ஆன்மிகம்

தியாகங்களை நினைவூட்டும் திருநாள் + "||" + Feast commemorating sacrifices

தியாகங்களை நினைவூட்டும் திருநாள்

தியாகங்களை நினைவூட்டும் திருநாள்
உலக வாழ்வை ‘சோதனைக்களம்’ என்கிறது இஸ்லாம். இறைநம்பிக்கை, இறைவனுக்கு அடிபணிதல், இறைவன் கூறியபடி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுதல் போன்றவற்றை சோதிக்கும் இடமாக உலகம் படைக்கப்பட்டுள்ளது. இதைப் பல இடங்களில் திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது.
“உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான், மேலும் அவன் (யாவரையும்) மிகைத்தவன், மிக மன்னிப்பவன்”. (திருக்குர் ஆன் 67:2)

இஸ்லாமியர்கள் கொண்டாடும் பக்ரீத் பெருநாளை கொண்டாட்டம் என்ற பார்வையில் இலகுவாகக் கடந்து விட இயலாது. அது, இறைவனின் கட்டளையை ஏற்று, பிரியமான மகனைப் பலி கொடுக்க துணிந்த ஒரு குடும்பத்தாரின் அர்ப்பணிப்பு மற்றும் இறை நம்பிக்கையின் பிரதிபலிப்பாகும்.

இறைநம்பிக்கையின் ஆத்மார்த்தமான பொருள் என்ன? என்பதை உலகத்திற்கு உணர்த்த தந்தை, தாய் மற்றும் மகனை இறைவன் சோதனைக்கு உள்ளாக்கினான். இந்த சோதனையில் அவர்கள் பெற்ற வெற்றிகளை ஏற்றுக்கொண்டு, அந்த செயலை இறை வணக்கமாக மாற்றியதன் நிகழ்ச்சி தான் தியாகத் திருநாளாக (பக்ரீத் பண்டிகையாக) பார்க்கப்படுகிறது.

இறைவனின் தூதுவர்களில் ஒருவர் இப்ராகிம் (அலை). அவருக்கு திருமணமாகி பல வருடங்களுக்குப் பிறகு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு இஸ்மாயீல் எனப் பெயரிடப்பட்டது. இப்ராகிம் நபியின் குடும்பத்தினரைச் சோதிக்க இறைவன் விரும்பினான்.

இஸ்மாயீல் பால்யப் பருவத்தை எட்டியிருந்த பொழுது, அவரைத் தனக்குப் பலியிடுமாறு, இப்ராகிம் அவர்களுக்குக் கனவில் கட்டளையிட்டான் இறைவன். தன் பாசம் முழுக்க கொட்டி வளர்க்கும் மகனை இறைவன் பலியிட கூறுகிறானே! என்று கிஞ்சிற்றும் யோசிக்காமல். கண்ட கனவை மகன் இஸ்மாயீலிடம் தெரிவித்தார் இப்ராகிம் நபி.

இது இறைவனின் கட்டளை என்பதால் தன்னை பலியிட முழுமனதுடன் அனுமதி கொடுத்தார் மகன் இஸ்மாயீல். இறைவனின் கட்டளையை நிறைவேற்றத் துணிந்த நேரத்தில், இப்ராகிம் நபியின் இறையச்சம், இறைவனுக்கு அடிபணியும் தன்மையைக் கண்டு வியந்து இறைவன் தடுத்து நிறுத்திய சம்பவத்தை இவ்வாறு திருக்குர்ஆன் காட்சிப்படுத்துகிறது.

“பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: ‘என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக’. (மகன்) கூறினான்; “என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்”. (திருக்குர்ஆன் 37:102)

மனித ரத்தமோ, பிராணிகளின் ரத்தமோ இறைவன் விரும்பவில்லை. முழுமையான இறையச்சத்தை சோதிப்பதற்காக இந்த நிகழ்வை நடத்திக் காட்டினான் இறைவன்.

“(எனினும்), குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லை; ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்; அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்தும் பொருட்டு - இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; ஆகவே நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக” (திருக்குர்ஆன் 22:37)

தங்களை இறைவனுக்காக முற்றிலும் அர்ப்பணித்த இப்ராகிம் நபி, அவரது மனைவி மற்றும் மகன் இஸ்மாயீல் நபியின் பொறுமை, இறைவனுக்காக எதையும் விட்டுக் கொடுக்க முன்வருதலை உலக மக்கள் அறிந்து கொள்ள வேண்டுமென அல்லாஹ் விரும்பினான். இதனால் தான், இஸ்லாமியக் கடமைகளில் ஐந்தாம் கடமையான ஹஜ் கடமையின் போது குர்பானி கொடுக்க வேண்டும் என்பதன் மூலம் தன் அங்கீகாரத்தை வெளிப்படுத்தினான் இறைவன்.

சோதனைக் களமான உலகில் மனிதகுல எதிரியான ஷைத்தானின் பிடியில் சிக்கிப் போகாமல் இறைவனின் பொருத்ததைப் பெற இறைநம்பிக்கை, இறைபக்தியின் நிழல்களில் நம் வாழ்வை அமைத்துக்கொண்டு வெற்றிபெறுவோம்.

- ஏ.எச். யாசிர் அரபாத் ஹசனி, லால்பேட்டை.