ஆன்மிகம்

பாவக்கறைகளைப் போக்கும் நோன்பு + "||" + Stains of sin will go Fasting

பாவக்கறைகளைப் போக்கும் நோன்பு

பாவக்கறைகளைப் போக்கும் நோன்பு
ரமலான் நோன்பு தொடங்கியதும் உற்சாகமும், மகிழ்ச்சியும் மனதில் பொங்குகிறது.
நம்மைப் புடம் போடும் ரமலானில், இறைவன் வாக்களித்துள்ள பெரும் பேறுகளைப் பெறுவதற்கு இன்னும் ஒரு வாய்ப்பை நம் அனைவருக்கும் அருளியுள்ளான்.

இந்த நோன்பை இறைவன் நமக்கு கட்டளையிட்டபடி கடைப்பிடித்து சொர்க்கம் செல்வதற்கும், நரகம் நம்மை விட்டு விலகிச்செல்வதற்கும், பாவக்கறைகள் நீங்கி, நல்லடியாளர்களாக மாறுவதற்கும் நாம் கடினமாக முயற்சி செய்ய வேண்டும்.

‘நோன்பு நோற்பதின் மூலம் நீங்கள் இறை அச்சம் உடையவர்களாக ஆகலாம்’ என்று இறைவன் தன் திருமறையில் கூறுவதிலிருந்து, நோன்பின் அடிப்படை இறை அச்சம் என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம். மற்ற மாதங்களைக் காட்டிலும் ரமலான் மாதத்தில் நோன்பாளிகளின் சிந்தனை வேறுபட்டு நிற்கிறது. ‘நான் நோன்பிருக்கிறேன்’ என்று நினைத்துக் கொண்டே ஒரு நோன்பாளி தன் பசி, தாகம், மன இச்சை மற்றும் பாவ காரியங்கள் அனைத்தையும் துறக்கிறார்.

அப்படிப்பட்ட ஒரு நல்லடியாரின் நோன்பிற்குப் பரிசாக இறைவன் அவரின் முந்தைய பாவங்களை மன்னிக்கிறான். அதனால் அவர் பாவக்கறைகள் நீங்கி, பரிசுத்தமானவராக மாறி விடுகிறார். எப்பேர்ப்பட்ட பேறு இது.

தான் படைத்த உயிர்களிடத்து அளவிலா அன்பும், கருணையும் கொண்ட இறைவன் தன் அடியானுக்கு சிறு முள் தைத்தாலும் அதற்குப் பகரமாக ஒரு பாவத்தை நீக்கக் கூடியவன். அதனாலேயே, சிரமங்களைத் தாங்கி, பசி, தாகத்தைப் பொறுத்து, படைத்தவனை நினைவு கூர்ந்து, இரவும், பகலும் நின்றும், சிரம் பணிந்தும் வணங்கக் கூடிய நோன்பாளிகளின் முந்தைய பாவங்கள் அனைத்தையும் (பெரும் பாவங்களைத் தவிர) மன்னிக்கக் கூடியவனாகவும் இருக்கிறான்.

“ஜிப்ரீல் (அலை) என்னிடம் வந்து, ‘யார் ரமலானை அடைந்தும் பாவ மன்னிப்பு பெறவில்லையோ அவர் நாசமடையட்டும்’ என்று கூறினார்கள். அதற்கு நான் ஆமீன் என்று கூறினேன்’’ என்று நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.

நோன்பு துறக்கக்கூடிய நேரத்தில் நாம் கோரும் பாவமன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்படும். இன்னும் லைலத்துல் கத்ர் இரவிலும் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுகிறது. வீண் வேலைகளில் ஈடுபட்டு நேரத்தை விரயம் செய்துவிடாமல் ரமலானில், நமக்கு இறைவன் அளித்துள்ள பொன்னான இந்த இரு சந்தர்ப்பங்களையும், நம் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இன்னும் லைலத்துல் கத்ர் இரவில் “யா அல்லாஹ், நீ மன்னிக்கக்கூடியவன், மன்னிப்பை விரும்பு பவன், என்னை நீ மன்னித்து விடு’’ என்று நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களுக்கு கற்றுத்தந்த பிரார்த்தனையை அதிகமாகக் கேட்க வேண்டும்.

