எறும்புக்கு அருளிய இறைவன்


எறும்புக்கு அருளிய இறைவன்
x
தினத்தந்தி 5 March 2019 10:45 AM GMT (Updated: 5 March 2019 10:45 AM GMT)

திருச்சி- தஞ்சை நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது திருவெறும்பூர். இந்த ஊரில் உள்ளது, எறும்பீஸ்வரர் ஆலயம்.

சுமார் 250 அடி உயரமுள்ள குன்றின் மீது எறும்பீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மேலே செல்ல 125 படிக்கட்டுகள். இடையே இளைப்பாற மண்டபங்கள் உள்ளன. குன்றின் கிழக்கு நுழைவு வாசலின் இடதுபுறம் செல்வ விநாயகரும், வலப்புறம் ஆஞ்சநேயரும் வீற்றிருக்கின்றனர்.

தெற்கு நோக்கிய சன்னிதியில் உள்ள அம்மன், நறுங்குழல் நாயகி, சவுந்திர நாயகி, ரத்தினம்பாள் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறாள். கோவிலுக்கு முன்னே கொடிமரம், பலிபீடம், நந்திமண்டபம் உள்ளன. கருவறைக்கு முன் முக மண்டபமும், அதனையொட்டி திருச்சுற்றும் உள்ளன. திருச்சுற்றில் முருகன், சப்த கன்னியர், விநாயகர், காசி விஸ்வநாதர், கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள், ஆடவல்லான், சூரியன் ஆகிய தெய்வங்களை தரிசிக்கலாம்.

கருவறையின் வெளிப்புற சுவரில் நர்த்தன விநாயகர், தட்சிணா மூர்த்தி, நான்முகன், துர்க்கை ஆகியோரது திருமேனிகளைக் காணலாம்.

தாருகாசூரன் எனும் அரக்கன் தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். தேவர்களாலும் இந்திரனாலும் அவனை எதிர்த்துப் போரிட முடியவில்லை. எனவே தாருகன் அவர்களை தோற்கடித்து தேவலோகத்தைக் கைப்பற்றினான். தேவர்கள் அஞ்சி பிரம்மனிடம் போய் முறையிட்டனர். பிரம்மன் அவர்களை பூலோகத்தில் உள்ள தென் கயிலாயமாகிய திருவெறும்பூருக்குச் சென்று இறைவனைப் பூஜிக்கும்படி சொன்னார்.

தேவர்களும் தாருகனுக்குப் பயந்து எறும்பு உருவம் கொண்டு, இத்தலத்தை அடைந்து இறைவனைக் கண்டு தங்கள் குறைகளைக் கூறினர். இறைவன் உமா தேவியுடன் காட்சி தந்து, தேவர்களை அங்கேயே சில காலம் தங்கியிருக்கும்படி பணித்தார். தேவர்களின் தலைவனான இந்திரன் பிற தேவர்களுடன் வந்திருந்து, தினசரி ஆயிரம் கரு நெய்தல் மலர்களால் இறைவனை பூசித்து வந்தான்.

தேவர்களும் இந்திரனும் எறும்பு வடிவம் எடுத்து சிவலிங்கத்தின் மீது ஊர்ந்து ஏறும்போது, ஏற முடியாமல் தவித்தனர். உடனே இறைவன் சற்றே தலை சாய்த்து சரிந்து கொடுத்தார் என்பது தல வரலாறு.

தலை வணங்கிப் போற்றும் அடியாருக்கு இறைவனும் தலை வணங்கி அருள் செய்கிறான் என்பதை உணர்த்தவே இங்கு பெருமான் இன்றும் திருமுடி சாய்த்த, தலைவணங்கிய கோலத்தில் காட்சி தருகிறார்.

இங்குள்ள பெருமானுக்கும், பிற மூர்த்திகளுக்கும் தினசரி காலை, உச்சி, மாலை, இரவு என நான்கு கால ஆராதனைகள் நடைபெறுகின்றன. மூலவர் மண்புற்றாய் இருப்பதால், தண்ணீர் படாமல் புற்றுலிங்கம் மீது பாணம் சாத்தப்பட்டு, பாணத்தின் மீது அபிஷேகம் நடைபெறுகிறது.

மாதம் இருமுறை திரயோதசி திதியில் மிகச் சிறப்பாக பிரதோஷ வழிபாடு இங்கு நடைபெறுகிறது. ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் விசாகப் பெருந்திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். புனர்பூச நாளில் விழா தொடங்கி தெப்ப உற்சவம் என சிறப்புடன் நிறைவு பெறும். இத்தலத்தின் தலமரம் வில்வம்.

இந்திரனும், தேவர்களும் பூரித்து வணங்கி அருள் பெற்ற எறும்பீஸ்வரரை தரிசித்து நாமும் அருள் பெறலாமே.

திருச்சி- தஞ்சை பாதையில் திருவெறும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து அரை கி.மீ தொலைவில் உள்ளது இத்தலம்.

ஜெயவண்ணன்

Next Story