kuala Lumpur Mariamman

பெருமை நிறைந்த கோலாலம்பூர் மாரியம்மன்

பெருமை நிறைந்த கோலாலம்பூர் மாரியம்மன்
மலேசிய நாட்டின் பழம்பெரும் ஆலயம், தைப்பூசத்திற்கு அரசு விடுமுறையைப் பெற்றுத் தந்த கோவில், தமிழர்களுக்கு அருளை புகட்டிய ஆலயம், இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய தேசிய ராணுவத்தின் கிளையாகச் செயல்பட்ட கோவில், சமயப் பணியோடு, சமுதாயப் பணிகளுக்கும் உதவும் திருக்கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, கோலாலம்பூர் மகாமாரியம்மன் ஆலயம் ஆகும்.
தல வரலாறு

மகாமாரியம்மன் வரலாறு, மலேசியத் தமிழர்களின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்துள்ளதை வரலாறு எடுத்துக் காட்டுகிறது. தமிழ்நாட்டின் திருமலைராயன் பட்டினம் ஊரைச் சார்ந்த காயோரோகணம் பிள்ளை, கிழக்கிந்தியக் கம்பெனியின் பாதுகாப்புப் படையில் சேர்ந்து பணிபுரிய, சிங்கப்பூர் சென்றார். அங்கு சிறப்பாகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

இந்நிலையில், மலேசிய நாட்டில் கோம்பாக், கிள்ளன்னான் கழிமுகப் பகுதியில் உள்ள கோலாலம்பூரில், ஈய சுரங்க வளர்ச்சி, ரப்பர், காபித் தோட்டங்கள் தோன்றின. அங்கே ஒரு வணிக நகரம் உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் அவர் கோலாலம்பூர் வந்தார். அங்கே இந்தியர்களின் ஈடு இணையற்ற உழைப்பினால் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அங்கே பணிபுரிந்த தொழிலாளர்களுக்குத் தலைவராக விளங்கினார், காயோரோகணம் பிள்ளை.

அந்த சமயத்தில் தமிழ்மக்கள் வழிபட்டு வணங்க மகாமாரியம்மன் ஆலயம் எழுப்ப முடிவு செய்யப்பட்டது. அதன்படி, காேயாரோகணம் பிள்ளை தலைமையில் கி.பி. 1873-ல் எளிய ஆலயம் எழுப்பப்பட்டது. சிறிது காலத்தில் அந்த இடம் ரெயில்நிலையம் அமைக்க தேவைப்பட்டது.

இதனால் சீனத் தலைவர் யாப் ஆலாய் என்பவரிடம் இருந்து காப்டன் குடில் என்பவர் இடத்தை கி.பி.1885-ல் பெற்று, அங்கே எளிய மகாமாரியம்மன் ஆலயம் இடம் பெயர்ந்தது. காயோரோகணம் பிள்ளை 1886-ல் தமிழகம் சென்றபோது காலமானார். அதனைத் தொடர்ந்து அவரது புதல்வர் தம்புசாமிப்பிள்ளை தந்தையார் விட்டுச் சென்ற பணியைத் தொடர்ந்தார். இவரே பத்துமலை முருகன் ஆலயத்தில் வேல் வைத்து வழிபாட்டினைத் தொடங்கி வைத்தார். அவருடன் இன்னும் சிலரும் இணைந்து செயல்பட்டனர்.

தம்புசாமிப் பிள்ளையை அடுத்து, ஆலயத்தை அவரது புதல்வர்கள் நிர்வகித்து வந்தனர். இதனிடையே, பத்துமலை முருகன், கோர்ட்டுமலை கணேசன் ஆலயங்களும் ஒரே நிர்வாகத்தின் கீழ்வந்தது. இதன்பின், புதிய பிரச்சினை உருவானது. உபயதாரர்கள் தங்களுக்கும் ஆலய நிர்வாகத்தில் இடம் வேண்டும் என வலியுறுத்தினர். எவ்வித முடிவும் ஏற்படாமல், 1929-ல் உச்சநீதிமன்றம் வரை வழக்கு சென்றது. 1930-ல் அளித்த தீர்ப்பின்படி ஆலய நிர்வாகம் மக்களின் பாதுகாப்பிற்கு மாற்றம் செய்யப்பட்டது. தென் இந்திய வம்சா வழியினர் ஆலய நிர்வாகத்தில் இடம் பெற்றனர்.

