வேண்டிய வரங்களை அளிக்கும் செங்கன்னூர் பகவதி


வேண்டிய வரங்களை அளிக்கும் செங்கன்னூர் பகவதி
x
தினத்தந்தி 5 March 2019 10:32 AM GMT (Updated: 5 March 2019 10:32 AM GMT)

பொதுவாக கோவில்களுக்கு தலபுராணம் என்பது ஒன்றுதான் இருக்கும். ஆனால், கேரளாவின், ஆலப்புழா செங்கன்னூரில் அமைந்திருக்கும் பகவதியம்மன் கோவில் குறித்து மூன்று விதமான தல வரலாறுகள் சொல்லப்படுகின்றன. அவற்றில். முதல் தல வரலாற்றைப் பார்ப்போம்.

பார்வதி தேவியான தாட்சாயிணியின் தந்தை தட்சன், பெரும் வேள்வி ஒன்றை நடத்தத் தொடங்கினான். தாட்சாயிணி அந்த வேள்விக்கு அழைத்துச் செல்லும்படி சிவனிடம் வேண்டினார். அழைப்பில்லாமல் சென்றால் அவமானம் நேரிடும் என்று சிவன் அறிவுரை சொன்னார். ஆனால், தாட்சாயிணி தனியாக அந்த வேள்விக்குச் சென்று, தட்சனால் அவ மதிக்கப்பட்ட நிலையில் வேள்வி அழியும்படி சபித்து விட்டு, வேள்வித் தீயில் குதித்து விட்டாள்.

அதனை அறிந்த சிவன், வேள்வியை அழித்த பின்னர் தன் மனைவி தாட்சாயிணியின் இறந்த உடலை எடுத்துக் கொண்டு, ஊழித்தாண்டவம் ஆடினார். அவரை அமைதிப்படுத்த நினைத்த மகாவிஷ்ணு, சக்கராயுதத்தால் தாட்சாயிணியின் உடலை துண்டு துண்டாக வெட்டினார். தாட்சாயிணியின் உடல் பகுதிகள் பூலோகத்தில் 51 இடங்களில் விழுந்து, அவை அம்பிகையின் 51 சக்தி பீடங்களாக தோற்றம் பெற்றன. அம்பிகை உடலின், இடையின் கீழ்ப்பகுதி விழுந்த இடத்தில் இக்கோவில் அமைந்திருப்பதாக கோவில் தல வரலாறு சொல்கிறது.

இரண்டாவது தல வரலாறு:- அகத்திய முனிவருக்குத் தங்களது திருமணக் காட்சியைக் காண்பிக்க சிவபெருமானும், பார்வதி தேவியும் தென்பகுதிக்கு வந்திருந்தனர். அவ்வேளையில், இங்கு பார்வதி தேவி வயதுக்கு வந்ததற்கான அடையாளமாக ருது என்ற பூப்பு நிகழ்வு நடந்தது என்பதன் அடிப்படையில், அம்மனுக்கு இங்கு பூப்புனித நீராட்டு விழா என்ற ருது சாந்தி கல்யாணம் நடைபெற்றது. அம்மன் வயதுக்கு வந்த நிகழ்வு நடைபெற்ற இந்த மலைப்பகுதி செந்நிறமாகிப் போனது என்றும், அதனால் இந்த இடம், மலையாளத்தில் செங்குன்னூர் என்று அழைக்கப் பெற்று, பிற்காலத்தில் செங்கன்னூர் என்று மாறி விட்டதாக சொல்லப்படுகிறது. பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு போன்று அம்மனுக்கும், மாதவிடாய் ஏற்படும் நாட்களில் அம்மன் சன்னிதி அடைக்கப்பட்டு, உற்சவர் சிலை, கோவிலின் ஒரு பகுதியில் தனியாக வைக்கப்படும். மூன்று நாட்கள் கடந்த பின்னர், நான்காவது நாளில் சிலை மித்ரபுழை கடவு நதிக்குக் கொண்டு சென்று நீராட்டிய பின்னர் அலங்காரத்துடன் ஊர்வலமாக கோவிலுக்குக் கொண்டு வரப்படும்.

