வழக்குகளை தீர்க்கும் சந்திரமவுலீஸ்வரர்


வழக்குகளை தீர்க்கும் சந்திரமவுலீஸ்வரர்
x
தினத்தந்தி 21 May 2019 9:49 AM GMT (Updated: 21 May 2019 9:49 AM GMT)

வைணவத் திருத்தலமாகவும், அரங்கநாதப் பெருமாள் அருள்பாலிக்கும் இடமாகவும் விளங்கும் ஸ்ரீரங்கத்தில், ஒரு சிவாலயமும் இருக்கிறது.

ஸ்ரீரங்கம் மேலவாசல் அருகே சந்தன மேடை என்று ஓர் இடம் உள்ளது. அங்கே நெடிந்துயர்ந்து, பரந்து விரிந்திருந்த அரசு மற்றும் வேம்பு மரங்கள் இருக்கின்றன. தல விருட்சங்களாய் இணைந்து தழைத்தோங்கி இருந்த அந்த மரத்தின் அடியில் விளக்கேற்றி வணங்கி வந்தனர் பக்தர்கள்.

பரம்பரை அறங்காவலரான அந்த நிர்வாகியும் அந்த மரத்தின் அடியில் தீபமேற்றி தினசரி வணங்கி வந்தார். அந்த இடத்தில் நிலவிய அசாதாரண சூழலையும், மெல்ல நீரோட்டமாய் வந்த இறை உணர்வையும் உணர்ந்த அந்த நிர்வாகி மனதில் ஒரு எண்ணம் தோன்றியது.

‘இந்த இடத்தில் ஓர் ஆலயம் கட்டினால் என்ன?’

ஆலயம் உருவாகத் தொடங்கியது. அந்த ஆலயமே ஸ்ரீரங்கம் மேலவாசல் அருகே சந்தன மேடை பகுதியில் உள்ள சந்திரமவுலீஸ்வரர் கோவில். இறைவியின் பெயர் ‘மங்கள கவுரி அம்பிகை.’

ஆலயம் கீழ் திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் சிறிய ராஜ கோபுரம். உள்ளே நுழைந்ததும் பிரகாரம். எதிரே விநாயகரும், நந்தியும் இருக்க அர்த்த மண்டபத்தை அடுத்து கருவறை உள்ளது. கருவறைக்குள் இறைவன் சந்திரமவுலீஸ்வரர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

பொதுவாக சிவாலயங்களில் இறைவிக்கு தனி சன்னிதி அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இங்கு இறைவனும், இறைவியும் ஒரே கருவறைக்குள் அருள்பாலிப்பது சிறப்பான அம்சமாகும். இறைவனின் வலதுபுறத்தில் இறைவி நின்ற நிலையில் வீற்றிருக்கிறாள். அன்னைக்கு நான்கு கரங்கள். மேல் இரண்டு கரங்களில் பத்மத்தை சுமந்து, கீழ் இரு கரங்களில் அபய ஹஸ்த, வரத ஹஸ்த முத்திரைகளுடன் அன்னை அருள்பாலிக்கிறாள். பெரும்பாலான ஆலயங்களில் இறைவனுக்கு இடதுபுறம் இருக்கும் அன்னை, இங்கு வலதுபுறத்தில் நின்று அருள்பாலிப்பதும் கூட வேறு எங்கும் காணக்கிடைக்காத அம்சம் என்கிறார்கள்.

ஆடி மற்றும் தை மாத வெள்ளிக்கிழமைகளில் இத்தல இறைவனுக்கும், இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஐப்பசி மாத பவுர்ணமியில் இறைவனுக்கு பல நூறு பக்தர்கள் சூழ அன்னாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.

