முரண்பாடுகளும், உடன்பாடுகளும்


முரண்பாடுகளும், உடன்பாடுகளும்
x
தினத்தந்தி 13 Jun 2019 9:45 PM GMT (Updated: 13 Jun 2019 10:19 AM GMT)

மனிதர்கள் குடும்பமாக, நண்பர்களாக, சமுதாயமாக சேர்ந்து வாழும் போது‍ பல நேரங்களில், மற்றவர்களின் கருத்தோடு நாம் முரண்படுகிறோம். அவை சரியான முறையில் உடனுக்குடன் தீர்க்கப்படாதபோது, அவை பெரிய பகையாக மாறி, உறவுகளையே சிதைத்தும் விடுகின்றது.

முரண்களை எப்படி கையாள்வது என்பதை பைபிளிலிருந்து சில நிகழ்வுகள் மூலமாக பார்க்கலாம்.

செல்வத்தினால் வரும் முரண்:

ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்தில் வாழ்ந்து வந்த ஆபிரகாம் கர்த்தரின் அழைப்பிற்கேற்ப தன்னுடைய நாட்டை விட்டு வேறொரு தேசத்திற்கு சென்றபோது, சகோதரரின் மகனாகிய லோத் என்பவரும் இணைந்தே பயணிக்கிறார்.

காலங்கள் செல்கின்றன. இருவரிடமும் ஏராளமான ஆடுகளும், ஒட்டகங்களும் இருந்ததால் அவர்களால் ஒரே இடத்தில் தங்க முடியவில்லை. ஒரு கட்டத்தில், இந்த இருவரின் மேய்ப்பர்களுக்கும் வாக்குவாதம் உண்டாயிற்று.

இதை கேள்விப்பட்ட ஆபிரகாம், லோத்தை அழைத்து, “எனக்கும் உனக்கும், என் மேய்ப்பருக்கும், உன் மேய்ப்பருக்கும் வாக்குவாதம் வேண்டாம்; நாம் சகோதரர்கள். இந்தத் தேசமெல்லாம் உனக்கு முன் இருக்கிறது அல்லவா? நீ என்னைவிட்டுப் பிரிந்துபோகலாம். நீ இடதுபுறம் போனால், நான் வலதுபுறம் போகிறேன்; நீ வலதுபுறம் போனால், நான் இடதுபுறம் போகிறேன்” என்றுச் சொல்லி விட்டுக்கொடுக் கிறார்.

அதிக செல்வத்தினால் உறவுகளுக்குள் சிக்கல் வரும்போது அதற்கான முக்கியத் தீர்வு விட்டுக்கொடுத்தல்.

அதிகாரத்தினால் வரும் முரண்:

இயேசு உயிர்த்தெழுந்து, பரலோகத்திற்கு சென்ற பிறகு, சீடர்கள் இயேசுவைக் குறித்து பலருக்குப் பிரசங்கித்தார்கள். கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே சென்றது.

அதோடு கூட, அவர்கள் யாவரும் தங்களுடைய செல்வங்களை விற்று பொதுவாக வைத்து, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக பகிர்ந்து கொடுத்தார்கள். ஆனால் சில நாட்களிலேயே விதவைகள் சரிவர கவனிக்கப்படவில்லை என்னும் முறுமுறுப்பு வர ஆரம்பித்தது.

விஷயம் இயேசுவின் சீடர்களிடத்தில் போனது. அந்த பன்னிரு சீடர்களும் மக்களை அழைத்து நாங்கள் இயேசுவைப்பற்றிய வசனங்களை போதியாமல், பந்தி விசாரணை செய்வது நல்லதல்ல. ஆகையால், பரிசுத்தமும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சிப் பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள். அவர்கள் பந்திவிசாரிப்பு வேலையை செய்யட்டும். இயேசுவுடனிருந்த சீடர்களாகிய நாங்கள் இயேசுவைக் குறித்துப் போதிப்பதையும், ஜெபிப்பதையும் செய்கின்றோம் என்றனர். அப்படியே ஏழு மூப்பர்கள் தேர்வுச் செய்யப்பட்டு முறுமுறுப்புகள் குறைக்கபட்டது.

இங்கே மக்களின் முறுமுறுப்புக்கு காரணமான முரண் அதிகாரம் ஓரிடத்தில் மையப்பட்டது. அதற்கான தீர்வு அதிகாரத்தைப் பகிர்தல்.

