7-5-2019 அன்று அட்சய திருதியை


7-5-2019 அன்று அட்சய திருதியை
x
தினத்தந்தி 3 May 2019 7:19 AM IST (Updated: 3 May 2019 7:19 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டுக்கு 8 நாட்களே அருளும் அஷ்டலட்சுமி

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், அடுவச்சேரியில் அமைந்திருக்கிறது, வாசுதேவபுரம் மகாவிஷ்ணு கோவில். இங்கு அட்சய திருதியை தொடங்கி, 8 நாட்கள் லட்சுமி தேவி அஷ்டலட்சுமியாக, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தோற்றத்தில் காட்சியளித்து அருள்கிறார். சிறப்பு மிக்க இந்த ஆலயத்தைப் பற்றி பார்க்கலாம்.

தல வரலாறு

விஷ்ணுவின் ஆறாவது அவதாரமாக அமைந்தது, பரசுராமர் அவதாரம். பரசுராமர் ஒருமுறை, மகாலட்சுமியைத் தன் கைகளால் தழுவிய நிலையில் இருப்பது போன்ற மகாவிஷ்ணு சிலை ஒன்றை உருவாக்கினார். அதனை ஓரிடத்தில் நிறுவி, ஆலயம் அமைத்தார். பின்னர் அதை வேதியர்களிடம் ஒப்படைத்துச் சென்றார்.

பரசுராமரிடம் இருந்து அந்தக் கோவிலைப் பெற்றவர்கள், கோவிலுக்குத் தேவையான அனைத்துப் பணிகளையும் சிறப்பாகச் செய்து, லட்சுமி தேவியின் அருளைப் பெற்றுச் செல்வ நிலையில் உயர்ந்தனர். பிற்காலத்தில் அவர்களது மரபுவழியில் வந்தவர்கள், கோவில் பணிகளில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கி இருக்கத் தொடங்கினர். அதனால், அவர்களுக்கு லட்சுமியின் அருள் கிடைக்காமல் போனது. மேலும் அவர்கள் செல்வத்தை இழந்து, வறுமையில் வாடினர். கோவில் பணிகள் எதையும் செய்யாததாலும், கோவிலுக்கு வந்து வழிபடுபவர்கள் இல்லாமையாலும், அந்த இடம் மனித நடமாட்டமில்லாமல் மாறிப் போனது.

ஒரு கட்டத்தில் வழிபாடின்றி கிடந்த ஆலயத்தில் பூஜைகளைச் செய்ய, லட்சுமிதேவியே அங்கு வந்தாள். அங்கிருந்த சாலக்குடி ஆற்றில் நீரெடுத்து, கோவில் பணிகள் அனைத்தையும் செய்து வரத் தொடங்கினாள். அப்படி ஒருநாள் லட்சுமி தேவி நீர் எடுத்து வரும்போது, அவரைப் பார்த்து வில்வமங்கள சுவாமிகள் ஆச்சரியமடைந்தார்.

அவர், லட்சுமி தேவியிடம் “ஆற்றில் இருந்து நீரெடுத்துச் செல்வது ஏன்?” என்று கேட்டார்.

லட்சுமி தேவி, அங்கிருக்கும் மகாவிஷ்ணு கோவில் குறித்த செய்தியைத் தெரிவித்து, அங்கு கோவில் பணி செய்து வந்தவர்கள், அதனைத் தொடர்ந்து செய்யாமல் விட்டுவிட்ட தகவலையும் சொன்னாள்.

வில்வமங்கள சுவாமிகள், கோவிலைப் புறக்கணித்தவர்கள் திருந்திட, அவர்களுக்கு வாய்ப்பு வழங்கி, அவர்கள் மீது கருணைப் பார்வையைச் செலுத்தி, அவர்களை நல்வழிப்படுத்த லட்சுமிதேவியிடம் வேண்டினார். லட்சுமிதேவியும் அவர் வேண்டுகோளை ஏற்று, அட்சய திருதியை நாள் முதல் எட்டு நாட்களுக்கு, ஆலயத்தில் அஷ்டலட்சுமியாக இருந்து அருள் புரிவதாகவும், அவர்களது வறுமையைப் போக்கி அருளுவதாகவும் கூறினாள்.

உடனே வில்வமங்கள சுவாமிகள், கோவில் பணிகளைச் செய்து வந்தவர்களை அழைத்து வந்து, அக்கோவிலில் மீண்டும் வழிபாடுகளைச் செய்யும்படி அறிவுறுத்தினார். அவர்களும் சுவாமிகள் சொன்னபடி, கோவில் பணிகளை மீண்டும் செய்யத் தொடங்கினர்.