மாதப் பிரதோஷங்கள் இங்கு வெகு விமரிசையாக நடைபெறும் ஒன்று. அன்றைய தினம் பிரதோஷ நாயகனின் உற்சவ விக்கிரகம், கோவிலின் உட்பிரகாரத்தில் உலா வருவதுண்டு. மகா சிவராத்திரியின் போது ஒரு வார காலம் இறைவன், இறைவிக்கு ஒரு கோடி அர்ச்சனை நடைபெறும். இந்த அர்ச்சனை அஷ்ட பத்மங்களான வில்வம், துளசி, விபூதி பச்சை, நாயுருவி, விளா இலை, வன்னி, நெல்லி, அருகம்புல் ஆகியவைகளைக் கொண்டு நடைபெறுகிறது.

நீண்டகாலமாக இழுத்தடித்துக் கொண்டிருக்கும் பஞ்சாயத்துக்கள், நீதிமன்ற வழக்குகள் போன்றவை வெற்றிபெற இத்தல இறைவன் அருள்புரிவதாக, பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

அர்த்த மண்டப நுழைவுவாசலின் வலதுபுறம் வரசித்தி விநாயகர் சன்னிதியும், இடதுபுறம் பாலசுப்ரமணிய சுவாமி சன்னிதியும் உள்ளன.

திருச்சுற்றில் தென் திசையில் வரசித்தி ஆஞ்சநேயரின் தனி ஆலயம் உள்ளது. ஆலயத்தில் சுற்றித் திரிந்த குரங்கு ஒன்று இங்கேயே முக்தி அடைந்ததால், அதன் நினைவாக இங்கு அனுமன் ஆலயம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இங்கு அனுமன் ஜெயந்தி வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

மேற்கில் தல விருட்சமாக நூறாண்டுகளைக் கடந்த அரச மரமும், வேப்ப மரமும் உள்ளன. அதன் அடியில் நாகம்மா, கஜலட்சுமி திருமேனிகள் இருக்கின்றன. மேலும் ஏராளமான நாகர் சிலைகளும் தல விருட்சங்களை சுற்றி அமைக்கப்பட்டுள்ளன. நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து நாகம்மாளுக்கும், நாகர்களுக்கும் மஞ்சள் பூசி அபிஷேகம் செய்கின்றனர். இதனால் அவர்களது தோஷம் விலகுவதாக நம்பிக்கை. நாகபஞ்சமி அன்று இங்கு விசேஷ அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன.

பிரகாரத்தின் வடதிசையில் சொர்ண ஆகார்ஷ்ண பைரவர் சன்னிதியும், சண்டிகேசுவர் சன்னிதியும் உள்ளன. தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு சிறப்பான அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. பில்லி, சூனியம், ஏவல் போன்ற பாதிப்புகளுக்கு உள்ளானவர்கள் பைரவருக்கு ஆராதனை செய்து வணங்கினால், அந்த பாதிப்புகளில் இருந்து விடுபடலாம் என்கிறார்கள். காணாமல் போன பொருள் திரும்பப் பெறவும் பக்தர்கள் பைரவரை வேண்டிக்கொள்கிறார்கள்.

ஆலய பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர். கிரகப் பெயர்ச்சி நாட்களில் இந்த நாயகர்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன. தினசரி இரண்டு கால ஆராதனை நடைபெறும் இந்த ஆலயம் நான்கு புறமும் மதிற்சுவர்களால் சூழப்பட்டுள்ளது.

தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

திருவரங்க பெருமானை நாம் தரிசிக்க செல்லும்போது, அருகே இருக்கும் நினைத்ததை நினைத்தபடி முடித்து தரும் இறைவன் சந்திரமவுலீஸ்வரரையும், இறைவி மங்கள கவுரியையும் ஒரு முறை தரிசித்து வரலாமே.

அமைவிடம்

திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தில் இருந்து 1½ கி.மீ. தொலைவில், மேலூர் செல்லும் சாலை அருகே மேலவாசல் அருகில் சந்தன மேடை பகுதியில் உள்ளது இந்த ஆலயம்.

- மல்லிகா சுந்தர்


Next Story