ஜோதிட சாஸ்திரம் வளர்பிறை சந்திரன், குரு மற்றும் சுக்கிரன் ஆகிய நன்மை தரும் சுபக்கிரகங்களுடன் தொடர்புடைய அமல யோகம் பற்றி குறிப்பிட்டுள்ளது.
ஒருவரது சுய ஜாதகத்தில் சந்திரன் நின்ற வீட்டிற்கு (அதாவது ராசி) பத்தாவது இடத்தில் குரு அல்லது சுக்ரன் அமர்ந்திருக்கும் நிலையில் அமல யோகம் ஏற்படுகிறது. அதேபோல லக்னத்துக்குப் பத்தாம் இடத்தில் அந்த சுபக் கிரகங்கள் இருந்தாலும் அமல யோகம் உருவாகும். இந்த யோகத்தில் பிறந்தவர்கள் அழகிய முகத்தோற்றமும், நல்ல உடல் அமைப்பும் கொண்டவர்கள். சிறந்த அறிவாற்றல் மற்றும் இரக்க குணம் கொண்டவர் களாக இருப்பதுடன், பெற்ற தாயின் மீது அதிக பாசம் உள்ளவர் களாகவும் இருப்பார்கள்.
கலைகளின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக, ஒரு சில கலைகளை சுயமாகவே கற்று அதில் தேர்ச்சியும் அடைவார்கள். ஜோதிடம் மற்றும் அமானுஷ்யம் சம்பந்தமான விஷயங்களில் ஈடுபாடு கொண்டு, அவற்றில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை பெரும் லாபம் ஈட்டக்கூடியதாக மாற்றும் திறன் இவர்களுக்கு இருக்கும். வெளியூர், வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு புதிய விஷயங்களை கற்றுக்கொள்வார்கள். மக்களிடம் மதிப்பு பெற்றவர்கள் என்பதால் அரசியலில் பெரும் பதவிகளை அடையும் அதிர்ஷ்டம் இவர்களுக்கு உண்டு. ஆன்மிக பணிகளில் விரும்பி ஈடுபடுவதுடன், பல கோவில்களை புனர் நிர்மாணம் செய்து, அவற்றிற்கு கும்பாபிஷேகம் செய்யும் பாக்கியம் இவர்களுக்கு கிடைக்கும்.