ஆன்மிகம்

பிரச்சினை தீர்க்கும் பிரதோஷ வழிபாடு + "||" + Solving the problem of Pradosham worship

பிரச்சினை தீர்க்கும் பிரதோஷ வழிபாடு

பிரச்சினை தீர்க்கும் பிரதோஷ வழிபாடு
சிவபெருமானுக்குரிய விரதங்களில் முக்கியமானது, பிரதோஷம். இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள், வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் திரயோதசி திதியில் அதிகாலையில் எழுந்து நீராடி, நித்திய கடன்களை முடிக்க வேண்டும்.
சிவபுராணம், சிவ நாமாவளிகளை படித்து, முடிந்தவரை மவுன விரதம் இருந்து, மாலையில் கோவில் சென்று, சிவதரிசனம் செய்யவேண்டும். அதோடு நந்திக்கு பச்சரிசி வெல்லம் படைத்து, நெய்தீபம் ஏற்றி வணங்கி வருதல் வேண்டும். பிரதோஷ விரதம் முடிந்ததும், வேதம் ஓதும் அந்தணர்களுக்கு தானம் வழங்கி விரதத்தை பூர்த்தி செய்தால் நல்ல பலனைத் தரும்.


மூவுலகிற்கும் ஏற்படவிருந்த பேரழிவை, காத்தருளிய வேளையே, ‘பிரதோஷ வேளை’யாகும். வளர்பிறை பிரதோஷம், தேய்பிறை பிரதோஷம் என மாதம் இருமுறை பிரதோஷம் வரும். திரியோதசி திதியில் சூரிய மறைவிற்கு முன்னே, மூன்றே முக்கால் நாழிகை, மறைந்ததற்கு பிறகு மூன்றே முக்கால் நாழிகை என மொத்தம் ஏழரை நாழிகைக் காலம் ‘பிரதோஷ காலம்’ எனப்படும். குறிப்பாக, மாலை 4.30 மணி முதல் இரவு 7மணி வரை.

சாதாரண நாட்களில் ஒருவர் ஆலயத்திற்கு வரும்போது, மூன்று முறை வலம் வருவார்கள். அதுவே பிரதோஷ தினத்தில், ‘சோம சூக்தப் பிரதட்சணம்’ முறையில் வலம் வர வேண்டும். திருப்பாற்கடலை கடைந்தபோது வெளிவந்த ஆலகால விஷம், தேவர்களை முன்னும் பின்னும், வலமும் இடமுமாகத் துரத்தியது. தேவர்கள் அஞ்சி நடுங்கி ஒடுங்கி கயிலை மலைக்கு ஓடினார்கள். இறைவனை வலமாக வந்து உள்ளே சென்று பரமனைச் சரணடையலாம் என்று எண்ணிய தேவர்களை, ஆலகால விஷம் அப்பிரதட்சணமாகச் சென்று எதிர்த்தது. இதைக்கண்டு அஞ்சிய தேவர்கள், வந்த வழியே திரும்பினர். ஆலகால விஷம் அந்த பக்கத்திலும் எதிர்த்துச் சென்று பயமுறுத்தியது. இவ்வாறு தேவர்கள் வலமும் இடமுமாய் வந்த அந்த நிகழ்ச்சிதான் ‘சோமசூக்தப் பிரதட்சணம்’ எனப் பெயர் பெற்றது.

முதலில் சிவலிங்கத்தையும், நந்தியையும் வணங்கிகொண்டு, அப்பிரதட்சணமாகச் சண்டேசுவரர் சன்னிதி வரை சென்று, அவரை வணங்கி கொண்டு, அப்படியே திரும்பி வந்து முன்போல சிவலிங்கத்தையும், நந்தியையும் வணங்க வேண்டும். இவ்வாறு மூன்று முறை செய்ய வேண்டும். அப்படி செய்தால் ‘அசுவமேத யாகம்’ செய்த பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆலயத்தில் பிரதோஷ வழிபாட்டை முடித்தபின் வீட்டிற்குச் சென்று உணவருந்தல் வேண்டும்.

சனிக்கிழமை வரும் பிரதோஷம் மிகவும் விசேஷமானது. பிரதோஷ வழிபாடு செய்ய, திருமால், பிரம்மன் உள்ளிட்ட தேவர்களும் கூட சிவாலயம் செல்வார்கள். ஒவ்வொரு நாளும் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரதோஷ நேரமாகும். இது ‘தினப் பிரதோஷம்’ எனப்படும். சிவனை வழிபட ஏற்ற காலம் சாயரட்சை. அதிலும் சிறந்தது சோமவாரம். அதனினும் சிறந்தது மாத சிவராத்திரி. அதனினும் சிறந்தது பிரதோஷம். பிரதோஷ தரி சனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுகிறார்கள். தரித்திரம் ஒழியவும், நோய் தீரவும், துயர் நீங்கவும் பிரதோஷ வழிபாடு சிறந்ததாகும்.

நலம் தரும் நந்திகேஸ்வரர்

நந்தி தேவருக்கு ‘ருத்ரன்’ என்றொரு பெயரும் உண்டு. ருத் - என்றால் துக்கம். ரன் - என்றால் ஓட்டுபவன். ருத்ரன் - என்றால் துக்கத்தை விரட்டுபவன் என்று பொருள். பிரதோஷ காலத்தில் நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை போட்டு, நெய் விளக்கு ஏற்றி பச்சரிசி வெல்லம் கலந்து வைத்து பூஜை செய்வார்கள்.

அபிஷேக பலன்

பிரதோஷ பூஜையின் போது அபிஷேகப் பொருட்களால் விளையும் பலன்கள்:-

பால் - நோய் தீரும். நீண்ட ஆயுள் கிடைக்கும்.

தயிர் - பல வளமும் உண்டாகும்

தேன் - இனிய சாரீரம் கிட்டும்

பழங்கள் - விளைச்சல் பெருகும்

பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும்

நெய் - முக்தி பேறு கிட்டும்

இளநீர் - நல்ல மக்கட் பேறு கிட்டும்

சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும்

எண்ணெய் - சுகவாழ்வு

சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம்

மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும்

தொடர்புடைய செய்திகள்

1. சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
2. பிரதோஷ வழிபாடு
எஸ்.புதூர் அருகே கரிசல்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் தமிழ் புத்தாண்டு, பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
3. பிரதோஷ வழிபாடு
கரிசல்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது
4. பிரதோஷ வழிபாடு
பிரதோஷ வழிபாடு நடந்தது
5. பிரதோஷ வழிபாடு
பிரதோஷ வழிபாடு