ஆன்மிகம்

தேவர்கள் பாதம் பதிந்த மகேந்திரகிரி மலை + "||" + Mahendragiri hill of Devas Padam

தேவர்கள் பாதம் பதிந்த மகேந்திரகிரி மலை

தேவர்கள் பாதம் பதிந்த மகேந்திரகிரி மலை
தமிழகம் ஆன்மிக ரீதியில் மகத்தான புண்ணிய பூமியாக விளங்கி வருகிறது. இங்கே இடம் பெற்றிருக்கும் அபூர்வ மலைகளில் அற்புத தெய்வ தரிசனங்கள் அனைத்தும் மனதில் அமைதியை உருவாக்குவது பலரது அனுபவமாக இருந்து வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலை என்பது சித்தர்கள் வாழும் பகுதி என்பதை பலரும் அறிவார்கள். குறிப்பாக, பொதிகை மலை என்பது தமிழ் உருவான மலையாகவும், அகத்தியர் வாழும் ஆன்மிக மலையாகவும், அத்ரி முனிவர் வாழும் மலையை கொண்டதாகவும் உள்ளது. குற்றால மலையில் சித்தர்கள் தவம் செய்த பல குகைகளும் அமைந்துள்ளன. அந்த வரிசை யில் பல பெருமைகள் கொண்ட மகேந்திரகிரி மலை பற்றிய ஆன்மிக தகவல்களை இங்கே காணலாம்.

சிவனும், உமையவள் பார்வதியும் வாழும் இடமான மகேந்திரகிரி மலை திருக்குறுங்குடிக்கு அருகில் அமைந்துள்ளது. இப்பகுதியில் 18 சித்தர்களும் அரூபமாக வாழ்வதாக நம்பிக்கை. இங்கே கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட தீர்த்தங்கள் அமைந்துள்ளன. மேலும், பல்வேறு தெய்வீக பாதங்களின் பதிவுகளும் இங்கு உள்ளன. உலகம் சுபீட்சம் பெற வேண்டி, சிவனும், பார்வதியும் தவம் செய்த இடம் இங்கு உள்ளது. அந்த இடங்களில் பதிந்துள்ள அவர்களது பாதங்களை தரிசிப்பது சிறப்பானதாகும்.

மகேந்திரகிரி மலையில் அமைந்துள்ள மூலிகை நந்தவனம் நோய் தீர்க்கும் மூலிகை காற்றாகவும், நீருடன் கலந்து மூலிகை நீராகவும் வெளிவருகிறது. எனவே, இங்கு சென்றால் தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை. மலையின் பள்ளத்தாக்கு பகுதியில் பலமான சுழல் காற்று வீசுகிறது. ஆரல்வாய் மொழி மற்றும் பணகுடி ஆகிய பகுதிகளுக்கு இடையே வீசும் காற்றில் அதிக ஈரப்பதம் காரணமாக காற்றாலை மின் உற்பத்தி நடைபெறுகிறது. மலையின் சீதோஷ்ண நிலையில் அபூர்வமான மூலிகைகள் செழித்து வளருகின்றன.

மகேந்திரகிரி யாத்திரை கொடமாடி என்ற ஆனையடி தம்பிரான் ஆலயத்திலிருந்து தொடங்குகிறது. அங்கே உள்ள சதாசிவ நிலையம் அனைத்திற்கும் ஆதாரமாக உள்ளது. அருகில் அத்தியடி விநாயகர் ஆலயம் இருக்கிறது. இங்கு வருபவர்கள் ஆற்றில் குளித்துவிட்டு, தங்களது பழைய ஆடையை கலைத்து விட்டு, புது ஆடையுடன் வரவேண்டும் என்பது முறை. சித்தர்கள் உருவமற்ற நிலையில் தவத்தினை மேற்கொண்டுள்ளதாக கருதப்படுவதால் அப்பகுதிகளை சுத்தமாக பராமரிப்பது மிக அவசியமானது.

