ஆன்மிகம்

நற்செயல்கள் தொடரட்டும்... + "||" + Let the good deeds continue

நற்செயல்கள் தொடரட்டும்...

நற்செயல்கள் தொடரட்டும்...
இந்த மாதம் முழுவதும் இறைவனுக்காக நோன்பு வைத்து, தங்கள் கடமையை நிறைவேற்றுவதில், இறையச்சம் கொண்ட நல்லடியார்கள் ஆர்வத்துடன் இருந்தனர்.
புனிதம் நிறைந்த ரமலான் மாதம் விடைபெறப்போகிறது. இந்த மாதம் முழுவதும் இறைவனுக்காக நோன்பு வைத்து, தங்கள் கடமையை நிறைவேற்றுவதில், இறையச்சம் கொண்ட நல்லடியார்கள் ஆர்வத்துடன் இருந்தனர். தொழுகை, திருக்குர்ஆன் ஓதுதல், மனக்கட்டுப்பாடு, பொறுமை, விட்டுக்கொடுத்தல், ஒருவருக்கொருவர் உதவி செய்தல் போன்ற எண்ணற்ற நற்காரியங்களை இந்த ரமலான் மாதத்தில் நாம் செய்து வந்தோம். ரமலான் மாதத்தோடு இந்த நற்செயல்கள் முடிந்துவிடக்கூடாது. இதன்பிறகும் இவை தொடர வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூலம் நமக்கு இறைவன் விதித்துள்ள கட்டளை என்ன என்பதை பின்வரும் இந்த திருக்குர்ஆன் வசனம் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது:

“அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்) பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும்; மேலும் தொழுகையை அவர்கள் நிலைநாட்டவேண்டும்; மேலும் ஜகாத்தை அவர்கள் வழங்க வேண்டும் என்பதைத் தவிர (வேறெதுவும்) அவர்களுக்குக் கட்டளையிடப்படவில்லை. இதுதான் நேரான மார்க்கமாகும்” (திருக்குர்ஆன் 98:5).

மனித வாழ்வின் அடிப்படை நோக்கம் என்ன?

இறைவன் காட்டிய வழியில் இறையச்சத்துடன் வாழ வேண்டும். நற்செயல்கள் புரிந்து நன்மைகளை தேடிக்கொள்ள வேண்டும். இறைக்கட்டளைகளை ஏற்று நடந்து இனிய வாழ்க்கை வாழ்ந்து சொர்க்கம் செல்ல வேண்டும். இதை கீழ்வரும் திருக்குர்ஆன் வசனம் மெய்ப்பிக்கின்றது:

‘எவர்கள் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கின்றார்களோ, அவர்கள் ‘பிர்தவ்ஸ்’ என்னும் சுவனபதிகளில் விருந்தாளிகளாகத் தங்குவார்கள்’ (திருக்குர்ஆன் 18:107).

“வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாக போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும்” என்பது நபிமொழியாகும். (நூல்: முஸ்லிம்)

ஆனால் உண்மையில் நடப்பது என்ன?

மனிதன் இந்த உலக வாழ்க்கையின் மீது அதிக ஆசை கொள்கின்றான். உலகத்தில் உள்ள இன்பங்களை எல்லாம் அனுபவிக்க வேண்டும் என்று துடிக்கின்றான். ஆசைகளை வளர்த்துக்கொண்டு, மனக்கோட்டைகளை கட்டிக்கொண்டு செல்வத்தையும், செல்வாக்கையும் தேடி ஓடி அலைகின்றான். படைத்தவனையும், அவன் காட்டிய நல்ல வழிகளையும் விட்டுவிட்டு வழிகேட்டில் ஈடுபடுகின்றான்.

இந்த உலக வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஏற்ப நிச்சயம் கூலி உண்டு. நற்செயல்கள் செய்தால் மறுமையில் அதற்கு பரிசாக சொர்க்கம் பெறலாம். தீய பாவங்களை செய்தால் அதற்கு தண்டனையாக மறுமையில் கொடிய நரகத்தில் தள்ளப்படுவோம். இதையே திருக்குர்ஆன் இவ்வாறு எச்சரிக்கிறது:

“(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் பகிரங்கமான பாவத்தையும், ரகசியமான பாவத்தையும் விட்டுவிடுங்கள். ஏனென்றால், எவர்கள் பாவத்தை சம்பாதிக்கின்றனரோ அவர்கள் தாங்கள் செய்யும் தீய செயலுக்குத் தக்க பலனை (மறுமையில்) அடைந்தே தீருவார்கள்” (திருக்குர்ஆன் 6:120).

பாவங்களில் இருந்து விடுபட நமக்கு வழிகாட்டுவது தான் ரமலான் நோன்பும், அந்த நோன்புகாலத்தில் நாம் செய்யும் வணக்க வழிபாடுகளும், தான தர்மங்களும். நோன்பாளிகள் செல்வதற்கு என்று ‘ரய்யான்’ எனப்பெயரிடப்பட்டுள்ள சொர்க்கம் உள்ளதாக இறைவன் கூறுகின்றான்.

இதை எல்லாம் கருத்தில் கொண்டு ரமலான் மாதம் முடிந்த பின்னரும் நமது வணக்க வழிபாடுகள், நற்செயல்கள் நம் வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும். இது மிகவும் கடினமான செயலாக இருந்தாலும், இறையச்சம் உள்ளவர்களுக்கு இது கடினமாக இருக்காது என்று திருக்குர்ஆன் இவ்வாறு வழிகாட்டுகிறது:

‘(எத்தகைய கஷ்டத்திலும்) நீங்கள் பொறுமையைக் கைக்கொண்டு, தொழுது (இறைவனிடத்தில்) உதவி தேடுங்கள். ஆனால், நிச்சயமாக இது உள்ளச்சமுடையவர்களுக்கே அன்றி (மற்றவர்களுக்கு) மிகப் பளுவாகவே இருக்கும்’ (திருக்குர்ஆன் 2:45).

இறைவன் மீது நம்பிக்கை கொண்டு செயல்பட்டால் நமக்கு கிடைக்கும் பரிசு என்ன என்பதை திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

‘எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களும் புரிந்தார்களோ அவர்கள் தாம் திண்ணமாக, படைப்பினங்களில் மிகவும் மேன்மை வாய்ந்தவர்கள்’. ‘அவர்களின் கூலி அவர்களுடைய அதிபதியிடம் நிலையாகத் தங்கும் சுவனங்களாகும். அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கி வாழ்வார்கள். அல்லாஹ் அவர்களைக் குறித்து திருப்தியுற்றான். அவர்களும் அவனைக்குறித்து திருப்தியுற்றார்கள். இவை அனைத்தும் தம் இறைவனை அஞ்சக்கூடிய மனிதருக்குரியவையாகும்’. (திருக்குர்ஆன் 98:7,8)

எனவே இந்த புனித ரமலானில் நாம் பின்பற்றிய நற்செயல்களை தொடர்ந்து செய்து, இறையச்சத்துடன் இறைவன் காட்டிய வழியில் வாழ்ந்து, சொர்க்கத்தை பரிசாக பெறுவோம், ஆமீன்.