இன்னல்களை போக்கும் பசுங்கிளி சாஸ்தா


இன்னல்களை போக்கும் பசுங்கிளி சாஸ்தா
x
தினத்தந்தி 19 March 2019 9:27 AM GMT (Updated: 2019-03-19T14:57:11+05:30)

திருநெல்வேலி மாவட்டத்தில் ‘சமுத்திரம்’ என்ற பெயரில், பல ஊர்கள் சிறப்புடன் விளங்குகின்றன.

அம்பாசமுத்திரம், ரவண சமுத்திரம், வீரா சமுத்திரம், ரெங்க சமுத்திரம், தளபதி சமுத்திரம், வால சமுத்திரம், கோபால சமுத்திரம், வடலை சமுத்திரம் (பத்மனேரி), ரத்னாராக சமுத்திரம் (திருச்செந்தூர்) ஆகிய இடங்கள் நவசமுத்திரம் என போற்றப்படுகிறது.

இதில் கோபால சமுத்திரம் சிறப்பு மிக்க தாமிரபரணி கரையில் உள்ள கிராமமாகும். இக்கிராமத்தின் எல்லையில் தான் பச்சையாறு வந்து சேருகிறது. சிறப்புமிக்க இந்த ஊரில்தான் பசுங்கிளி சாஸ்தா அருள்புரி கிறார்.

கோவில் வரலாறு

பல ஆண்டுகளுக்கு முன்பே இவ்விடம் பசுமையின் புகலிடமாய் காட்சியளித்தது. இங்கு பசுங்கிளிகள் கூடி கும்மாளமிட்டன. இங்குதான் சாஸ்தா அமர்ந்திருக்கிறார். இவருக்கு முன்பாக கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விளைநிலங்கள்தான். அதற்கெல்லாம் சாஸ்தா தான் பாதுகாவலர். அங்குள்ள ஒரு தோட்டத்துக்கு சொந்தக்காரர் பட்டாணி. விளை நிலம் மீது மிகுந்த பற்று கொண்டவர். எனவே நல்ல உரங்கள் இட்டு கரும்பு பயிரை செழிக்க வளர்த்திருந்தார்.

இவர் ஓய்வுக்காக வீட்டுக்கு செல்லும் வேளையில் பசு ஒன்று வருவதும், கரும்புகளை மேய்வதும் வாடிக்கையாக இருந்தது. ஒரு நாள் அந்த பசுவை கண்ட பட்டாணி, அதை கொல்ல அரிவாளோடு துரத்தினார். பசுவானது, ஓடிப்போய் சாஸ்தா சன்னிதியின் முன்பு அடைக்கலமானது. அங்கும் துரத்தி வந்து பசுவை வெட்ட முயன்ற பட்டாணியின் முன்பு, சாஸ்தா தோன்றினார். பசுவை வெட்ட வேண்டாம். அது வாய் இல்லாத ஜீவன் என்று சாஸ்தா கூறியதைக் கேட்கும் மனநிலையில் பட்டாணி இல்லை.

தான் போற்றி வளர்ந்த பயிரை தின்ற பசுவை கொன்றே தீருவேன் என்று பசுவை வெட்ட முயன்றார். அப்போது சாஸ்தா, “நீ பசுவை வெட்ட அனுமதிக்க மாட்டேன். வேண்டுமானால் என்னை வெட்டிக்கொள்” என்றார் சாஸ்தா. ஆத்திரம் கண்ணை மறைத்ததால், சாஸ்தாவின் இரு கரங்களையும் பட்டாணி வெட்டி விட்டார். ரத்தத்தை பார்த்ததும் சுயநினைவுக்கு வந்த பட்டாணி, தான் செய்த தவறை உணர்ந்து வருந்தினார். அப்படியே மயங்கி சரிந்தார் பட்டாணி. அதில் அவரது உயிர் பிரிந்தது.

இந்த நிலையில் பட்டாணியின் மனைவி, பிள்ளைகள் ஓடிவந்தனர். அவரது உடலைப் பார்த்து கதறினர். அவரது உயிரை மீட்டுத் தரும்படி சாஸ்தாவிடம் வேண்டினர்.

கருணை நிறைந்த சாஸ்தா, “பட்டாணிக்கு முக்தி காலம் வந்து விட்டது. அவனை எனது தென் பாகத்தில் நான் அமரச் செய்கிறேன். என்னை வணங்க வரும் பக்தர்கள் அனைவரும் அவனையும் வணங்குவார்கள்” என்றார். அதன்படியே சாஸ்தாவின் தென்பாகத்தில் பட்டாணிக்கு பீடம் அமைக்கப்பட்டது. பின்னர் கல் மண்டபம் கட்டி, பரிவார தெய்வங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர்.

இந்த ஆலயத்தில் அருளும் பசுங்கிளி சாஸ்தா வேண்டும் வரம் அருளும் தெய்வமாக திகழ்கிறார். குழந்தை வரம் வேண்டுவோர், நாள்பட்ட நோயால் அவதிப்படுபவர்கள், அரசு வேலை கிடைக்க காத்திருப்பவர்கள், திருமணத் தடை இருப்பவர்கள் இங்கு வந்து வணங்கிச் சென்றால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

தற்போதும் இத்தல சாஸ்தா கரம் இல்லாமல் தான் காட்சி தருகிறார். ஒரு முறை இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள், சாஸ்தா கரம் இல்லாமல் இருக்கிறாரே என்று நினைத்து, புதிய சாஸ்தா சிலையை செய்து அதை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தனர். புதிய சிலை செய்து கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்தார் சிற்பி. அவர் கோபாலசமுத்திரம் கிராம எல்லையில் வரும் போது திடீரென்று நிலை தடுமாறினார். அவருக்கு கண் பார்வை பறிபோனது போல் இருந்தது. ஊர் மக்கள் அதிர்ந்து போனார்கள்.

பின்னர் “சாஸ்தாவே.. நீங்கள் கையில்லாமலேயே இருங்கள். இந்த சிலையை அங்கு பிரதிஷ்டை செய்ய மாட்டோம். தயவு செய்து சிற்பிக்கு கண் பார்வை தாருங்கள்” என்று வேண்டினர். அதன்பிறகே அவருக்கு கண்பார்வை வந்தது. புதியதாக செய்த சிலையை சிவன் கோவிலில் வைத்துவிட்டனர்.

இந்தத் திருக்கோவில் பாண்டிய மன்னரால் எழுப்பப்பட்டது என்பதற்கு சான்றாக, சாஸ்தா சன்னிதி மேல்தளத்தில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கிறது. ஆலயம் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்.

திருநெல்வேலியில் இருந்து சேரன்மகாதேவி செல்லும் சாலையில் 15 கிலோ மீட்டர் தொலைவில் தருவை ஆற்றுபாலம் இருக்கிறது. அங்கிருந்து வலது புறம் சென்றால் கோபாலசமுத்திரத்தில் உள்ள பசுங்கிளி சாஸ்தாவை தாமிரபரணி ஆற்றங்கரையில் தரிசனம் செய்யலாம்.

முத்தாலங்குறிச்சி காமராசு

Next Story