மனதை மாற்றிய திருக்குர்ஆன் வசனம்


மனதை மாற்றிய திருக்குர்ஆன் வசனம்
x
தினத்தந்தி 31 Aug 2020 10:00 PM GMT (Updated: 31 Aug 2020 5:18 PM GMT)

இறைவனின் கட்டளைக்கு ஏற்ப இஸ்லாமிய கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்லும் பணிகளை மிகவும் சிரமத்துடன் நபிகளார் செய்து வந்தார்கள்.

அறியாமை இருளில் மூழ்கி இருந்த மக்களை நல்வழிப்படுத்த முகம்மது நபி (ஸல்) அவர்களை தனது தூதராக ஏக இறைவன் அல்லாஹ் அனுப்பினான். இறைவனின் கட்டளைக்கு ஏற்ப இஸ்லாமிய கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்லும் பணிகளை மிகவும் சிரமத்துடன் நபிகளார் செய்து வந்தார்கள்.

அப்போது, அவருக்கு எதிராக அரேபியாவில் உள்ள குரைஷி இன மக்கள் செயல்பட்டனர்.

“நம்மோடு நேற்று வரை சாதாரண மனிதராக இருந்த முஹம்மது இன்று, ‘நான் தான் இறைத்தூதர்; அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள்; அவனே அனைத்தையும் படைத்து பரிபாலனம் செய்பவன்; அவன் படைத்த படைப்பினங்களை அவனுக்கு இணையாக்காதீர்கள்’, என்று புதிய கொள்கைகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர் கொள்கையில் மதிமயங்கி பல இளைஞர்கள் நம் முன்னோரின் சிலை வணக்க முறைக்கு இடையூறு செய்கின்றனர். இதற்கு இப்போதே தடை விதிக்காவிட்டால் நாளை அது விபரீதமாகி விடும்” என்று அரேபிய குரைஷியர்கள் கோபம் கொண்டனர்.

நபிகளாரைக் கொல்லவும் அந்தக்கூட்டம் சதி திட்டம் தீட்டியது. இதற்காக உமர் கத்தாப் என்ற வீரரை அவர்கள் அணுகினார்கள். அரேபிய மண்ணில் தலைச்சிறந்த வீரர் ஆக உமர் கத்தாப் கருதப்பட்டார்.

“நீங்கள் முஹம்மதுவை கொன்று வாருங்கள், பத்து சிகப்பு ஒட்டகம் பரிசாக தருகிறோம்” என்றார்கள். அப்போது சிகப்பு நிற ஒட்டகம் விலை உயர்ந்ததாக கருதப்பட்டது.

உமர் கத்தாப்பும் இதை ஏற்றுக்கொண்டார். வாளை கையில் ஏந்தியபடி முகம்மது நபி அவர்களை கொல்ல வீதியில் நடந்து சென்றார்.

இந்த செய்தியை அறிந்த நபித்தோழர் ஒருவர் உமர் அவர்களை வழி மறித்து “உமரே! நீர் நபி பெருமானை கொல்வதற்கு முன் உம் தங்கை பாத்திமாவை சென்று சந்தியும். ஏனென்றால் அவரும் இஸ்லாத்தை ஏற்கனவே ஏற்றுக்கொண்டு விட்டார்” என்றார்.

“என்ன! நீர் சொல்வது உண்மையா?” என்று கோபமாக கேட்ட உமர், தன் தங்கை வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார். கதவை தட்ட முயன்ற போது, வீட்டின் உள்ளிருந்து இனிய குரலில் தங்கை பாத்திமா குர்ஆனின் சில வசனங்களை ஓதுவதை செவியுற்றார்கள்.

“நிச்சயமாக நான் தான் அல்லாஹ், என்னைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை. என்னையே நீங்கள் வணங்குங்கள், என்னை தியானித் துக் கொண்டு இருக்கும் பொருட்டு தொழுகையை கடைபிடியுங்கள்”.

“நிச்சயமாக மறுமை வந்தே தீரும். ஒவ்வொரு ஆத்மாவும் தன் செயலுக்கு தக்க கூலியை அடையும் பொருட்டு அதனை நான் மனிதர்களுக்கு மறைத்து வைக்க விரும்புகிறேன்” (திருக்குர்ஆன் 20:14-15)

இந்த வசனங்கள் உமர் அவர்களின் காதில் விழுந்த உடன் அவர் மனதில் ஓர் இனம் புரியாத உணர்வுகள் பீரிட்டு எழுந்தன.

“எத்தனை சத்தியமான வார்த்தைகள். இது நிச்சயமாக எல்லாம் வல்ல இறைவனால் மட்டுமே சொல்லி இருக்க முடியும்” என்று மனதில் உறுதி பூண்டார்கள், அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற்றுக்கொண்டார்கள்.

நபிகளாரைக் கொல்ல வந்தவர்கள் அவர்களின் கொள்கைப்பிடிப்பாளராக மாறிப்போனார்கள்.

ஏந்திய வாளை எறிந்து விட்டு மீண்டும் வீதியில் இறங்கி நடந்தார்கள். கண்மணி நாயகத்தைச் சந்தித்து நடந்த விபரங் களைச் சொல்லி அவர்கள் கரம் பற்றி கலிமாச் சொல்லி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள்.

மாமறையின் ஒரு வசனம் உமர் அவர்களின் மனதை மாற்றியது. உமர் அவர்கள் இஸ்லாத்தில் இணைந்த பின் மக்காவில் அதன் வீரியம் மிக வேகமாக பரவ ஆரம்பித்தது.


Next Story