ஆன்மிகம்

நற்குணங்களின் நாயகர் + "||" + Hero of virtues

நற்குணங்களின் நாயகர்

நற்குணங்களின் நாயகர்
அமைதி, பரிவு, பாசம், கோபம் கொள்ளாமை, மக்களை நெறிப்படுத்துதல் போன்ற நற்குணங்களால் நபிகளாரின் வாழ்க்கை முறை அமைந்திருந்தது.
அக்கிரமங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. மானுட நீதிக்கான இலக்கணங்கள் திருத்தப்பட்டு போயின. சுயக் கட்டுப்பாடுகளை இழந்து அதர்மத்தின் வலைக்குள் சிக்கி மக்கள் தவித்த நிலத்தில் அப்துல்லா, ஆமினா தம்பதியருக்கு புதல்வராய் பிறந்தார் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.

அவரது பாட்டனார் அப்துல் முத்தலிப், ‘முஹம்மது’ (புகழுக்குரியவர்) என்று அவருக்கு பெயர் சூட்டினார். பிறக்கும் போதே தந்தையை இழந்து, பிறந்தபின் தாயை இழந்து, அனாதையாக வாழ்ந்தார்கள்.

இருண்ட உலகில் வாழ்ந்த மக்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவர இறைவனால் அனுப்பப்பட்ட நபிகளில் இறுதி நபியாக, அல்லாஹ்வால் தேர்வு செய்யப்பட்டவர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள். அமைதி, பரிவு, பாசம், கோபம் கொள்ளாமை, மக்களை நெறிப்படுத்துதல் போன்ற நற்குணங்களால் நபிகளாரின் வாழ்க்கை முறை அமைந்திருந்தது. சிறந்த குணங்களின் பிறப்பிடமாக நபியின் அறிமுகத்தைத் திருக்குர்ஆனில் குறிப்பிடுகிறான் அல்லாஹ்.

‘(நபியே) நீர் மகத்தான நற்குணத்தில் இருக்கின்றீர்’. (திருக்குர்ஆன் 68:4)

ஏகத்துவமென்ற ஓரிறையை மக்கள் மன்றத்தில் முன்வைத்து உணர்வுப்பூர்வமான ஆதாரங்களை சுட்டிக்காட்டி நபியின் பிரச்சாரம் இருந்தது. மக்காவில் பெரிய குலத்தித்தின் வாரிசு, இறைத்தூதரென்று சுய தம்பட்டம் பேசியதில்லை. தன் வீட்டில் மூன்று வேளை அடுப்பில் தீயில்லாவிட்டாலும், மக்களின் வீட்டின் தீ அணைந்து விடக் கூடாதென்பதற்காக மக்களுக்காகத் தன்னை அர்ப்பணிக்கும் குணமே மக்கா நகர மக்களை இழுக்கும் காந்தமானது.

‘(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராக, கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். அவர்களை மன்னிப்பீராக! அவர்களுக்குப் பாவமன்னிப்புத் தேடுவீராக!. (திருக்குர்ஆன் 3:159)

ஆட்சி, அதிகாரங்கள் தன் எதிரியை பழிவாங்குவதற்கு அல்ல. மாறாக மக்களுக்கு தொண்டு செய்யவே என்பதை தன் செயல் பாடுகள் மூலம் நிரூபித்து, பழிவாங்கும் எண்ணத்தை எரித்து அன்பை விதைத்த ஆட்சியாளர் நபி (ஸல்).

அறியாமை காலத்தில் கஅபா ஆலயத்தை பராமரிக்கும் பொறுப்பு உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்களுடைய குடும்பத்தினரிடம் இருந்தது. அதன் சாவியும் அவர் வசமே இருந்தது. ஆரம்பத்தில் அவர் இஸ்லாத்தை ஏற்கவில்லை. அந்த சமயம் நபி (ஸல்) அவர்கள் தம்மை கஅபாவின் உள்ளே அனுமதிக்குமாறு எவ்வளவோ வேண்டியும் அவர் அனுமதிக்கவில்லை.

