ஆன்மிகம்

திருமண வரம் தரும் கல்யாண வெங்கடேசப் பெருமாள் + "||" + Kalyana Venkatesh Perumal giving wedding Bless

திருமண வரம் தரும் கல்யாண வெங்கடேசப் பெருமாள்

திருமண வரம் தரும் கல்யாண வெங்கடேசப் பெருமாள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது நார்த்தாம்பூண்டி என்ற ஊர். இந்த திருத் தலத்தில் பிரம்மதேவன் வழிபட்ட திருவுந்தி பெருமாளும், கல்யாண வெங்கடேசப் பெருமாளும் கோவில் கொண்டுள்ளனர்.
ஒரு பிரளய காலத்தின்போது, இந்த பிரபஞ்சம் அனைத்தும் அழிந்தது. அப்போது ஏற்பட்ட வெள்ளத்தில் திருமால், ஆலிலை மீது குழந்தை கண்ணனாக மிதந்து வந்தார். மீண்டும் இந்த பிரபஞ்சத்தை உருவாக்க நினைத்த அவர், தன்னுடைய நாபிக்கமலத்தில் (தொப்புள்) இருந்து பிரம்மனை உருவாக்கினார். அவருக்கு படைப்பு தொழில் புரியும் சக்தியையும் வழங்கினார். அந்த தொழிலை ஏற்ற பிரம்மா, நாராயணருக்கு நன்றி செலுத்தும் விதமாக பூலோகம் வந்து ஒரு கோவிலை அமைத்து வழிபட்டார். அந்த ஆலயமே ‘திருவுந்திப்பெருமாள்’ திருக்கோவில். ‘உந்தி’ என்பது வயிறைக் குறிக்கும். பிரம்மன் வெளிப்பட்ட பகுதி என்பதால், இந்த பெருமாளுக்கு அந்தப் பெயர் வந்தது. ஆரம்ப காலத்தில் இந்த ஊர், பிரம்மனின் நான்கு முகத்தைக் குறிப்பிடும் வகையில் ‘சதுர்முகன்புரி’ என்றே அழைக்கப்பட்டு வந்துள்ளது. அதன்பிறகே ‘நார்த்தாம்பூண்டி’ என்ற பெயர் வந்திருக்கிறது. அதற்கான காரணத்தையும் பார்ப்போம்.

ஒரு முறை சாபத்தின் காரணமாக, பிரம்மனின் மகனான நாரத முனிவர் பூலோகத்தில் பிறக்க நேர்ந்தது. அந்த சாபம் தீர, அவர் திருவுந்திப் பெருமாளை நந்தவனம் அமைத்து வழிபட்டார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு, திருமால் நாரதருக்கு காட்சிகொடுத்தார். மேலும் அவரது சாபத்தையும் நீக்கி அருளினார். நாரதர் தங்கி வழிபட்டதன் காரணமாக, சதுர்முகன்புரி என்ற இந்த ஊர் ‘நாரதர் பூண்டி’ என்று வழங்கப்பட்டு, பின்னாளில் ‘நார்த்தாம்பூண்டி’ என்று மாறியிருக்கலாம் என்கிறது ஊர் வரலாறு.

பன்னிரண்டாம் நூற்றாண்டில் இந்தப் பகுதியை ஆண்ட சம்புவராயர் காலத்தில், இங்கு கோவில் அமைக்கப்பட்டிருக்கிறது. 16-ம் நூற்றாண்டில் சில படையெடுப்பு காரணமாக கோவில் சிதிலமடைந்தது. அதன்பிறகு பெருமாளுக்கு புதிய கோவில் கட்டப்பட்டது. அப்போது ஸ்ரீதேவி - பூதேவி உடனாய பெருமாள் சிலை புதியதாக அமைக்கப்பட்டது. அதற்கு கல்யாண வெங்கடேசப் பெருமாள் என்று பெயர் சூட்டப்பட்டது. இரண்டு பெருமாள்கள் அருளும் இந்த ஆலயம் மிகவும் சிறப்புக்குரியதாக விளங்குகிறது.

இங்கு பத்மாவதி தாயார், ஆண்டாள் நாச்சியார் ஆகியோருக்கும் தனித்தனி சன்னிதிகள் உள்ளன. இது ஒரு திருமண தடைநீக்கும் திருத்தலமாக விளங்குகிறது. இங்குள்ள கல்யாண வெங்கடேசப் பெருமாளுக்கு, மட்டைத் தேங்காய் வைத்து பக்தர்கள் வழிபடுகின்றனர். கோவிலில் நீராடிவிட்டு ஈரத்துணியுடன் கல்யாண வெங்கடேசருக்கு மட்டை தேங்காய் வைத்து வழிபட்டு, கோவிலை 27 முறை வலம் வந்தால் மணவாழ்வு அடுத்த மாதமே அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறியதும் தம்பதி சமேதராக இங்கு வந்து வழிபடுபவர்களின் எண்ணிக்கை இந்த பெருமாளின் பெருமையை பறைசாற்றுகிறது.

அமைவிடம்
திருவண்ணாமலையில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் சுமார் 18 கிலோமீட்டர் தூரத்தில் நாயுடுமங்கலம் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள கூட்டுரோட்டில் 5 கிலோமீட்டர் தூரம் சென்றால் நார்த்தாம்பூண்டியை அடையலாம்.