ஆன்மிகம்

பித்ரு தோஷ பரிகார தலங்கள்; திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோவில் + "||" + Pitru Tosha Parikara sites; Thiruppuvanam Pushpavaneswarar Temple

பித்ரு தோஷ பரிகார தலங்கள்; திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோவில்

பித்ரு தோஷ பரிகார தலங்கள்; திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோவில்
இந்தியா முழுவதும் பன்னிரண்டு ஜோதிர்லிங்க தலங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் தமிழ்நாட்டின் தென் பகுதியில் உள்ள ராமேஸ்வரம். இங்குள்ள ராமநாதர் கோவில் பித்ரு வழிபாட்டிற்கு உகந்த தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
ராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க ராமபிரான், சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலம் இது. ராமேஸ்வரத்தில் 22 தீர்த்தங்கள் உள்ளன. இதில் அக்னி தீர்த்தம் என்பது, ராமேஸ்வரம் கடலைக் குறிக்கும். இது பித்ரு தோஷத்தை போக்கும் ஆற்றல் கொண்ட தீர்த்தமாக கருதப்படுகிறது.

* ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பவர்கள், ராமேஸ்வரம், திருப்புல்லாணி ஆகிய இடங்களில் ‘தில ஹோமம்’ செய்வது மற்றும் தர்ப்பணம் கொடுப்பது பித்ரு தோஷத்தைப் போக்கும்.

* ‘திலம்’ என்பதற்கு ‘எள்’ என்று பொருள். மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் சாலையில் பூந்தோட்டம் என்ற ஊர் இருக்கிறது. இங்கிருந்து எரவாஞ்சேரி செல்லும் சாலையில் 2 கிலோமீட்டர்  சென்றால், ‘திலதர்ப்பணபுரி’ என்ற ஊர் வரும். இங்கு முக்தீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில்தான் ராமபிரான், தனது தந்தை தசரதர் மற்றும் கழுகு பறவையான ஜடாயு ஆகியோருக்கு தர்ப்பணம் கொடுத்ததாக தல புராணம் சொல்கிறது. இதன் காரணமாகவே இந்த ஊர் ‘திலதர்ப்பணபுரி’ என்றானது. இந்தியாவில் பித்ரு தலங்களாக, ஏழு தலங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவை, காசி,  ராமேஸ்வரம், கயா, திரிவேணி சங்கமம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு மற்றும் திலதர்ப்பணபுரி ஆகும். ராமேஸ்வரத்தில் செய்யப்படும் பித்ருக்கள் சம்பந்தமான அனைத்து பூஜைகளும், திலதர்ப்பணபுரியிலும் செய்யப்படுகின்றன.

* வட இந்தியாவில் கங்கையுடன் யமுனை, சரஸ்வதி நதி இரண்டும் சங்கமிக்கும் தலம் ‘திரிவேணி சங்கமம்.’ இங்கு, சரஸ்வதி நதி கண்ணுக்குத் தெரிவதில்லை. அதுபோல், தமிழகத்தில் பவானி, காவிரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என மூன்று நதிகளும் கூடும் இடம், ‘தென் திரிவேணி சங்கமம்’ என்று அழைக்கப்படும் பவானி கூடுதுறை ஆகும். இது ஈரோடு மாவட்டத்தில் உள்ளது. இந்த பவானி கூடுதுறையில் கோவில் கொண்டிருப்பவர் சங்கமேஸ்வரர். பாவம் போக்கி புண்ணியம் அளிக்கும் சிறப்புமிக்க தலங்களில் இதுவும் ஒன்று. ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் இங்கு நீராடி, பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்வது மிகுந்த விசேஷம்.

* வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள சவுந்திரநாயகி உடனாய புஷ்பவனேஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் இந்தக் கோவில் இருக்கிறது. முன் காலத்தில் சுச்சோதி என்ற மன்னன், தன்னுடைய முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காக திருப்புவனம் வந்து வைகையாற்றங்கரையில் வேண்டுதல் செய்துள்ளார். இங்கு இறந்தவர்களின் அஸ்தியைக் கரைத்தால், அவர்களுக்கு பாவ விமோசனம் கிடைக்குமாம். பாண்டிய நாட்டின் பாடல் பெற்ற 14 தலங்களில் திருப்புவனமும் ஒன்று.