மகிழ்ச்சி தரும் மகாளய பட்சம்


மகிழ்ச்சி தரும் மகாளய பட்சம்
x
தினத்தந்தி 22 Sept 2021 9:29 PM IST (Updated: 22 Sept 2021 9:29 PM IST)
t-max-icont-min-icon

மறைந்த நமது முன்னோர்கள் மொத்தமாக ஒருசேரக் கூடும் காலமே ‘மகாளய பட்சம்’ என்று சொல்லப்படுகிறது.

அமாவாசை தினத்தன்று, நம்முடைய முன்னோர்கள் பூமிக்கு வருகை தருவார்கள். அப்போது தங்கள் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை ஏற்று, மன திருப்தியுடன் அவர்களுக்கு ஆசிர்வாதங்களை வழங்குவார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த நாட்களில் சிரத்தையோடு அவர்களை வழிபட்டால், நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் ஆரோக்கியம், இன்பம் போன்ற அனைத்து நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அமாவாசைகளில் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ‘மகாளய’ என்பதற்கு ‘கூட்டாக வருதல்’ என்று பொருள். மறைந்த நமது முன்னோர்கள் மொத்தமாக ஒருசேரக் கூடும் காலமே ‘மகாளய பட்சம்’ என்று சொல்லப்படுகிறது. ‘பட்சம்’ என்பது 15 நாட்களை குறிப்பதாகும். அதாவது தங்களுடைய சந்ததியினர் அளிக்கும் வரவேற்பை ஏற்பதற்காக, நம் முன்னோர்கள் 15 நாட்கள் நம்முடன் தங்கும் காலத்தையே ‘மகாளய பட்சம்’ என்கிறார்கள்.

புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள் வரும் பிரதமை திதியில் தொடங்கி, அமாவாசை வரையான 15 நாட்களே ‘மகாளய பட்சம்’ ஆகும். புரட்டாசி மாதத்தில் வரக் கூடிய அமாவாசையே, ‘மகாளய அமாவாசை’ என்று அழைக்கப்படுகிறது. சாதாரண அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கப்படும். ஆனால், மகாளய பட்ச அமாவாசை தினத்தில், தாய்வழி மற்றும் தந்தைவழி முன்னோருக்கு மட்டுமின்றி, நம் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பங்காளிகள் உள்ளிட்ட அனைவருக்கும் இன்றைய தினத்தில் தர்ப்பணம் கொடுப்பதே மகாளய அமாவாசையின் தனிச்சிறப்பாகும்.

மகாளய பட்சம் எனப்படும் 15 நாட்களுமே, நம்முடைய முன்னோர்களுக்காக தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷம். அப்படி செய்ய முடியாதவர்கள், மகாளய அமாவாசை தினத்திலாவது, பக்தியுடனும், நம்பிக்கையுடனும் தர்ப்பணம் செய்வது நல்ல பலனைத் தரும்.

மகாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகளை இங்கே பார்க்கலாம்.

1-ம் நாள் - பிரதமை திதி - செல்வம் சேரும்.

2-ம் நாள் - துதியை திதி - பெயர் சொல்லும் குழந்தைகள் பிறப்பர்.

3-ம் நாள் - திருதியை திதி - நினைத்த காரியங்கள் நிறைவேறும்

4-ம் நாள் - சதுர்த்தி திதி - பகை விலகும்.

5-ம் நாள் - பஞ்சமி திதி - அசையா சொத்து சேரும்.

6-ம் நாள் - சஷ்டி திதி - பேரும், புகழும் தேடி வரும்.

7-ம் நாள் - சப்தமி திதி- தகுதியான பதவிகள் கிடைக்கும்.

8-ம் நாள் - அஷ்டமி திதி -அறிவு கூர்மை பெறும்.

9-ம் நாள் - நவமி திதி - நல்ல வாழ்க்கைத் துணை அமையும்.

10-ம் நாள் - தசமி திதி - நீண்ட நாள் ஆசை நிறைவேறும்.

11-ம் நாள் - ஏகாதசி திதி - கல்வி, கலைகளில் வெல்வீர்கள்.

12-ம் நாள் - துவாதசி திதி - ஆபரணங்கள் சேரும்.

13-ம் நாள் - திரயோதசி திதி - விவசாயம் மற்றும் தொழில் செழிக்கும்.

14-ம் நாள் - சதுர்த்தசி திதி - பாவம் கழியும். வாரிசுகளுக்கு நன்மை உண்டாகும்.

15-ம் நாள் - மகாளய அமாவாசை - அத்தனை பலன்களும் நமக்குக் கிடைக்க, நமது முன்னோர்களின் பரிபூரண ஆசி கிடைக்கும்.

Next Story