உடனே நபி (ஸல்) அவர்கள் ‘உஸ்மானே, ஒரு நாள் அதன் சாவி எனது கையில் வரும். அதை நான் உமக்குத் தருவேன்’ என்று வாக்களித்தார்கள்.

ஹிஜ்ரி 8-ம் ஆண்டு புனித கஅபா வெற்றி கொள்ளப்பட்டது. உஸ்மான்பின் தல்ஹா (ரலி) வசம் இருந்த சாவியைக் கொண்டுவரச் சொன்ன நபிகளார் கஅபாவைத் திறந்து, உள்ளே சென்று தொழுதுவிட்டு வந்தார்கள்.

அப்போது அலி (ரலி), அப்பாஸ் (ரலி) ஆகியோர் கஅபாவின் திறவுகோலுடன் நபியைச் சந்தித்து ‘இறைத்தூதரே, ஹாஜிகளுக்கு (ஹஜ்ஜுக்காக பயணம் வருபவர்களுக்கு) நீர் புகட்டும் பணியுரிமை, கதவு திறக்கும் உரிமை ஆகியவற்றை எங்களுக்குத் தாருங்கள்’ என வேண்டினர்.

‘உஸ்மான் பின் தல்ஹா எங்கே?’ என்று வினவிய நபியவர்கள், அவர் வந்த பின் அவரிடமே கஅபாவின் திறவுகோலை ஒப்படைத்து, ‘இது என்றைக்கும் உங்கள் குடும்பத்தார் வசமே இருக்கும். அக்கிரமக்காரனைத் தவிர வேறு எவனும் அதைப் பறிக்க மாட்டான். இந்த ஆலயத்திற்கு இறைவன் உங்களைக் காப்பாளராக ஆக்கியுள்ளான்’ என்றார்கள்.

உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்களுக்கு கொடுத்த வாக்கை நபியவர்கள் காப்பாற்றினார்கள். நபியின் வாக்குறுதி அடிப்படையில் இதுநாள் வரை, உலகம் அழியும் வரை அவரின் குடும்பத்தார் வசமே கஅபாவின் திறவுகோல் இருக்கிறது.

அன்று போட்ட ஏகத்துவ விதை கடல் கடந்து வியாபித்ததற்கு நபியின் நற்குணத்தின் புரட்சியே முக்கிய காரணமாகும். இறைவனால் தனக்கு அருளப்பட்ட குர்ஆனைக் கொண்டு இஸ்லாத்தின் பக்கம் மக்களை அழைக்கும் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்கள். சொல்லுக்கும், செயலுக்கும் எந்த மாறுபாடும் இன்றி அவர்களது வாழ்க்கை அமைந்திருந்தது.

ஒரு முறை ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘நபி (ஸல்) அவர்கள் குணம் எப்படியிருந்தது?’ எனக்கேட்டபோது, ‘நபி (ஸல்) அவர்களின் குணம், குர்ஆனாக இருந்தது’ எனக்கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)

படிப்பறிவும், எழுத்தறிவும் ஏதும் இல்லாமல் பகுத்தறிவுக்கு பாதையிட்டார்கள். நபியவர்களின் முன்மாதிரியின் நிழல்கள் பல துறைகளிலும் சூழ்ந்துள்ளதை நபி (ஸல்) அவர்களின் வாழ்வை உற்றுக் கவனித்தால் புலப்படும். இதை மேற்கோள் காட்டி உங்களுக்கு அழகிய முன்மாதிரி நபியிடம் இருப்பதாக அல்லாஹ் தன் திருமறையில் நமக்குச் செய்தி தருகிறான்.

மகனாக, தந்தையாக, கணவனாக, தலைவனாக, தளபதியாக, வியாபாரியாக, தோழனாக, ஆசிரியராக, மாணவராக, நபியாக வாழ்ந்து எதிரிகளும் வாழ்த்துரை வழங்கும் மனிதராக அனைத்து தரப்பினர் மனதிலும் இடம் பிடித்துள்ளார்கள். நற்குணங்களின் நாயகர் முஹம்மது நபியை வாழ்க்கை முழுவதும் நாம் பின்பற்றுவோம்.

எ.எச். யாசிர் அரபாத் ஹசனி, லால்பேட்டை.