மகேந்திரகிரி மலையின் அபூர்வ தீர்த்தங்களையும், கடவுளின் பாதங்களையும் தரிசிப்பவர்களுக்கு முக்தி நிச்சயம். அங்கே செல்ல விரும்புவோர் நாற்பத்தொரு நாட்கள் விரதம் இருப்பதுடன், பாசிப்பயிறு, அவல், பேரீச்சை பழம், பால் போன்றவற்றை மட்டும் உண்ண வேண்டும். மேலும், அம்பாள் பூஜையை தினமும் செய்து வரும் நிலையில் பயணத்தினை தொடங்க வேண்டும்.

அங்குள்ள தெய்வீக பாத பதிவுகளை தரிசிக்கும் பக்தர்கள் ஒவ்வொரு தீர்த்தத்தின் முன்பாக, நின்று மூன்றுமுறை கையை தட்டி தீர்த்தத்தில் மூன்று முறை நீராடி எழ வேண்டும். தேவி பாதங்களை தீர்த்தத்தாலும், பன்னீராலும் சுத்தம் செய்து வாசனை பொடிகள் அடங்கிய திருமஞ்சனத்தை பாதங்களில் சாத்தி, கற்பூரம் காட்டி, பஞ்சாமிர்தம், சுண்டல், சர்க்கரைப் பொங்கல், நைவேத்தியம் படைத்து வணங்க வேண்டும்.

கொடுமுடி அணைக்கட்டின் ஒரு பகுதி வழியாக மலைக்கு சென்றால் முதலில் பேச்சி மொட்டை என்ற இடம் வரும். அங்கிருந்து சங்கு தீர்த்தம், வீணை தீர்த்தம், கிருஷ்ணர் பாதம் ஆகியவற்றை தரிசித்து, காட்டுக்குள் சென்றால், சிவன் பாதம், ராமர் பாதம், சுப்பிரமணியர் பாதம் என வரிசையாக பாதங்களை தரிசனம் செய்து கொண்டே செல்லலாம். அதன் பிறகு பஞ்சவடி என்ற இடத்தில், ராகு- கேது என்ற இரண்டு அருவிகள் இருக்கும். அதன் கீழே இரண்டு மலை முகடுகள் உண்டு. ஒன்று கும்பகிரி. மற்றொன்று கும்பகர்ணன் முகடு. அவற்றின் அருகே உள்ள மகேந்திரகிரி மலையை மேகக்கூட்டம் மூடி இருக்கும். அங்கு உள்ள ஆஞ்சநேயர் கோட்டை என்ற இடத்தில் தற்போதும் அனுமன் வசிப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

மேலும், கொண்டை முறிச்சான் மலையை கடந்து, நாடுக்காணி தொண்டு என்ற இடத்தில் உள்ள மனோன்மணி தாய் பாதத்தினை தரிசிக்கலாம். பின்னர் ராமர் தீர்த்தம், பசுபதி தீர்த்தம், புண்ணாக்கீஸ்வரர் தீர்த்தம், அண்டன் கூடம் போன்றவற்றையும் தரிசனம் செய்த பின்னர் பல ஆண்டுகளாக அணையாமல் எரியும் தீபத்தை தரிசிக்கலாம். யாத்திரியர்கள், அங்கிருந்து மீண்டும் தாயார் பாதம் சென்று, வேல் தீர்த்தம், தச்சன் குகை, வண்ணாத்தி பாறை வழியாக நம்பி கோவிலை வந்து சேருவார்கள். அதன் பின் அங்கிருந்து திருக்குறுங்குடி திரும்பி யாத்திரையை முடித்து கொள்வது முறை. தற்போது, இந்த மலைக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது என்பது கவனிக்கத் தக்கது.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியான மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை உள்ளது. அதனால், கொடுமுடி ஆறு அணைக்கட்டு அருகில் உள்ள சாதுக்கள் பீடம், சதாசிவ நிலையம் ஆகியவற்றை தரிசித்து விட்டு திரும்பி விட வேண்டும். இங்குள்ள அத்தியடி விநாயகர், சப்த கன்னியர் போன்ற தெய்வங்களை வணங்குவதும் சிறப்பானதாகும். பவுர்ணமி தோறும் அத்தியடியில் நடக்கும் சிறப்பு பூஜையில் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு தரிசனம் செய்து வருகிறார்கள்.

