நேர்மையான வணிகம்
பொருள்கள்தான் இன்று வாழ்க்கையை தீர்மானிக்க கூடியதாக இருக்கிறது. கொடுப்பதும்-வாங்குவதும்தான் உலகத்தை இயக்கிக் கொண்டிருக்கின்றன. அந்த வணிகத்திற்கு முக்கிய இடத்தை இஸ்லாம் வழங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
திருக்குர்ஆனில் சுமார் ஒன்பது இடங்களில் வணிகம், வியாபாரம் குறித்து பேசப்பட்டிருக்கின்றன. மத்யன்வாசிகள் என்ற சமூகத்திற்கு அளவையில் சரியாக அளந்துகொடுக்க வேண்டும் என்பதைப் பயிற்றுவிக்க சுஐப் எனும் இறைத்தூதரையே அந்த சமூக மக்களுக்கு இறைவன் அனுப்பி வழிகாட்டியிருக்கிறான் என்றால் வணிகத்திற்கு இஸ்லாம் வழங்கும் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளலாம்.
இவ்வளவு ஏன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே மிகப்பெரிய வணிகர்தான். தனது இளமைக்காலத்தின் பெரும்பகுதியை வணிகம் சார்ந்த பயணத்திற்காக அவர் செலவளித்திருக்கிறார். வணிகத்திற்காக நான்கு முறை ஏமனுக்கும், இரண்டு முறை ஷாம் நாட்டிற்கும் சென்று வந்திருக்கிறார்.
வியாபாரத்தில் நேர்மையாளர், உண்மையாளர், நம்பிக்கையாளர் என்ற நற்பெயர் பெற்று சிறந்து விளங்கியவர் நபியவர்கள். அந்த காலத்தில் வணிகர்கள், தரகர்கள் என்றே அழைக்கப்பட்டு வந்தனர். நபியவர்கள்தான் வணிகர் (துஜ்ஜார்) சமுதாயமே! என முதலில் அழைத்தார்கள். வணிகர்களுக்கு உண்டான முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்தினார்கள். நேர்மையுடனும், நீதியுடனும் நடந்துகொள்ள வலியுறுத்தினார்கள்.
‘உண்மை பேசி நாணயத்துடன் நடந்துகொள்ளும் ஒரு வணிகர், மறுமை நாளில் நபிமார்கள், உண்மையாளர்கள், இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவர்கள் ஆகியோருடன் இருப்பார்கள்' என்று நபியவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: திர்மிதி).
‘விற்பதிலும், வாங்குவதிலும் மென்மையாக நடந்துகொண்ட மனிதரை சுவர்க்கத்தில் அல்லாஹ் நுழைய வைப்பான்’ எனவும், ‘கொள்முதல் செய்வதிலும், விற்பனை செய்வதிலும், கடனைக் கோருவதிலும் மென்மையுடனும், நற்பண்புடனும் நடந்து கொள்ளும் மனிதர்மீது அல்லாஹ் அருள்பொழிவான்' எனவும் நபியவர்கள் வாக்குறுதி தருகிறார்கள்.
வியாபாரத்தில்; வணிகத்தில் வெற்றிபெற வேண்டுமானால் நேர்மையாக செயல்பட முடியாது என்று பலரும் நினைக்கிறார்கள். ஒருபொருள் சேதமடைந்திருக்கிறது என்று சொன்னால் அந்தப்பொருளை விற்கக்கூடாது அல்லது அந்த பொருளை விற்கும்பொழுது வாங்குபவர்களிடம் அது சேதமடைந்த விவரத்தை கூறிவிட்டுதான் விற்க வேண்டும். இதுதான் இஸ்லாம் சொல்லும் வழிமுறை.
இது இன்று பின்பற்றப்படுகிறதா? பொருள் சேதமடைந்திருந்தாலும் பசைபோட்டு ஒட்டி யாருக்காவது விற்று காசாக்குகிறார்கள். காலாவதியாகிவிட்ட பொருளை யாருக்கு தெரியப்போகிறது என்று விற்று காசாக்குகிறார்கள். பொருள்களில் கலப்படம் செய்து விற்று காசாக்குகிறார்கள். எடை குறைவாக போட்டு விற்று காசாக்குகிறார்கள். பொருட்களை பதுக்கி வைத்து தட்டுப்பாடு வரும்போது விற்று காசாக்குகிறார்கள். இப்படித்தான் வணிகம் போய்க்கொண்டிருக்கிறது. இப்படி செய்வதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.
‘அளவையிலும், நிறுவையிலும் மோசடி செய்பவர்களுக்கு கேடு உண்டாகும்' என்று திருக்குர்ஆன் எச்சரிக்கை செய்கிறது. ‘பதுக்கல் செய்பவன் பாவியாவான்' என்று நபியவர்கள் கூறுகிறார்கள்.
நபியவர்கள் சொன்னார்கள் ‘மக்களுக்கு ஒரு காலம் வரும். அப்போது ஒரு மனிதர் தாம் சம்பாதித்தது அனுமதிக்கப்பட்ட (ஹலாலான) வழியிலா, அனுமதிக்கப்படாத (ஹராமான) வழியிலா என்பதைப் பொருட்படுத்தமாட்டார்கள்' (நூல்: புகாரி).
ஒருமுறை நபியவர்களை பார்த்து ‘யாவற்றிலும் சிறந்த சம்பாத்தியம் எது?’ என்று வினவப்பட்டது. அதற்கு நபியவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள் ‘ஒருவன் தன் கையால் உழைப்பதும், மோசடி செய்யாமல், பொய் பேசாமல் இருப்பதும் ஒருவன் நடத்தும் வணிகமும் தான்' (நூல்: முஸ்னது அஹ்மத்).
நபிகளாரின் கூற்றுப்படி சிறந்த சம்பாத்தியமாக நேர்மையான வணிகம் இருக்கிறது. நபியவர்களின் வலியுறுத்தலின்படி வணிகத்தை, வியாபாரத்தை மோசடி செய்யாமல் நேர்மையுடன் நடத்த வேண்டும். இன்னும் சொல்லப்போனால் வணிகத்தை தர்மத்துடன் கலந்து நடத்த வேண்டும். இதுவே இறைவனின் விருப்பமாகும். நபியவர்களின் வழிமுறையாகும்.
Related Tags :
Next Story