அகிலத்திரட்டு ஆகமம் கூறும் அறவுரைகள்


அகிலத்திரட்டு ஆகமம் கூறும் அறவுரைகள்
x
தினத்தந்தி 11 Oct 2019 11:06 AM GMT (Updated: 11 Oct 2019 11:06 AM GMT)

13-10-2019 தேரோட்டம். உலகைப் படைத்த ஆதிமூலப் பரம்பொருள் உருவத்தாலும், செயல்களாலும் மாறுபாடு உடையதாக 84 லட்சம் வகையான உயிரினங்களைப் படைத்தார்.

எல்லா உயிர்களுக்கும் இப்படி இப்படித்தான் வாழ வேண்டும் என்ற இயல்பினைக் கொடுத்த ஆதிமூலப் பரம் பொருள், மனித இனத்திற்கு மட்டும் உலகத்தை செப்பனிடத்தக்க வல்லமை பொருந்திய பகுத்தறிவைக் கொடுத்தார். அதோடு தம்மையும் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில் அதிபதிகளாகிய சிவன், பிரம்மா, விஷ்ணு என்று மும்மூர்த்திகளாக்கிக் கொண்டார்.

ஆனால் இந்த உலகமும், உயிரினங்களும் சில காலம் படைத்த நிலையில் இருந்து எவ்வித மாற்றமும் இல்லாமல் இருந்தது. இதை உணர்ந்த மும்மூர்த்திகளும் “இப்போது நல்வினை மட்டுமே இருப்பதால்தான் உலகம் இயக்கமற்று இருக்கிறது. எனவே இந்த உலகத்தை இயங்கச் செய்ய வேண்டுமானால், தீவினையும் வேண்டும்” என்று முடிவுசெய்தனர்.

சணப்பொழுதில் தீய சக்தியாக குறோணி என்ற அசுரன் தோன்றினான். அவன் பசி பொறுக்காமல் இந்த உலகத்தையே உணவாகக் கொள்ள முனைந்தான். அதைப் பார்த்த இறைவன், உலக இயக்கத்திற்கு பசியையே அடித்தளமாக அமைத்தான். இதன் காரணமாக அற்புதமான பகுத்தறிவைப் பெற்ற மனித இனம் வயிற்றுப்பசி, பணப் பசி, பதவிப் பசி, அதிகாரப் பசி, காமப் பசி போன்றவற்றின் மயக்கத்தால் பேராசை என்ற வலைக்குள் அகப்பட்டு, பகுத்தறிவைப் பயனுள்ளதாகப் பரிபாலனம் செய்யாதவர்களாயினர். அதனால் அசுர சக்திகள் மனிதர்களை ஆக்கிரமித்தது. தர்மம் தடம்புரண்டது. அதர்மம் ஆட்சி புரிந்தது. அந்த அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவதற்காக யுகங்கள் தோறும் இறைவன் அவதரித்திருக்கிறார். அப்படி இந்த கலியுகத்தில் அவதரித்தவரே அய்யா வைகுண்டர்.

கலியுகத்திற்கு முன்புள்ள ஆறு யுகங்களிலும் அராஜகம் புரிந்த அரக்கர்களுக்கு உடல் இருந்தது. ஆனால் இந்த கலியுகத்து அரக்கனுக்கோ உடல் இல்லை. கலி என்பது ஒரு விதமான மாயை. அதை பொய், புரட்டு, வஞ்சகம், சூழ்ச்சி, போலித்தனம், நுண்மையான சூது, வாது என்று வேத நூல்கள் விளம்புகின்றன. இத்தகைய கலியானது, உலகில் உள்ள அனைத்து மக்களின் சிந்தை பீடத்திலும் சிம்மாசனம் அமைத்து அமர்ந்துவிட்டது. ஆகவே நேர்த்தியான அன்பு, அறம், அமைதி, பண்பு, பாசம், பக்தி, பொறுமை, செம்மை, உண்மை, தியாகம், இணக்கம், இரக்கம் போன்ற நற்பண்புகள் எல்லாம் நலிந்துபோய் விட்டன.

