ஆன்மிகம்

ஆயுள் விருத்தி தரும் சித்ரகுப்தன் + "||" + Life Development's Citrakuptan

ஆயுள் விருத்தி தரும் சித்ரகுப்தன்

ஆயுள் விருத்தி தரும் சித்ரகுப்தன்
சித்ரா பவுர்ணமி நன்னாளில், சித்ரகுப்தருக்கு விரதம் இருந்து, பூஜித்து வழிபடுவது வழக்கம். பெரும்பாலான குடும்பங்களில், இது முக்கியப் பண்டிகையாகவே கொண்டாடப்படுகிறது. பெரும்பாலும் பெண்களே விரதமிருந்து வழிபாடுகளைச் செய்கிறார்கள்.
19-4-2019 சித்ரா பவுர்ணமி

சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம் கூடி வரும் பவுர்ணமி நாள் ‘சித்ரா பவுர்ணமி’யாகும். இது வசந்த காலம். “காலங்களில் நான் வசந்த காலமாக இருக்கிறேன்” என்று பகவான் கண்ணன் பகவத்கீதையில் கூறுகிறார்.

ஒரு சமயம், கயிலையில் பார்வதி தேவி, தங்கப்பலகையில், சித்திரம் ஒன்றை வரைந்தார். அந்தச் சித்திரத்திற்கு, சிவனாரை உயிர் கொடுக்க வேண்டினார். அந்த‌ வேண்டுகோளை ஏற்று, சிவபெருமானும் சித்திரத்திற்கு உயிர் கொடுத்தார். சித்திரத்தில் இருந்து தோன்றியதால் ‘சித்திர புத்திரன்’ என்றும், ‘சித்ரகுப்தன்’ என்றும் அழைக்கப்படலானார். சித்ரகுப்தர் தோன்றிய தினம் ‘சித்ரா பவுர்ணமி’ என்று புராணங்கள் சொல்கின்றன.

வசந்த ருதுவில் நீர் நிலைகள் தெளிவாக இருக்கும். அந்த தெளிந்த நீரில் பவுர்ணமி நிலவு அழகிய சித்திரத்தை போல் தோன்றும் என்பதால்தான் ‘சித்ரா பவுர்ணமி’ என பெயர் ஏற்பட்டதாக மற்றொரு கதை கூறுகிறது.

மனிதர்கள், தேவர்கள் உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளின் பாவ புண்ணியங்களை கணக்கிட, சிவபெருமான் ஒருவரை நியமிக்க எண்ணினார். அதன்படி அந்தப் பணிகளை சித்ரகுப்தனிடம் வழங்கினார். சித்ரகுப்தனும் அந்தப் பணியை சிறப்பாக செய்து வரலானார். இவர் குறித்து வைக்கும் பாவ- புண்ணிய கணக்குகளைக் கொண்டே, எமதர்மன் ஜீவராசிகளுக்கு தண்டனை வழங்குவதாக புராணங்கள் சொல்கின்றன. ‘சித்' என்றால் ‘மனம்’, என்றும், ‘குப்த' என்றால் ‘மறைவு’ என்றும் பொருள்படும். நம் மனதில், மறைவாக இருந்து நாம் செய்யும் பாவ - புண்ணியங்களைக் கண்காணிப்பதால், சித்ரகுப்தனுக்கு இந்தப் பெயர் வந்ததாக சொல்வார்கள்.

சித்ரகுப்தனுக்கு காஞ்சீபுரத்தில் தனிக்கோவில் உள்ளது. அருப்புக்கோட்டை அமிர்தகடேஸ்வரர் கோவிலிலும் அவருக்கு தனிச் சன்னிதி இருக்கிறது. இந்த ஆலயங்களுக்குச் சென்று சித்ரகுப்தனை வழிபட்டு சிறப்பான வாழ்வை அமைத்துக்கொள்ளலாம்.

வண்ணங்களில் வஸ்திரங்கள்

ஏழு வண்ணங்கள் ஒன்றிணைந்து உருவான நீனாதேவிக்குப் பிறந்தவர், சித்ரகுப்தர் என்றும் ஒரு புராணக்கதை கூறுகிறது. அதன்படி சித்ரகுப்தனை வழிபடும்போது, வானவில்லின் ஏழு நிறங்களை நினைவுபடுத்தும் வகையில், அவருக்கு வண்ண வண்ண வஸ்திரங்களை சாத்தி வழிபடுவது சிறப்பு. தயிர் சாதம், தேங்காய் சாதம், உளுந்து வடை முதலியவற்றை நைவேத்தியமாக படைக்க வேண்டும். பசும்பால், தயிர் போன்றவற்றை நைவேத்தியமாக படைக்கக்கூடாது. சித்ரகுப்தனின் அபிஷேகத்திற்குக் கூட பசும்பால் பயன்படுத்துவது கிடையாதாம். சித்ரகுப்தனை நினைத்து விரதம் இருப்பவர்களும், உப்பு, பசும் பால், தயிர் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

விரதம் இருப்பது எப்படி?

சித்ரா பவுர்ணமி அன்று சந்திர பகவான், தம் பூரண கலைகளுடன் பிரகாசிக்கிறார். பூமிக்கு மிக அருகில் சஞ்சாரம் செய்கிறார். எனவே அன்றைய தினம் இறைவழிபாடு செய்வது மிக அதிக நற்பலன்களைப் பெற்றுத் தரும். அதோடு சித்ரா பவுர்ணமி வரும் சித்திரை மாதத்தில் சூரியனும் தனது உச்ச வீட்டில் பலம் பெற்று நிற்கிறார். அன்றைய தினம் அதிகாலையில் வீட்டை சுத்தம் செய்து மாக்கோலம் இட வேண்டும். பூஜை அறையில் சித்ரகுப்தனின் படத்தை வைத்து வழிபாடு செய்யலாம். அவரது படம் இல்லாதவர்கள், பூஜை அறையில் மாக்கோலமாக சித்ரகுப்தனின் படத்தை வரைய வேண்டும். அவரது கையில் ஏடும், எழுத்தாணியும் இருப்பது போல் வரைவது அவசியம். சித்ரகுப்தரின் திருவுருவத்துக்கு தீப, தூபம் காட்டி, மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். நாம் அறிந்தும் அறியாமலும் செய்யும் சகல பாவங்களையும் மன்னித்து அருளும்படி, மனமுருகி வழிபட வேண்டும். அன்றைய தினம் மலை வலம் வருவதும், முருகப்பெருமானையும், சித்ரகுப்தனையும் வழிபடுவதும் சிறப்பானதாகும். இந்த வழிபாட்டின் மூலமாக ஆயுள் விருத்தியும், ஆதாயம் தரும் செல்வ விருத்தியும் உண்டாகும்.

அறந்தாங்கி சங்கர்