ஆன்மிகம்

தவற விட்ட குழந்தை + "||" + Missed child

தவற விட்ட குழந்தை

தவற விட்ட குழந்தை
இஸ்ரயேலின் முதல் அரசன் சவுல். கடவுளால், அரசனாக தேர்ந்தெடுக்கப்பட்ட சவுலிடம் பல நல்ல குணங்கள் காணப்பட்டது.
அரசனான சவுல், ஒரு கட்டத்தில் தேவனுக்கு கீழ்ப்படியாமல் போகவே, கடவுள், இனியும் சவுல் அரசனாகாதபடி அவரைத் தள்ளி, அவருக்கு பதிலாக தாவீதுவை அரசனாகத் தேர்ந்தெடுத்தார்.

இஸ்ரயேலருக்கும் பெலிஸ்தருக்கும் இடையே நடந்த யுத்தத்தில் சவுலும், அவர் மகன் யோனத்தானும் கொல்லப்பட்டனர்.

அந்த காலங்களில் போரிலே தோற்கடிக்கப்படும் அரசனின் வாரிசுகளையும் கொல்வது வழக்கம்.

அவ்வழக்கப்படி யோனத்தானின் மகனாகிய மேவிபோசேத்தும் கொல்லப்படலாம் என்ற பயம் சவுலின் வீட்டில் தொற்றிக்கொள்ளவே, பணிப்பெண் ஒருவர் மேவிபோசேத்தை தூக்கிக்கொண்டு ஓடினாள்.

ஓடுகிற வழியில் குழந்தையாகிய மேவிபோசேத்தை தவறி கீழே போட்டு விடுகிறாள். விழுந்த குழந்தையின் கால்கள் அடிபட, மேவிபோசேத்து முடவனாகிறான்.

சவுலுக்குப் பின் அரசனான தாவீது, மேவிபோசேத்திற்கு தினமும் அரச உணவு கிடைக்கும்படிச் செய்தார் என்பது ஒருபக்கமிருந்தாலும், பணிப்பெண் செய்தத் தவறு நாம் யோசித்துப்பார்க்க வேண்டிய ஒன்றாகும்.

எதற்காக அந்த பணிப்பெண் ஓடினாள்? மேவிபோசேத்து என்னும் அக்குழந்தையைக் காப்பாற்றுவதற்காக. எதை தவற விட்டாள்? தன்னால் காப்பாற்றப்பட வேண்டிய அக்குழந்தையை.

இந்த பணிப்பெண் மட்டுமல்ல, பல நேரங்களில் நாம் செய்யும் தவறும் இதுவே.

என் குடும்பம், என் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும், சந்தோஷமாக இருக்க வேண்டும் என்னும் ஆசையில் எங்கேயோ ஓடிக்கொண்டேயிருக்கிறோம்.

ஆனால், அந்த ஓட்டத்தின் நடுவே, கடவுள் நமக்கு அன்பாகத்தந்த குடும்பத்தை, பிள்ளைகளை எல்லாம் மறந்து, மொத்தத்தில் நம் வாழ்க்கையையும் கடவுள் நம்மைப் படைத்த உன்னத நோக்கத்தையும் தொலைத்து விடுகிறோம். அதன் விளைவாக இறுதியில் கடவுளையே மறந்துவிடுகிறோம்.

இஸ்ரயேலர்கள் இவ்வாறு கடவுளை மறந்த, நன்றியற்ற வாழ்க்கை வாழ்ந்த போதெல்லாம் இறைவாக்கினர் மூலமாக எச்சரிக்கப்பட்டனர். எரேமியா என்னும் இறைவாக்கினர் வழியாக “என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளை தங்களுக்கு வெட்டிக்கொண்டார்கள்” (எரேமியா 2:13) என்கிறார் கடவுள்.

இயேசு இந்த உலகத்தில் வாழ்ந்த நாட்களில் நடந்த இரண்டு சம்பவங்கள் மூலம் இந்த வசனத்தை எளிதில் விளக்கி விடலாம்.

ஒருநாள், யூத அதிகாரி ஒருவர் இயேசுவிடம் வந்து, முழங்கால்படியிட்டு, ‘நல்ல போதகரே, நித்திய வாழ்வைப் பெற்றுக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்’ என்று கேட்டார்.

அதற்கு ‘இயேசு, மோசே கொடுத்த கற்பனைகளைக் கைக்கொள்’ என்கிறார்.

அதிகாரியும், ‘போதகரே, இவைகளையெல்லாம் என் சிறு வயது முதல் கைக்கொண்டிருக்கிறேன்’ என்கிறார்.

இயேசு மறுபடியும் அவரைப் பார்த்து, ‘இன்னும் ஒரே ஒரு காரியம் தான், அதைச் செய்தால் நித்திய வாழ்வை பெறலாம். நீ போய், உனக்கு உண்டானவைகளை எல்லாம் விற்று, ஏழைகளுக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்” என்கிறார்.

அவர் மிகப்பெரிய செல்வந்தராக இருந்தபடியால் இயேசு சொன்ன பதிலைக் கேட்டு, அதனை செய்ய மனதற்றவராய் போய்விட்டார்.

மற்றொரு நிகழ்வு-

இயேசு, தான் மிகவும் நேசித்த குடும்பமாகிய- மார்த்தாள், மரியாள், லாசரு என்பவர்களின் வீட்டிற்கு செல்கிறார்.

இயேசுவுக்கு எதாவது உணவு கொடுக்கவேண்டும் என்னும் பதற்றத்திலேயே மார்த்தாள் இருக்கிறாள்.

மரியாளோ, இயேசுவின் பாதத்தினருகில் அமர்ந்து, இயேசு சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கிறாள்.

மரியாள் தனக்கு உதவி செய்யவில்லை என்று வருத்தமடைந்து, இயேசுவிடத்தில் வந்து; ‘ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டு வந்திருக்கிறதைக் குறித்து உமக்குக் கவலையில்லையா?. எனக்கு உதவிசெய்யும்படி அவளுக்குச் சொல்லும்’ என்கிறாள்.

ஆனால் இயேசுவோ மார்த்தாளைப் பார்த்து, ‘நீ அநேக காரியங்களைக் குறித்துக் கவலைப்படுகிறாய். தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள்’ என்கிறார்.

இயேசு மார்த்தாளுக்குச் சொன்ன பதில்தான் நமக்கான பாடமும் கூட. நாம் இன்று பல்வேறு காரியங்களைக் குறித்து யோசித்து யோசித்து, அந்த செல்வந்தனான யூத அதிகாரி போல, மார்த்தாளைப் போல வாழ்க்கைக்கு மிக முக்கியமான, ஆண்டவரை பற்றிக்கொள்ள மறந்துவிடு கிறோம்.

அதனால் அந்த பணிப்பெண் குழந்தையை தவறவிட்டதுப்போல நாமும் நம்முடைய வாழ்க்கையை தொலைத்து விட்டு நிற்கிறோம்.

இயேசுவின் போதனைகளின் மையமாயிருக்கின்ற மலைப்பிரசங்கத்தில் இப்படி சொல்கிறார்:

“என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாதிருங்கள். ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; முதலாவது தேவனுடைய ராஜ்ஜியத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்”.

ஆம், எத்தனை நெருக்கடியான சூழ்நிலை வந்தாலும், இயேசுவை சார்ந்து வாழ்வோம். நித்திய வாழ்வைப் பெற்றுக்கொள்வோம்.

அன்பர்புரம் சகோ. ஹெசட் காட்சன்.