பின்னர் ஆலயத்தில் அட்சயதிருதியை தொடங்கி எட்டு நாட்களுக்கு லட்சுமி தேவி, அஷ்டலட்சுமியாக ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தோற்றத்தில் அவர்களுக்குக் காட்சிஅளித்தாள். அதனால் கோவில் பணிகள் செய்தவர்களும், கோவிலுக்குச் சென்று வழிபட்டவர்களும் மீண்டும் அனைத்துச் செல்வங்களையும் பெற்று, உயர்ந்த நிலையை அடைந்தனர் என்று இக்கோவிலின் தலவரலாறு சொல்லப்படுகிறது.

ஆலய அமைப்பு

கேரளக் கட்டுமான முறையில் அமைந்த இக்கோவிலின் கருவறையில் மகாவிஷ்ணு நான்கு கைகளுடன் அமர்ந்த நிலையில் இருக்கிறார். இவருக்குப் பின்புறத்தில் லட்சுமி தேவி சிற்பம் இருக்கிறது. அட்சய திருதியை நாளில் தொடங்கி 8 நாட்களுக்கு மட்டும் மகாவிஷ்ணுவின் இடதுபுறத்தில் லட்சுமிதேவி அமர்ந்த நிலையில் காட்சியளிப்பாள்.

இந்த ஆலயத்தில் மகாவிஷ்ணுவுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இங்கு வந்து வழிபடுபவர்களுக்குப் பயம் விலகி, நீண்ட ஆயுள் கிடைக்கும். மாங்கல்ய பலன், குழந்தைப்பேறு கிடைக்கும். விவசாயம் மற்றும் வணிகம் பெருகும் என்பதுடன் அனைத்துச் செல்வங்களும் கிடைக்கும் என்பது பொதுவான பலனாக இருக்கிறது.

இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள், பட்டுத்துணி, கண்ணாடி ஆகியவற்றை வாங்கிக் கோவில் சன்னிதியில் சமர்ப்பித்து வழிபடுகின்றனர். கோவில் அர்ச்சகர்கள், சமர்ப்பிக்கப்படும் பட்டுத்துணி மற்றும் கண்ணாடியை வழிபாட்டிற்குப் பின்பு, மீண்டும் பக்தர்களிடமேத் திருப்பித் தந்துவிடுகின்றனர். இந்தப் பொருட்களை வீட்டின் பூஜையறையில் வைத்தால், வீட்டில் செல்வம் பெருகும் எனும் நம்பிக்கை இருக்கிறது.

இதே போன்று, சுமங்கலிப் பெண்கள் அரிசி மற்றும் மஞ்சள் ஆகியவற்றைச் சமர்ப்பித்து வழிபடுகின்றனர். அரிசியை மகாவிஷ்ணுவுக்கும், மஞ்சளை லட்சுமி தேவிக்கும் சமர்ப்பிப்பதாகச் சொல்லி, அர்ச்சகர் சொல்லும் மந்திரங்களைச் சொல்லி வழிபடுகின்றனர். இதன் மூலம், வீட்டிலிருக்கும் அனைவருக்கும் நல்ல உடல் நலமும், பொருள் வளமும் கிடைக்கும் என்கின்றனர்.

இந்தத் திருத்தலத்தில் சித்திரை மாதம் அட்சய திருதியை நாளில் தொடங்கி 8 நாட்கள் லட்சுமிதேவி, அஷ்டலட்சுமியாக அருள்கிறார். அட்சய திருதியை நாள் அன்று வீரலட்சுமி, இரண்டாம் நாளில் கஜலட்சுமி, மூன்றாம் நாளில் சந்தான லட்சுமி, நான்காம் நாளில் விஜயலட்சுமி, ஐந்தாம் நாளில் தான்யலட்சுமி, ஆறாம் நாளில் ஆதிலட்சுமி, ஏழாம் நாளில் தனலட்சுமி, எட்டாம் நாளில் மகாலட்சுமியாக காட்சி தருகிறாள். இந்த எட்டு நாட்களிலும் தாம்பூல சமர்ப்பண வழிபாடு எனும் சிறப்பு வழிபாடு நடத்தப் பெறுகிறது.

அமைவிடம்

எர்ணாகுளத்தில் இருந்து ஆலுவா செல்லும் பேருந்தில் அத்தாணி என்னும் இடத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து மேற்கே 5 கிலோமீட்டர் தூரம் சென்றால் அடுவச்சேரியை அடையலாம்.

- தேனி மு. சுப்பிரமணி.

1 More update

Next Story