ஜப்பான் நாட்டில் சரஸ்வதி வழிபாடு


ஜப்பான் நாட்டில் சரஸ்வதி வழிபாடு
x
தினத்தந்தி 18 Jun 2019 10:50 AM GMT (Updated: 2019-06-18T16:20:02+05:30)

நமது மகான்கள் அளித்த ஆன்மிக உபதேசங்கள், கடல் கடந்து மற்ற நாட்டு மக்களையும் கவர்ந்திருக்கின்றன.

இந்தியாவின் ஆன்மிக கருத்துக்கள் மற்ற நாடுகள் பின்பற்றும்போது, நமது வழிபாட்டு முறைகள் மற்றும் சடங்குகள் போன்றவற்றையும் நடைமுறைப்படுத்தி இருக்கின்றனர். நமது கல்விக் கடவுளான சரஸ்வதி, ஜப்பானிய கல்விக் கடவுளாகவும் வழிபட்டு வரப்படுவது பற்றிய செய்திகளை இங்கு பார்க்கலாம்.

சரஸ்வதியை ஜப்பானில் ‘பென்சைட்டென்’ என்று குறிப்பிடுகிறார்கள். அங்கு வணங்கப்படும் ஏழு அதிர்ஷ்ட தேவதைகளில் இவரும் ஒருவர். இந்தியாவில் எழுதப்பட்ட பவுத்த நூலான ‘சுவர்ண பிரபாச சூத்திரம்’ மூலம் ஆறாம் நூற்றாண்டுக்கும், எட்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் சரஸ்வதி வழிபாடு ஜப்பானில் பரவியதாக தகவல்கள் உள்ளன. அந்த சூத்திரத்தில் சரஸ்வதி பற்றி விஷேசமாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஜப்பான் நாட்டு வரலாறு மற்றும் புராணங் களின்படி, சூரிய குலத்தில் தோன்றிய ‘யமாடோ’ வம்ச சக்கரவர்த்திகள் ஜப்பானை ஒரே நாடாக ஆட்சி புரிந்திருக்கின்றனர். அவர்கள் காலத்தில்தான், முன்னோர்கள் மற்றும் இயற்கை வழிபாடுகள், சடங்குகள் அதிகம் இருக்கும் ஷிண்டோ மதமும், புத்த மதமும் பரவின. இந்த இரண்டு மதங்கள் இந்தியாவில் இருந்து வந்த துறவிகளால், ஜப்பான் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டன என்று அவர்கள் நாட்டு ஆன்மிக இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன.

ரிக் வேதத்தில் சரஸ்வதி, விரித்திரன் என்ற பாம்பு வடிவ அசுரனை அழித்த தகவல் உள்ளது. அதேபோல் ஜப்பானில் பாம்புகள் மற்றும் டிராகன் ஆகியவற்றுடன் தொடர்புடையவராக சரஸ்வதி கருதப்படுகிறார். டோக்கியோ நகரில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எனோஷிமா தீவு உட்பட, ஜப்பான் முழுக்க நூற்றுக்கணக்கான சரஸ்வதி கோவில்கள் உள்ளன. டோக்கியோ நகர கோவிலில் உள்ள சரஸ்வதி, ஜப்பானிய உடை அணிந்து, தாமரைப்பூவின் மீது அமர்ந்திருப்பதுடன், நான்கு கரங்களுடன், கையில் ஒரு இசைக்கருவியும் வைத்துக் கொண்டிருக்கிறாள். எனோஷிமா தீவில் உள்ள கோவில்களை பற்றிய நூலில், ‘அநவதப்தம்’ என்ற ஏரியில் உள்ள டிராகன் அரசனின் மூன்றாவது மகள் சரஸ்வதி என்றும் சொல்லப்பட்டுள்ளது.

ஜப்பானிய மொழியில் ‘பென்தென்’ என்பது பிரம்மாவைக் குறிக்கும். ‘பென்சைட்டென்’ என்ற சரஸ்வதி சக்தி பெற்ற தெய்வமாகவும், ஜப்பானை காக்கும் தெய்வமாகவும் கருதப்படுகிறாள். அதற்கு காரணம், ஜப்பான் நீரால் சூழப்பட்ட தீவு நாடாக உள்ளது. அதைக் காப்பதற்கு நீரோடு தொடர்பு கொண்ட சரஸ்வதி துணை நிற்பதாக அவர்களது நம்பிக்கை. மேலும், இனிமையான குரல், அதிர்ஷ்டம், அழகு, மகிழ்ச்சி, ஞானம், சக்தி ஆகியவற்றை அருளும் தெய்வமாகவும் அவள் போற்றப்படுகிறாள்.

கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புனித நதிகள் நமது நாட்டில் மதிக்கப் படுவதைப்போல, ஜப்பானிலும் நீர்நிலைகள், குளங்கள் ஆகியவற்றை சரஸ்வதியாக பாவித்து வணங்குகிறார்கள். ஜப்பான் மீனவர்கள், கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும்போது, ‘பென்சைட்ெடனை’ வணங்கிய பின்னரே புறப்படுகிறார்கள். அங்கு உள்ள பிள்ளையார் ‘ஷோட்டன்’ எனவும், கருடன் ‘கருரா’ எனவும் அழைக்கப்படுகிறார்கள். மேலும், வாயு, வருணன் உள்ளிட்ட தேவர்களுக்கும் ஜப்பானில் சிலைகள் உள்ளன.

கல்விக் கடவுளான சரஸ்வதி, புத்த மதத்தில் ஞானம் அருளும் பெண் தெய்வமாக வழிபடப் படுகிறாள். இந்தியாவில் இருந்து ஜப்பானுக்கு கொண்டு செல்லப்பட்ட சரஸ்வதி வழிபாட்டை இன்றும் அங்கு உள்ள மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். நமது நாட்டின் சரஸ்வதி கையில் வீணை வைத்திருப்பதை போலவே, ஜப்பானிய பென்சைட்டெனும், தந்திகள் கொண்ட இசைக்கருவியை வைத்திருக்கிறாள். அந்த நாட்டு மக்கள் அவளது பிள்ளைகள் என்ற நிலையில், கல்வி, கலைகளில் சிறக்கவும், முக்கிய தேர்வுகளில் வெற்றி பெறவும் சரஸ்வதி கோவிலுக்கு சென்று மக்கள் வழிபடுகின்றனர். ஜப்பான் பாரம்பரிய விழாக்களில் ‘பென்சைட்டென்’ தெய்வத்திற்கு சிறப்பு பூஜைகளை செய்து வழிபடுகின்றனர். கொல்கத்தா நகரில் உள்ள இந்திய அருங்காட்சியகத்தில், ஜப்பானில் இந்து கடவுள் வழிபாடு தொடர்பான புகைப் படங்கள் நிறைய வைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story