1942-ல் மலாயா, ஜப்பான் ஆதிக்கத்தில் வந்தபோது, ஆலயத்தின் ஒருபகுதி இந்திய தேசிய ராணுவத்தின் உதவி நிலையமாகவும், இந்திய சுதந்திர சங்கத்தின் கிளையாகவும் செயல்பட்டது. தென்கிழக்கு ஆசியாவில் சுதந்திர எழுச்சியை ஏற்படுத்திய மாவீரர் நேதாஜி, இந்த ஆலயத்திற்கு வருகை தந்து, இங்குள்ள மக்களிடம் எழுச்சியூட்டினார்.

இதன்பின், 1945-ல் பிரிட்டிஷார் வசம் சென்றது, மலேயா. இதனால் இந்திய வம்சாவழியினர் நிலை, இன்னலுக்கு உள்ளானது. தங்களைத் தற்காத்துக் கொள்ள, மலேசிய இந்திய காங்கிரஸ் என்ற அரசியல் கட்சி உருவானது. அது தன்னை நிலை நிறுத்தி தமிழர்கள் வாழ்வை காத்தது. இப்படி சமயப் பணியிலும், அரசியல் பணியிலும் இந்த ஆலயம் முக்கியப் பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.

இதன்பின், சிலாங்கூர் மாநில அரசு, முதல்வர் டத்தோ ஆருண், மலேசிய மைய அரசு பிரதமர் துன் அப்துல் ரசாக், அன்னையின் அடியவர்கள் ஆகியோர் பெருமளவில் நிதியுதவி செய்து, இவ்வாலயம் எழும்ப துணை புரிந்தனர்.

இன்று மகாமாரியம்மன் ஆலயம், கோலாலம்பூர் நகரின், கவுரவமான அடையாளச் சின்னமாக திகழ்கிறது. கோலாலம்பூர் மகாமாரியம்மன், பத்துமலை முருகன், கோர்ட்டுமலை கணேசர் ஆலயங்களின் விரிவாக்கமும் நடைபெற்று வருகின்றன.

ஆலய அமைப்பு

கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம், வெளிச்சுவரில் லட்சுமி, சரஸ்வதி, துர்க்கை, விநாயகர், முருகர் உள்ளிட்ட சுதை வடிவங்கள் அலங்கரிக்கின்றன. உள்ளே நுழைந்ததும் கொடிமரம், பலிபீடம், சிங்க வாகனமும் ஒருங்கே அமைந்துள்ளன. எதிரே மகாமண்டபம், கருவறை முகப்பில் விநாயகர், முருகன் அமர்ந்த நிலை, நடுநாயகமாய் அன்னை மகாமாரியம்மன் அமர்ந்த கோலத்திலும், வலது கரத்தில் சூலம் தாங்கியும், இடது கரத்தில் குங்குமக் கிண்ணத்தைத் தாங்கியும் அருளாசி வழங்குகிறாள்.

அன்னையை வணங்கும் போது, தமிழர்களின் காவல் தெய்வமாகவும், மலேசிய அரசிடம் பங்களிப்பையும் பெற்றுத் தந்தது உள்ளிட்ட திருவிளையாடல்கள், நம் கண்முன் தோன்றுகின்றன. ஆலயத்தில் நடராசப்பெருமானும், 63 நாயன்மார்களும் எழுந்தருளச் செய்துள்ளனர். நூலகம் ஒன்றும் ஆலயத்திற்குள் செயல்பட்டு வருகின்றது.

இவ்வாலயம் பன்முக சமய சமூகக் கல்விப் பணிகள் ஆற்றி வருவது குறிப்பிடத்தக்கது. சமயத்தைத் தாண்டி, கல்விப் பணிகள் உள்ளிட்ட எண்ணற்ற பணிகளை, ஆலய நிர்வாகம் செய்து வருகின்றது. இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், தொடர்ந்து ஆலய தரிசனம் செய்யலாம்.

அமைவிடம்

மலேசிய நாட்டின் தலைநகரான கோலாலம்பூரின் மையப்பகுதியான, ஜலான் துன் எச்.எஸ். லீயில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

பனையபுரம் அதியமான்