முக்தியை வழங்கும் கடுத்துருத்தி மகாதேவர்


முக்தியை வழங்கும் கடுத்துருத்தி மகாதேவர்
x
தினத்தந்தி 11 Jun 2019 12:13 PM GMT (Updated: 2019-06-11T17:43:14+05:30)

கரன் எனும் அசுரனுக்கு மறுபிறவி இல்லாமல், முக்தி தந்த கோவிலாகக் கருதப்படும் மகாதேவர் கோவில், கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், கடுத்துருத்தி என்னும் இடத்தில் அமைந்திருக்கிறது.

சிவ பக்தனான கரன் என்ற அசுரன், முக்தி வேண்டி கடுந்தவம் இருந்து வந்தான். அவனது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், அவனிடம் மூன்று சிவலிங்கங்களைக் கொடுத்து, அவற்றை மூன்று இடங்களில் நிறுவி வழிபட்டால், முக்தி கிடைக்கும் என்று கூறினார்.

அசுரனும் ஒரு லிங்கத்தை வலது கையிலும், மற்றொரு லிங்கத்தை இடது கையிலும், மூன்றாவது லிங்கத்தை வாயில் வைத்தும் எடுத்துச் சென்றான்.

சிவபெருமான், புலிக்கால் முனிவரான வியாக்ரபாதரை அழைத்து, கரனை பின் தொடர்ந்து செல்லும்படி அனுப்பி வைத்தார். அவரும் அசுரனைப் பின் தொடர்ந்து சென்றார். அசுரன் பயணக் களைப்பில் சிறிது நேரம் ஓய்வு எடுப்பதற்காக, தன் வலது கையில் இருந்த சிவலிங்கத்தை ஓரிடத்தில் வைத்தான். சிறிது நேரத்திற்குப் பின்பு, கீழே வைத்த சிவலிங்கத்தை எடுக்க முயன்றான். ஆனால் அதை அவனால் எடுக்க முடியாமல் போனது.

அப்போது அங்கு வந்த வியாக்ரபாதரிடம், அந்தச் சிவலிங்கத்தைப் பூஜை செய்து வழிபடும்படி வேண்டிக் கொண்டான். அதை ஏற்ற வியாக்ரபாதரும் அவ்விடத்திலேயே தங்கி, அந்தச் சிவலிங்கத்திற்கு நீண்ட காலம் பூஜை செய்து வழிபட்டு வந்தார். அந்த இடத்தில் அமைந்த கோவில் வைக்கம் மகாதேவர் கோவிலானது.

அசுரன் மீதமிருந்த இரண்டு சிவலிங்கங்களுடன் சென்ற போது, இடக்கையில் கொண்டு சென்ற சிவலிங்கத்தை ஏற்றுமானூர் என்ற இடத்தில் நிறுவச் செய்தான். அந்தக் கோவில் ஏற்றுமானூர் மகாதேவர் கோவில் ஆனது. பின்னர் அங்கிருந்து சென்ற அசுரன், வாயில் எடுத்துச் சென்ற சிவலிங்கத்தை ஓரிடத்தில் கிழக்கு நோக்கி நிறுவி வழிபட்டு முக்தியடைந்தான்.

அசுரன் வாயில் கடித்து இருத்திக் (அமர்த்தி) கொண்டு சென்ற சிவலிங்கம் நிறுவப்பட்ட இடம் என்பதைக் குறிக்கும் வகையில், அவ்விடத்திற்குக் ‘கடித்துருத்தி’ என்ற பெயர் ஏற்பட்டது. அங்கிருக்கும் இறைவன், ‘கடுத்துருத்தி மகாதேவர்’ என்று அழைக்கப்பட்டார் என்று இந்த ஆலயம் அமைந்த வரலாறு பற்றி, பார்க்கவ புராணம் தெரிவிக்கிறது.

ஆலய அமைப்பு

மலைக்குன்று ஒன்றின் மீது அமைந்திருக்கும் இந்த ஆலய கருவறையில், மூன்று அங்குலம் அளவு கொண்ட மிகச் சிறிய சிவலிங்கம் கிழக்கு நோக்கிய நிலையில் இருக்கிறது. அசுரன் கரன் கொண்டு வந்த மூன்று சிவலிங்கங்களுள் இக்கோவிலில் நிறுவப்பட்டிருக்கும் சிவலிங்கமே மிகச் சிறியது. இருப்பினும், இங்கிருக்கும் இறைவன் இறைவியுடன் இணைந்து அனுக்கிரக மூர்த்தியாகக் காட்சியளிக்கிறார்.