மகேந்திரகிரி மலையில் சுப்பிரமணியர் பாதம், சிவனடியார் பாதம், பஞ்சவடி, பெரிய பாதம், அகத்தியர் பாதம், அம்பிகை சியாமளாதேவி பாதம், மனோன்மணி தாயார் பாதம், கிருஷ்ணர் பாதம், தாய் பாதம் உட்பட பல பாதங்களின் பதிவுகள் உள்ளன. தாய் பாதமே எல்லாவற்றிலும் சிறப்பானதாகும். மேலும் இங்கு அத்தியடி தீர்த்தம், பசுபதி தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம், சங்கு தீர்த்தம், ரோகிணி தீர்த்தம், பார்வதி தீர்த்தம், கஜேந்திர மோட்ச தீர்த்தம், நயினார் அருவி, பாதானி தீர்த்தம், தேர்க்கல் தெப்ப தீர்த்தம், ராகவர் அருவி குகை தீர்த்தம், காளிகோவில் தீர்த்தம், ஆஞ்சநேயர் கோட்டை தீர்த்தம் உள்பட பல தீர்த்தங்களும் உள்ளன. மேலும் வரலாற்று சிறப்பு மிக்க பஞ்சவடி என்ற ஐந்து குழிகளை உடைய இடமும் இங்கு உள்ளது. இந்த இடத்தில் பஞ்சபாண்டவர்கள் வனவாசம் செய்ததாக சொல்லப்படுகிறது. ஆஞ்சநேயர் கோட்டை என்ற இடம் வானரங்கள் வசிக்கும் பகுதியாக உள்ளது. இவ்விடத்தில் இருந்துதான் அனுமன் இலங்கைக்கு சென்றதாக தகவல் உண்டு. சிவனடியார் பாதம் அருகில் உள்ள பஞ்சவடிக்கு பக்கத்தில் தேவ வனம் என்ற மலர் தோட்டம் உள்ளது. அங்கே சித்தர்கள் மலர்களை பறித்து சிவன் மற்றும் பார்வதி தேவியை தினசரி வழிபட்டு வருவதாக ஏடுகள் கூறுகின்றன. அந்த பகுதியில் உள்ள ஒரு கல்வெட்டில் ‘தேவ வனம் மானுடர்கள் செல்லக்கூடாது’ என்று பொறிக்கப்பட்டுள்ளதாம்.

ஆனையடி தம்பிரான் வாழ்ந்து பிரதிஷ்டை செய்த சதாசிவம் கோவிலை அணைக்கட்டு கட்டுமான பணிகளின்போது அகற்ற முயற்சி செய்தும் இயலவில்லை. அதனால், அணையின் கரைக்கு உட்புறத்தில் சதாசிவம் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மூலவர் உள்ள இடத்தில் அபூர்வமான ஓலைச்சுவடிகள் அடங்கிய பெட்டி வைத்து வணங்கப்படுகிறது.

மகேந்திரகிரி மலையில் உள்ள தொழுகண்ணி, அழுகண்ணி, இடிநருங்கி, மதிமயங்கி, கருணை கிழங்கு, மலைநீலி, நீலத்தும்பை, அழவணம், கல்தாமரை, குமரி குறிஞ்சி செடி, மருள், நாகதாளி, திருநீற்றுப்பூண்டு, பொன்னாவாரை போன்ற அபூர்வ மூலிகைகள் உள்ளன. குறிப்பாக, பேய்த்தி, பூவரசு, காட்டுச்சீரகம், மகாவில்வம், தான்றிக்காய், பன்னீர்ப்பூ மரம், கரு ஊமத்தை, கருங்குங்கிலியம், நீல நாயுருவி, பிரம்மத்தண்டு, மலைக்கரந்தை, புளியாரை, மலைச்சடையான், மலை இஞ்சி, மலை கண்டங்கத்திரி, தேவதாரு, கல்லுருக்கி, கடுக்காய் உள்ளிட்ட நிறைய மூலிகை வகைகள் இப்பகுதியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

முத்தாலங்குறிச்சி காமராசு