மூன்றாவது தல வரலாறு:- பகவதியின் மற்றொரு தோற்றமாகக் கருதப்படும் கண்ணகி, தனது கணவன் கோவலனுடன் மதுரைக்குச் சென்றார். கோவலன், தான் செய்து வந்த வணிகத்தை தொடங்குவதற்காகக் கண்ணகியின் காற்சிலம்பு ஒன்றை விற்க சென்ற நிலையில், அரசியின் சிலம்பைத் திருடிய பொற்கொல்லன், கோவலனைத் திருடனாகக் குற்றம் சுமத்தி அரசவைக்குக் கொண்டு சென்றான். அங்கு, கோவலனுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டு கோவலன் கொல்லப்பட்டான். செய்தியறிந்த கண்ணகி, அரசவைக்குச் சென்று வழக்குரைத்தாள். வழக்கின் முடிவில், தனது தவறான தீர்ப்பை அறிந்த மன்னன் உயிர் துறந்தான். அதனைக் கண்டும் கோபம் குறையாத கண்ணகி, தன் கற்பின் வலிமையால் மதுரை நகரை தீக்கிரையாக்கினாள். அதன் பிறகு, கண்ணகி இத்தலம் அமைந்திருக்கும் பகுதிக்கு வந்து, தவமிருந்து, கோவலனுடன் சேர்ந்து தேவலோகம் சென்றதாக ஐதீகம். சேரன் செங்குட்டுவன், அங்கு கோவில் அமைத்து அம்மன் சிலையை நிறுவி, ‘செங்கமலவல்லி’ எனும் பெயரிட்டு வழிபட்டு வந்ததாக வரலாறு.

இக்கோவில் செங்கன்னூர் மகாதேவர் கோவில் என்றும், செங்கன்னூர் பகவதி கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. கிழக்கு நோக்கிய மகாதேவர் சன்னிதியும், சன்னிதியின் பின்புறம் மேற்கு நோக்கிய பகவதியம்மன் சன்னிதியும் உள்ளன. பரிவார தேவதை சன்னிதிகளாக கணபதி, ஐயப்பன், கிருஷ்ணர், நீலக்கிரீவன், சண்டிகேஸ்வரன், நாகர் மற்றும் கங்கா ஆகியவை உள்ளன.

வழிபாட்டு காலம்

காலை 4 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் தினசரி வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இறைவன் மகாதேவருக்கு மூன்று வேளைகள், இறைவி பகவதியம்மனுக்கு இரண்டு வேளைகள் என்று தினமும் ஐந்து வேளை பூஜைகள் செய்யப்படுகின்றன. விஷேச தினங்களில் சிறப்பு வழிபாடுகள் உண்டு.

திருப்பூத்து

அம்மனுக்கு மாதவிடாய் ஏற்படும், மூன்று நாட்களில் அம்மனின் சன்னிதி அடைக்கப்பட்டு, அம்மனின் உற்சவ சிலை வடக்கு மூலையில் தனியாக ஒரு அறையில் வைக்கப்படுகிறது. இந்நிகழ்வை ‘திருப்பூத்து’ என்றழைக்கின்றனர். மூன்று நாட் களுக்குப் பிறகு, நான்காவது நாளில் அம்மன் சிலை ‘ஆராட்டு’ செய்யப்பெற்று, மீண்டும் கோவிலுக்குள் கொண்டு வரப்படுகிறது. இவ்விழாவினை ‘திருப்பூத்தாராட்டு விழா’ என்கின்றனர். இருநூறு வருடங்களுக்கு முன்பு, கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தில் அம்மன் சிலை பாதிப்படைந்த நிலையில் புதிய ஐம்பொன்சிலை நிறுவப்பட்டது. அதன் பிறகு, வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மட்டும் மாதவிலக்கு ஏற்பட்டு, திருப்பூத்து விழா நடைபெறுவதாக சொல்லப்படுகிறது. இக்கோவில் கேரளாவின் தட்சிண கயிலாசமாக குறிப்பிடப்படுகிறது. காக்கை வலிப்பு போன்ற நோய் உடையவர்கள், இக்கோவிலில் வழிபாடு செய்தால், நலம் பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும், திருமணத் தடைகள் நீங்கவும், குழந்தைப்பேறு கிடைக்கவும் பகவதியை வழிபடுவதும் வழக்கமாக உள்ளது.

கோவில் அமைவிடம்

கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், செங்கன்னூர் நகரப் பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் கோவில் அமைந்துள்ளது.