இதற்கொரு விடிவுகாலம் வேண்டும் என்று ஆன்றோர்களும், சான்றோர்களும் இறைவனை வேண்டி முறையிட்டனர். இதனால் இரக்கமுற்ற விண்ணவர்களும், கலியின் கொடுமையை இறைவனிடம் விண்ணப்பித்தனர். அதற்கு இசைந்த மும்மூர்த்திகளும் கலிக்கு, அவதார காலத்தை கவனத்தில் கொண்டு ஆலோசிக்கலாயினர்.

அந்த ஆலோசனையில், கலி என்பது சிறிய எலியின் அளவு உடல் கூட இல்லாத ஓர் அளப்பரிய நினைவு மாய்மாலம். உண்மையைத்தான் பேச வேண்டும் என்று உறுதியாக இருப்போரையும் பொய் பேசவைத்து, அந்த பொய்க்குள்ளே ஐக்கியமாக்கிவிடும் அரக்கத்தனம் கொண்ட அந்த அருவற்ற கலியை, வாள், அம்பு, தடி போன்ற எவ்வகை ஆயுதங்களாலும் அழித்துவிட முடியாது. இதற்கு முன்பு நிகழ்ந்த ஆறு யுகங்களிலும் இருந்த அரக்கர்களை, இந்தக் கலியோடு ஒப்பிட்டுப் பார்த்தால், அவர்கள் அனைவரும் கலிக்கு முன்பு தூசுக்கு சமமானவர்களே.

ஆகையால் எல்லா யுகங்களிலும் மகாவிஷ்ணு மட்டுமே அவதரித்து அரக்கர்களை அழித்ததுபோல, இந்தக் கலியாகிய மாயையை அழிக்க முடியாது. மும்மூர்த்திகளும் தனித்தனியாக சென்றும், கலியரக்கனின் கண் முன்பு நின்று வென்றுவிட முடியாது. எனவே நாம் மூன்று மூர்த்திகளும் ஒரு மூர்த்தியாகி, பரப்பிரம்ம நிலையோடு மண்ணகத்து மனிதனைப் போல் சென்று, அன்பு, பொறுமை, தர்மம் ஆகியவற்றின் வலிமையை மக்களின் மனதில் விதைத்து, அவரவர் மனதில் மாசாகப்படிந்திருக்கும் மாயக்கலியை தானாகவே கரைந்துபோகச் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தனர்.

அதன்படி கலியுகம் பிறந்த 4934-ம் ஆண்டு, கொல்லம் ஆண்டு 1008 மாசி மாதம் 20-ந் தேதி, மும்மூர்த்தியும் ஒரு மூர்த்தியாகி திருச்செந்தூர் திருப்பாற்கடலின் உள்ளிருந்து அரூபமாய் வெளிப்பட்டு, வைகுண்டர் என்ற திருநாமத்தோடு, திருவாங்கூர் சமஸ்தானத்தின் கீழ்திசையாகிய கன்னியாகுமரிக்கு மேற்கே மூன்று மைல் தொலைவில் உள்ள தாமரைகுளம் என்ற இடத்தில் வந்து அமர்ந்தார்.

வைகுண்டரின் அருள் பிரவாகத்தால் அந்தப் பகுதி மக்களெல்லாம் அவரை அதிசயமாய் பார்த்தனர். அருள்வேண்டி நின்றனர். மக்களின் நோய், மன சஞ்சலம் போன்ற அனைத்தையும் தம் பார்வையாலேயே பறந்தோடச் செய்தார். அதனால் அவரைக் காணவரும் அன்பர்களின் எண்ணிக்கை அதிகமாயிற்று. அப்போது மண்ணையும், தண்ணீரையும் மருந்தெனக் கொடுத்து, ஊமை, கூன், குருடு, செவிடு, முடம் போன்ற அனைத்து ஊனங்களையும் நலமடையச் செய்தார். மக்கள் அவர் மீது அபரிமிதமான பக்தி செலுத்தினர். நாளடைவில் அந்த இடத்தை ‘சாமிதோப்பு’ என்றும், வைகுண்டரை ‘அய்யா’ என்றும் அழைத்தனா்.