உழைப்பினால் வரும் முரண்:

இயேசு சொன்ன உவமைகளில் முக்கியமான ஒரு உவமை ஒரு திராட்சைத் தோட்டக்காரர் பற்றியது.

ஒரு திராட்சைத் தோட்டக்காரர் தன்னுடைய தோட்டத்தில் வேலை செய்ய ஆட்களைத் தேடி அதிகாலையில் செல் கிறார். எதிர்படுகிற தொழிலாளிகளிடம் தன்னுடைய தோட்டத்தில் வேலை செய்ய வரும்படியும், அதற்கு ஒரு பணம் கூலியாக தரப்படுமென்றும் சொல்லி அழைக்கிறார். அவர்களும் அதற்கு உடன்பட்டு வேலைச் செய்கிறார்கள்.

இன்னும் அதிகமாய் ஆட்கள் தேவைப்படவே, அந்த தோட்டக்காரர் ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கு ஒரு முறையென மாலை வரை ஆட்களை அழைத்துக் கொண்டேயிருக்கிறார்.

மாலையில் ஊதியம் கொடுக்கும் நேரம் வந்த போது கடைசியாக வந்த வேலைக்காரர்களுக்கு முதலாவது ஒரு பணம் ஊதியம் கொடுக்கிறார். அதிகாலையிலிருந்து வேலைச் செய்த மற்ற வேலைக்காரர்களுக்கு, தங்களுக்கு அதிக ஊதியம் கிடைக்குமோ என்னும் எண்ணம் உண்டாகிறது. ஆனால் எஜமானனோ அவர்களுக்கும் தான் சொன்னபடியே ஒரு பணம் மட்டுமே கொடுக்கிறார். அதனை அந்த வேலைக்காரர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

எஜமானன் அதில் ஒருவனைப் பார்த்து, “சிநேகிதனே, நான் உனக்கு அநியாயஞ்செய்யவில்லை; நீ என்னிடத்தில் ஒரு பணத்துக்கு சம்மதிக்கவில்லையா? உன்னுடையதை நீ வாங்கிக்கொண்டு போ, உனக்குக் கொடுத்தது போலப் பிந்தி வந்தவனாகிய இவனுக்கும் கொடுப்பது என்னுடைய இஷ்டம்” என்றார்.

பல நேரங்களில் ஏதோவொரு சூழ்நிலை காரணமாக நம்மைவிட பின் தங்கிய நிலையில் இருப்பவர்கள் நமக்கு சமமாக வரும்போது மனம் ஏற்றுக்கொள்ள தயங்குகிறது. அதையும் மீறி நாம் அவர்களை ஏற்றுக்கொள்ளும் போது, முரண்கள் களையப்படுகிறது.

கடைசியாக ஒரு முரண்: ஒருநாள் விபசாரத்தில் கையும் களவுமாக பிடிக்கப்பட்ட ஒரு பெண்ணை இயேசுவிடம் கொண்டு வந்து, இவளை மோசேயின் கட்டளைப்படி கல்லெறிந்துக் கொல்லலாமெனயிருக்கிறோம், நீர் என்ன சொல்லுகிறீரெனக் கேட்டனர்.

இயேசு அவர்களைப் பார்த்து, “உங்களில் பாவமில்லாதவன் முதலாவது கல்லை எறியட்டும்” என்கிறார். உடனே எல்லாரும் அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டார்கள். இயேசு மாத்திரம் இருக்கிறார். அவர் அவளைப்பார்த்து, நானும் உன்னை தண்டிக்க விரும்பவில்லை, இனி பாவம் செய்யாதேயென சொல்லியனுப்புகிறார்.

ஆம், கடவுள் விரும்புகிறதற்கும், நாம் செய்வதற்கும் நடுவே பல முரண்களிருந்தாலும் அவர் தீர்வாக நமக்கு தருவது, மன்னிப்பு. அந்த மன்னிப்பையே நாமும் விட்டுக்கொடுப்பதின் மூலமும், பகிர்வதின் மூலமும், ஏற்றுக்கொள்வதின் மூலமும் மற்றவர்களுக்கும் கொடுப்போம்.

அன்பர்புரம் சகோ. ஹெசட் காட்சன்.

Next Story