ஆங்கிலேய அதிகாரி அளித்த தங்க வளையல்கள்

செங்கன்னூர் பகவதி கோவில் வரவு-செலவு கணக்குகளை ஆய்வு செய்த திருவிதாங்கூர் பகுதி ஆங்கிலேய அதிகாரி மன்றோ, கோவிலில் திருப்பூத்து ஆராட்டு விழாவிற்குச் செய்யப்பட்ட செலவைக் குறைக்க வேண்டுமென்று உத்தரவிட்டார். அதன் பிறகு, ஆடி மாதத்தில் பகவதியம்மனுக்கு திருப்பூத்து உண்டான அதே வேளையில், மன்றோவின் மனைவிக்கும் ரத்தப் போக்கு ஏற்பட்டது. பல மருத்துவர்கள் முயன்றும், அவருக்கு ஏற்பட்ட ரத்தப் போக்கை நிறுத்த முடியவில்லை. கவலையடைந்த மன்றோ, தனது கீழ் அதிகாரி களிடம் ஆலோசனை கேட்டார். அவர்கள் ஜோதிடர் ஒருவரது ஆலோசனைகளை கேட்கலாம் என்றனர். அதன்படி அங்கு வந்த ஜோதிடர், நடந்தவற்றை கேட்டறிந்து, சம்பவத்துக்கு பின்னர் உள்ள அடிப்படையை ஜோதிட கணக்குகள் மூலம் அறிந்து கொண்டார். திருப்பூத்து ஆராட்டு செலவு களைக் குறைக்கச் சொன்னதால், மன்றோவின் மனைவிக்கு நிற்காத ரத்தப்போக்கு ஏற்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். உடனே மன்றோ, விழாவிற்குத் தேவையான செலவுகளை விருப்பம் போல் செய்யலாம் என்று உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, அவரது மனைவிக்கு ரத்தப் போக்கு சரியானது. அதனைத் தொடர்ந்து, செங்கன்னூர் பகவதியம்மனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, இரண்டு தங்க வளையல்களை வழங்கி, பக்தியுடன் மன்றோ வணங்கி விட்டு சென்றார். இன்றும், திருப்பூத்து ஆராட்டு விழாவில் அந்த வளையல்கள் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு வருகின்றன.

சக்தி பீடங்கள்

சக்தி பீடங்கள் என்பவை ஆதிசக்தியின் வடிவமான தாட்சாயிணியின் உடல் பாகங்கள் விழுந்த இடங்களில் அமைந்த கோவில்களாகும். ‘சக்தி பீடம்’ என்பதற்கு, ‘சக்தியின் அமைவிடம்’ என்பது பொருள். அவற்றில் ஐம்பத்தியொரு சக்தி பீடங்கள் ‘அட்சர சக்தி பீடங்கள்’ என்றும், பதினெட்டு சக்தி பீடங்கள் ‘மகா சக்தி’ பீடங்கள் என்றும், நான்கு சக்தி பீடங்கள் ‘ஆதிசக்தி பீடங்கள்’ என்றும் அறியப்படுகின்றன. சக்தி பீடங்கள் அனைத்தையும் கண்டு வழிபட முடியாவிட்டாலும், ஆதிசக்தி பீடங்கள் நான்கையாவது பார்த்து வழிபட வேண்டும் என்பது ஐதீகம். அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள காமாக்யா கோவில், கொல்கத்தா காளிகாட் காளி கோவில், ஒடிசா பெர்ஹாம்பூரிலுள்ள தாராதாரிணி சக்திபீடக் கோவில் மற்றும் ஒடிசாவின் பூரி ஜகந்நாதர் கோவில் வளாகத்திலுள்ள விமலா தேவி சன்னிதி ஆகிய நான்கும் ஆதிசக்தி பீடங்களாகும். எந்த சக்தி பீடத்திற்குச் சென்றாலும் அங்குள்ள பைரவரையும் வணங்க வேண்டும் என்ற நடைமுறை இருக்கிறது. தேவி பாகவதத்தில் அன்னைக்கு 108 சக்தி பீடங்கள் இருப்பதாகவும், அதில் 64 சக்தி பீடங்கள் முக்கியமானது என்றும் கூறுகிறது. தந்திர சூடாமணி என்ற நூலில் 51 சக்தி பீடங்கள் என்று குறிப்பிடப்பட்டதை பின்பற்றி பெரும்பாலான சக்தி பீடங்கள் அறியப்பட்டுள்ளதாக செய்தி உண்டு.

தேனி மு.சுப்பிரமணி

Next Story