திருமண வரம் அருளும் வள்ளிமலை


திருமண வரம் அருளும் வள்ளிமலை
x
தினத்தந்தி 2 March 2021 10:30 PM GMT (Updated: 2021-03-02T07:07:38+05:30)

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ளது வள்ளிமலை. இங்கு மலை மீது சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.

வள்ளி வாழ்ந்த இடம் என்பதால், அவரது பெயராலேயே இந்த மலை அழைக்கப்படுகிறது. ஒரு சமயம் திருமால், முனிவர் வேடத்தில் பூலோகத்தில் உள்ள வனத்தில் தவமிருந்தார். அப்போது மகாலட்சுமி, மான் வடிவில் அவர் முன்பு வந்தாள். முனிவர் மானை பார்த்தார். இதனால் கருவுற்ற மான், வள்ளிக் கொடிகளின் மத்தியில் ஒரு பெண் குழந்தையை ஈன்றது. அவ்வழியே வந்த வேடுவ தலைவர் நம்பிராஜன், அந்தப் பெண் குழந்தையை எடுத்து ‘வள்ளி’ என பெயரிட்டு வளர்த்தார். கன்னிப்பருவத்தில் அவள் தினைப்புனம் காக்கும் பணி செய்தாள். அங்கு வந்த முருகப்பெருமான், வள்ளியை திருமணம் செய்ய விரும்பினார். இதையறிந்த நம்பிராஜன், திருத்தணியில் முருகனுக்கு முறைப்படி வள்ளியை திருமணம் செய்து கொடுத்தார். பின்னர் நம்பிராஜனின் வேண்டுதலுக்கு இணங்க இங்குள்ள குன்றில் முருகன் எழுந்தருளினார் என்கிறது தல வரலாறு.

இத்தல மூலவர் பெயர், சுப்பிரமணியர். தாயார் பெயர், வள்ளியம்மை. 1000 வருடங்கள் பழமை வாய்ந்த இந்த ஆலயம், முன்பு சின்னவள்ளிமலை என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. முருகனை கணவனாக அடைய விரும்பிய வள்ளி, இத்தலத்தில் திருமால் பாதத்தை வைத்து வழிபட்டாள். இதனால் இங்கு பக்தர்களுக்கு திருமாலின் பாதம் பொறித்த ஜடாரி சேவை செய்யப்படுகிறது. மலைக்கோவிலில் குடவறை சன்னிதியில், வள்ளி- தெய்வானையுடன் முருகப்பெருமான் காட்சி தருகிறார். வள்ளி வேடர் குலத்தில் வளர்ந்ததால் அர்த்தஜாம பூஜையில் தேனும், தினை மாவும் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.

ஒரு முறை முருகன், வள்ளியுடன் பேசிக்கொண்டிருந்த போது, அங்கு நம்பிராஜன் வந்து விட்டார். எனவே முருகன் வேங்கை மரமாக உருமாறி தன்னை மறைத்துக் கொண்டார். இந்த மரமே இத்தலத்தின் விருட்சமாக இருக்கிறது. ஆலயத்தின் தீர்த்தம், சரவணப்பொய்கை ஆகும். பொதுவாக விமானத்தின் கீழ்தான் சுவாமி காட்சி தருவார். ஆனால், இங்கு முருகன் சன்னிதிக்கு மேலே கோபுரம் இருக்கிறது. திருமணமாகாதவர்கள் வள்ளியுடன் கூடிய முருகனை பிரார்த்தனை செய்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். பக்தர்கள் இங்கு நேர்த்திக்கடனாக சுவாமிக்கு தேன், தினைமாவு படைத்து, வஸ்திரம் அணிவித்து, அபிஷேகம் செலுத்துகிறார்கள்.

தற்போதும் இந்தப் பகுதியில் சித்தர்கள் தவம் புரிந்து வருவதாக கருதப்படுகிறது. அதனால் தான் அப்பகுதி எவ்விதத்திலும் மாற்றியமைக்கப்படவில்லை. படிகளைக் கடந்து கோவிலுக்குச் சென்றால் அங்கு நம் கண்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் ஒரே கல்லினால் குடைந்து செய்யப்பட்ட கோவில் நம்மை அதிசயிக்க வைக்கிறது. மலையின் உச்சியில், திருமால் கிரீஸ்வரர் கோவிலும் உள்ளது. மேற்குப் பகுதியில் ஒரு சுனை உள்ளது. அதனை ‘சூரியன் காணாத சுனை’ என்று அழைக்கின்றனர். ஏனெனில் அந்த சுனையின் மீது சூரியனின் கதிர்கள் விழுந்ததே இல்லையாம். இதற்கு ஒரு புராணக் கதையும் உள்ளது. அதாவது முருகன் வயதான தோற்றத்தில் வள்ளியிடம் வந்து தனக்கு பசிப்பதாக கூறி, தேனும், தினை மாவும் தரும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி வள்ளியும் கொடுத்தார். அதனை சாப்பிடும்போது முருகனுக்கு விக்கல் எடுத்ததாகவும், வள்ளி ஓடோடிச் சென்று இந்த சுனையில் இருந்துதான் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

திருமணமாகாத பெண்கள் இந்த சுனையில் இருக்கும் நீரை எடுத்து தலையில் தடவிக் கொண்டு, ‘தனக்கு நல்ல கணவன் வர வேண்டும்’ என்று வேண்டிக் கொள்வது வழக்கம். இந்த கோவில் மாலை 5 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். கோவிலுக்குள் 4 மணிக்கெல்லாம் சென்று விட்டால் அதற்கு பின்னர் 2 கி.மீ. தூரம் நடந்து சென்று சுனை, திருமால் கிரீஸ்வரர் கோவில்களை தரிசனம் செய்துவிட்டு திரும்ப இயலும். கோவிலின் நடை சார்த்தப்பட்டாலும், மற்ற பகுதிகளுக்குச் சென்று திரும்ப தனி வழி உள்ளது.

சென்னையில் இருந்து வள்ளிமலைக்குச் செல்ல இரண்டரை மணி நேரம் ஆகும். சென்னையில் இருந்து வேலூர் அல்லது ஆரணி, ஆற்காடு செல்லும் பேருந்துகள் வள்ளிமலையில் நின்று செல்லும்.

Next Story