நோன்பாளிகளுக்காக, அவர்கள் நோன்பு துறக்கும் வரை மலக்குகள் பாவமன்னிப்பு கோருகிறார்கள் என்பதுவும் நோன்பின் சிறப்பாகும். ஒரு அடியான் தன்னிடம் மன்னிப்பு கோருவதை அல்லாஹ் விரும்பு கிறான். பாலை நிலத்தில், சுடும் வெயிலில் காணாமல் போன தன்னுடைய ஒட்டகம் கிடைத்தவுடன் ஒருவர் அடையும் மகிழ்ச்சியை விட, பன் மடங்கு மகிழ்ச்சியை, ஒரு அடியான் தன்னிடம் பாவ மன்னிப்பைக் கோரும் பொழுது இறைவன் அடைகிறான்.

உலகின் அருட்கொடையாம் மாநபி (ஸல்) அவர்கள் ஒரு நாளில் எழுபதிற்கும் அதிகமான தடவைகள் பாவ மன்னிப்பு கோருபவர்களாக இருந்துள்ளார்கள் என்றால், நாம் எத்துணை முறைகள் இறைவனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்? நாம் ஒவ்வொருவரும் நம் பாவங்களுக்குப் பரிகாரமாக நோன்பினை முழுமையாக நோற்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

“நோன்பு எனக்குரியது, அதற்குரிய கூலியை நானே வழங்குவேன்’’ என்பது அல்லாஹ்வின் வாக்கு. அப்படிப்பட்ட கூலியைப் பெற்றுத்தரும் ரமலானை அடைந்த நாம் அனைவரும் பாக்கியசாலிகள் தானே.

நோன்பும், திருமறையும் மறுமை நாளில் நமக்காக இறைவனிடம் சிபாரிசு செய்யும். “உண்ணுவதில் இருந்தும், தண்ணீர் குடிப்பதில் இருந்தும் இன்னும் மன இச்சைகளில் இருந்தும் இந்த அடியானைத் தடுத்து வைத்திருந்தேன். எனவே இந்த அடியானுக்கு என்னுடைய சிபாரிசினை ஏற்றுக்கொள்வாயாக’’ என்று நோன்பு கூறுமாம். “திரு மறையை ஓதுவதற்காக இந்த அடியானை இரவில் உறங்குவதை விட்டும் தடுத்து வைத்திருந்தேன். எனவே இந்த அடியானுக்கு என்னுடைய சிபாரிசினை ஏற்றுக்கொள்வாயாக’’ என்று திருக்குர்ஆன் கூறுமாம்.

நோன்பு பாவங்களுக்குப் பரிகாரமாக அமைகிறது. ஒருவர் பெரும் பாவங்களில் இருந்து விலகியிருக்கும் பட்சத்தில், அவர் தன்னுடைய இரு தொழுகைகளுக்கு இடையில் செய்த பாவங்கள், இரு ஜூம் ஆ தொழுகைகளுக்கு இடையில் செய்த பாவங்கள் மற்றும் இரு ரமலான் மாதங் களுக்கு இடையில் செய்த பாவங்கள் அனைத்தும் (அந்த அமல்களுக்குப் பகரமாக) இறைவனால் மன்னிக்கப்படுகின்றன என்று நபி (ஸல்) அவர்கள் இயம்பியுள்ளார்கள்.

எனவே ஒருவர் இறை அச்சத்துடனும், மறுமையில் நற்கூலியைப் பெறும் எண்ணத்துடனும் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பாராயின் அவர் முன்னர் செய்த பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுகிறான். இது போன்று பல நோன்புக்காலங்களை எல்லாம் வல்ல இறைவன் நமக்கு அருளி, அவற்றை முழுமையாக நிறைவேற்றிட நல்ல ஆரோக்கியத்தையும் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக, ஆமீன்.

ம.அஹமது நவ்ரோஸ் பேகம், சென்னை.