தன்னிடம் வந்த மக்களுக்கு அய்யா வைகுண்டர் பல உபதேசங்களையும் வழங்கினார். கலி என்பது எலியளவு உருவம் கூட இல்லாதது. அதை அழிக்க மோதிரம் அளவிலான ஆயுதம் கூட அவசியமில்லை. நீங்கள் பவ்வியமாக வாழ்ந்தீர்கள் என்றால், அதற்குள் கலியானது அகப்பட்டுக் கொள்ளும். மானத்தோடு வாழ்ந்தால் கலியானது தன்னாலேயே மாண்டுவிடும். எனவே சொத்து, சுகமென்று எண்ணாதீர்கள். அடிப்பார் அடிக்க வந்தால் அதைச் சகித்து விட்டு விடுங்கள். சத்ருவோடும் சாந்தமுடனே இருங்கள். அற்பமான இந்த வாழ்வில் அநியாயங்களைச் செய்யாதீர்கள். நினைத்ததெல்லாம் உங்களுக்கு நிச்சயமாய் நிறைவேறும் என்பது போன்ற பல உபதேசங்கள் செய்தார்.

அதன் காரணமாக ஜாதி, மத பேதங்களைக் கடந்து சகலரும் ஒரு தலத்தில் குவிந்தனர். ஒரே கிணற்று நீரைக் குடித்தனர்; குளித்தனர். ஒரே சமையலை உண்டு மகிழ்ந்தனர். இதைக் கண்டு சில ஆதிக்கவர்க்கத்தினரின் மனம் சஞ்சலப்பட்டது. அவர்கள் திருவாங்கூர் மன்னனிடம் இதுபற்றி கூறி அவனது கோபத்தை தூண்டும் வகையில் கோள் மூட்டினர். மன்னன் படைகளை அனுப்பி, அய்யா வைகுண்டரை கைது செய்ததோடு, அவருக்கு ஆலகால விஷம் கொடுத்து அருந்தச் செய்தான். சுண்ணாம்பு காளவாயில் வைத்து நீற்றினான். பெரிய நெருப்பு குண்டத்தில் நடந்துவரச் செய்தான். புலியுடன் கூண்டில் அடைத்தான். இப்படி பல சோதனைகள் செய்தாலும், அதில் இருந்து மீண்டும் 112-ம் நாள் சாமிதோப்புக்கு வந்து சேர்ந்தார்.

ஏழை, எளிய மக்களும் பிரபஞ்ச வரலாற்றைத் தெரிந் திருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, எழுதப்படிக்கத் தெரியாத அரிகோபால கீசரை வைத்து, அகிலத்திரட்டு என்னும் ஆகமத்தை அருளினார். கலியுகத்தில் 18 ஆண்டுகள் மட்டுமே தெய்வமாய், மனிதனாய் மக்கள் மனம் போற்ற வாழ்ந்தார் அய்யா வைகுண்டர். அவர் தனது அன்புக்கொடி மக்களிடம், “நீங்கள் அனைவரும் நான் அருளியுள்ள ஆகமத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு வாழுங்கள். அப்படி வாழ்ந்தீர்கள் என்றால், தர்மயுக வாழ்வினைப் பெறுவீர்கள்” என்று திருவாய் மலர்ந்துவிட்டு விண்வெளியில் மறைந்தார்.

இந்த அகிலத்திரட்டு ஆகமம் கூறும் உபதேசங்களை எல்லாம் உலகுக்குச் சொல்லும் விதமாக, தற்போது அய்யா வைகுண்டர் வழிபாட்டு ஆலயங்கள் பல உள்ளன. சென்னையிலும், சென்னை புறநகர்களிலும் ஏறத்தாழ 26 ஆலயங்கள் இருக்கின்றன. அவற்றில் ராஜகோபுரமும், பற்பல மண்டபங்களும், கொடிமரமும், தேரும் அமையப்பெற்ற ஆலயம் சென்னை மணலிப்புதுநகர் வைகுண்டபுரத்தில் உள்ள தர்மபதி ஆகும். அய்யா வழிபாட்டு ஆலயங்களில் சாமிதோப்பு பதியைப்போல, நித்திய வாகன பவனியும், நித்திய அன்னதானமும் இங்கே நடைபெறுகிறது.

இந்த மணலிப்புதுநகர் வைகுண்டபுரம் தர்மபதியில் 10 நாள் திருவிழா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வருகிற 13-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பகலில் தேரோட்டமும், இரவு பட்டாபிஷேகத் திருஏடு வாசிப்பும், பல்லக்கு வாகன பவனியும், திருக்கொடி அமர்தலும் நடைபெற உள்ளது.

-ஆ.மணிபாரதி

Next Story