கோவிலின் உள் மண்டபக் கூரையில், சிவ பெருமானிடம் பாசுபத அஸ்திரம் பெறுவதற்காக அர்ச்சுனன் செய்த தவமும், அவனைச் சோதிக்க இறைவன் வேடுவன் உருவில் வந்து அவனுடன் போர் செய்து, பின்னர் அவனுக்குப் பாசுபத அஸ்திரம் வழங்கிய கதையைச் சொல்லும் மரச்சிற்பங்கள் அழகாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன. கோவில் வளாகத்தில் கணபதி, தர்மசாஸ்தா, துர்க்கை ஆகியோருக்கு தனிச் சன்னிதிகள் உள்ளன.

கடுத்துருத்தி மகாதேவர் கோவில் வளாகத்தின் தெற்குப் பகுதியில், ஏற்றுமானூர் மகாதேவர் சன்னிதியும், வடக்குப் பகுதியில் வைக்கம் மகாதேவர் சன்னிதியும் இருக்கின்றன. இந்த ஆலயத்தில் இந்த இரு சன்னிதிகள் அமைந்ததற்கும் ஒரு கதை இருக்கிறது.

வடக்கன்கூர் ராஜா தினமும் குதிரையில் பயணித்து வைக்கம் மகாதேவர் கோவில், ஏற்று மானூர் மகாதேவர் கோவில் மற்றும் கடுத்துருத்தி மகாதேவர் கோவில் என்று மூன்று ஆலயங்களிலும் வழிபாடு செய்து வந்தார். வயதான காலத்தில், அவரால் மூன்று கோவில்களுக்கும் சென்று வழிபட முடியாமல் போனது. எனவே அவர், கடுத்துருத்தி கோவிலின் வடக்குப் பகுதியில் வைக்கம் மகாதேவரைக் கிழக்கு நோக்கியும், தெற்குப் பகுதியில் ஏற்றுமானூர் மகாதேவரை மேற்கு நோக்கியும் நிறுவி, ஒரே தலத்தில் வழிபாடு செய்தார். மூன்று கோவில்களுக்கும் செல்ல முடியாதவர்கள், கடுத்துருத்தி மகாதேவர் கோவிலுக்குச் சென்று, மூன்று சிவபெருமானையும் வழிபாடு செய்து, மூன்று தலங்களுக்கும் சென்று வந்த பலன்களை அடையலாம்.

இக்கோவிலில் சிவபெருமானுக்குரிய பிரதோஷம் உள்ளிட்ட அனைத்துச் சிறப்பு நாட்களிலும், சிறப்பான வழிபாடுகள் நடைபெறுகின்றன. இறைவன், இறைவியோடு சேர்ந்திருப்பதால் அம்மனுக்குரிய சிறப்பு வழிபாடுகளும் இங்கு பிரசித்தம். மார்கழி மாதம் திருவோண நட்சத்திர நாளில், அருகிலுள்ள பாலிச்சிறை ஆற்றில் இறைவனுக்கு ‘ஆறாட்டு’ நடத்தி ஆண்டு விழாவாக 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. மாசி மாதம் வரும் மகா சிவராத்திரி நாள், மாசி மகம், புரட்டாசி மாதம் முதல் நாள் கோவில் நிறுவப்பட்ட நாள் ஆகியவையும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.

கடுத்துருத்தி மகாதேவர் கோவிலில் சிவபெருமான், இறைவியுடன் சேர்ந்து அனுக்கிரக மூர்த்தியாக இருப்பதால், திருமணத்தடை நீங்கவும், குழந்தைப்பேறு கிடைக்கவும் இங்கு வழிபடலாம். அம்மனையும், சுவாமியையும் வழிபட்டால் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துச் செல்வங்களும், வளங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

கேரள மாநிலம் கோட்டயம் நகரில் இருந்து வடக்கே 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது, கடுத்துருத்தி மகாதேவர் கோவில். வைக்கம் மகாதேவர் ஆலயத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும், ஏற்றுமானூர் மகாதேவர் கோவிலில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஆலயம் உள்ளது. இத்தலத்திற்குச் செல்ல கோட்டயம், வைக்கம், ஏற்றுமானூர் ஆகிய மூன்று ஊர்களில் இருந்தும் ஏராளமான பேருந்து வசதிகள் இருக்கின்றன.

தேனி மு.சுப்பிரமணி

Next Story