யோக ஹயக்ரீவர்


யோக ஹயக்ரீவர்
x
தினத்தந்தி 28 April 2021 3:58 PM GMT (Updated: 28 April 2021 3:58 PM GMT)

ஆலயத்தில் அருளும் ஹயக்ரீவர், நான்கு திருக்கரங்களுடன், சங்கு மற்றும் சக்கரத்தை கையில் ஏந்தியபடி யோக நிலையில் வீற்றிருக்கிறார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளது செட்டிபுண்ணியம் என்ற ஊர். இங்கு யோக ஹயக்ரீவப் பெருமாள் கோவில் அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்தில் அருளும் ஹயக்ரீவர், நான்கு திருக்கரங்களுடன், சங்கு மற்றும் சக்கரத்தை கையில் ஏந்தியபடி யோக நிலையில் வீற்றிருக்கிறார். வெற்றிக்காக போராடுபவர்கள், குறிப்பாக மாணவர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து தங்களின் படிப்பு தொடர்பான பொருட்களை மூலவரின் காலடியில் வைத்து வாங்கிச் செல்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறியவர்கள், இறைவனுக்கு திருமஞ்சனம் செய்தும், வஸ்திரம் சாத்தியும் வணங்குகிறார்கள். இத்தலத்தில் இருக்கும் ராமன் சிலையில், அவரது கணுக்காலில் ஒரு ரட்சை (கயிறு) கட்டப்பட்டுள்ளது. தாடகை வதத்தின்போது, விசுவாமித்திர முனிவரால், இந்த கயிறு கட்டிவிடப்பட்டதாக தல புராணம் சொல்கிறது. செங்கல்பட்டில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த ஆலயம்.

தெய்வீகக் காட்சி

நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது, ரங்கநாயகி உடனாய கஸ்தூரி ரங்கநாதப் பெருமாள் கோவில். இங்கு சயன கோலத்தில் அருளும் இறைவனின் திருமேனி, சாளக்கிராமத்தால் ஆனது என்கிறார்கள். ஆதிசேஷனின் மேல் பள்ளிகொண்டிருக்கும் கோலத்தில் அருள்பாலிக்கிறார். பெருமாளின் அபிஷேகத்திற்காக, ஆதிசேஷனின் மீது தேன், நீர் ஆகியவற்றை விடும்போது, அவை அரங்கனின் நெற்றியில் விழுந்து ஜொலிப்பதைக் காண, கண் கோடி வேண்டும். இந்த தெய்வீகக் காட்சியை தரிசிப்பதற்காகவே பக்தர்கள் பலரும் அங்கு குவிகிறார்கள்.

வித்தியாசமான நம்மாழ்வார்

திருநெல்வேலி - திருச்செந்தூர் செல்லும் சாலையில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, ஆழ்வார் திருநகரி திருத்தலம். இங்கு ஆதிநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. தாயாரின் திருநாமம் ஆதிநாதவல்லி என்பதாகும். இந்த திருத்தலம் ‘திருக்குருகூர்’ என்றும் அழைக்கப்படுகிறது. திருச்சியில் உள்ள திருவரங்கத்தை ‘பூலோக வைகுண்டம்’ என்பார்கள். அதேபோல் ஆழ்வார் திருநகரி ‘பரமபதம்’ என்று சொல்லப்படுகிறது. பொதுவாக பெருமாள் கோவில்களில் வீற்றிருக்கும் நம்மாழ்வார், இரு கைகளையும் கூப்பி வணங்கிய நிலையில்தான் காட்சியளிப்பார். ஆனால் இங்கு உபதேசிக்கும் பாவனையில் ஞான முத்திரையுடன் காட்சி தருகிறார். இந்த வடிவிலான நம்மாழ்வாரை, வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.

சூரியனின் வழிபாடு

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ளது நாகலாபுரம் என்ற திருத்தலம். இதனை வேதநாராயணபுரம் என்றும் அழைப்பார்கள். இங்கு மச்ச அவதாரத்தில் அருள்புரியும் இறைவனை தரிசிக்கலாம். இந்த மூர்த்தியை வருடத்தில் மூன்று நாட்கள், சூரியன் தன்னுடைய ஒளிக்கதிர்களைக் கொண்டு பிரார்த்திக்கிறான். முதல் நாள் இறைவனின் பாதத்திலும், இரண்டாம் நாள் நாபிக் கமலத்திலும், மூன்றாம் நாள் திருமுகத்திலும் சூரிய ஒளி படுகிறது. இது ஒரு அபூர்வ அமைப்பாகும்.

Next Story