சுத்தமான ரெயில்கள்


சுத்தமான ரெயில்கள்
x
தினத்தந்தி 21 Dec 2016 8:30 PM GMT (Updated: 2016-12-21T18:07:30+05:30)

நாட்டில் மக்களின் போக்குவரத்தில் ரெயில்வேதான் முக்கிய பங்காற்றுகிறது. ரெயில்வே நிர்வாகத்தை பொறுத்தமட்டில், நாடு முழுவதிலும் 16 மண்டலங்கள் இருக்கின்றன. இதில், சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்குவது தென்னக ரெயில்வேயாகும். 6 கோட்டங்களைக் கொண்ட தென்னக

நாட்டில் மக்களின் போக்குவரத்தில் ரெயில்வேதான் முக்கிய பங்காற்றுகிறது. ரெயில்வே நிர்வாகத்தை பொறுத்தமட்டில், நாடு முழுவதிலும் 16 மண்டலங்கள் இருக்கின்றன. இதில், சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்குவது தென்னக ரெயில்வேயாகும். 6 கோட்டங்களைக் கொண்ட தென்னக ரெயில்வேயில், 736 ரெயில் நிலையங்கள் இருக்கின்றன. 250 எக்ஸ்பிரஸ் ரெயில்களும், 330 பாசஞ்சர் ரெயில்களும், சென்னையில் ஏராளமான மின்சார ரெயில்களும் ஓடிக் கொண்டிருக்கின்றன. நாட்டிலேயே 2–வது பெரிய ரெயில்வே மண்டலமாக தென்னக ரெயில்வே ஏராளமான பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்கிறது. 3–வது பெரிய ரெயில்வே மண்டலமாக வருவாயை ஈட்டித் தருகிறது. கடந்த ஆண்டு மட்டும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 6 கோடியே 60 லட்சம் பயணிகளும், பதிவு செய்யப்படாத பெட்டிகளில் 34 கோடியே 60 லட்சம் பயணிகளும் பயணம் செய்திருக்கிறார்கள். இந்த ஒரே ஆண்டு மட்டும் ரூ.4 ஆயிரத்து 552 கோடி பயணிகள் ரெயில் மூலம் வருவாயாக ஈட்டித் தந்திருக்கிறது.

தென்னக ரெயில்வே என்பது தமிழ்நாடு, புதுச்சேரி மட்டுமல்லாமல், ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களிலுள்ள முக்கிய பகுதிகளில் உள்ள ரெயில் நிலையங்களையும் இணைத்துள்ள மண்டலமாகும். இவ்வளவு சிறப்புகளையும் பெற்ற தென்னக ரெயில்வேயின், ரெயில் நிலையங்களிலும், ரெயில்களிலும் ‘சுத்தம் குறைவு’ என்று அதிர்ச்சியான தகவல்கள் வந்திருக்கின்றன. டெல்லியிலுள்ள ரெயில்வே வாரியம் ரெயில் நிலையங்களிலும், ரெயில்களிலும் தூய்மை பராமரிப்பு எப்படி மேற்கொள்ளப்படுகிறது? என்பது குறித்து ஒரு உயர்மட்ட ஆய்வை நடத்தியது. இதில் நாட்டிலேயே பயணிகளிடம் சுத்தம் தொடர்பாக அதிக புகார்களைப் பெற்ற 3 மண்டலங்களில், தென்னக ரெயில்வே ஒன்றாக கருதப்பட்டது. இதுமட்டுமல்லாமல், தென்னக ரெயில்வேயும், மேற்குமண்டல ரெயில்வேயும் ஓடும் ரெயில்களில் சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்வதிலும் மிகவும் பின்தங்கியிருக்கின்றன. ரெயில்வேயில் பெரும்பான்மையான பணிகள் இப்போது தனியாருக்கு கொடுக்கப்பட்டுள்ளன. இதில், சுத்திகரிப்பு பணியும் ஒன்றாகும். மற்ற ரெயில்வேக்களில் இந்த கண்காணிப்பு பணிகள் மிகவும் சிறந்த நடைமுறைகளோடு இயங்குகிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அதை கருத்தில் கொண்டு, இதுபோல சுத்திகரிப்பு பணிக்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ள காண்டிராக்டர்கள் மிகவும் தரமான முறையில் தங்கள் பணிகளை மேற்கொள்வதை கண்காணிக்க வேண்டும். அவர்கள் பணி திருப்தியாக இல்லையென்றால், 3 எச்சரிக்கைகள் கொடுத்த பிறகு காண்டிராக்ட்டை ரத்து செய்து, அவர்கள் கொடுத்த டெபாசிட் தொகையையும் இழக்க வைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ரெயில் நிலையங்களை பொறுத்தமட்டில், கண்காணிப்பு கேமராக்கள் மூலம் சுத்திகரிப்பு பணியை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். சுத்திகரிப்பு பணியில் ஈடுபடும் பணியாளர்கள் வேலைக்கு வருவதை உறுதிப்படுத்த ‘பயோமெட்ரிக்’ வருகை முறையை பின்பற்ற வேண்டும் என்று பல அறிவுறுத்தல்களைக் கூறியுள்ளது. அதிக வருவாயை ஈட்டித் தரும் தென்னக ரெயில்வேயில், அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் தென்னக ரெயில்வேயில் இனி முக்கியப் பணியாக, தூய்மைப் பணியை மேற்கொள்வதில் அதிகாரிகள் முனைப்பு காட்ட வேண்டும். சுத்தமான பயணம் தான் சுகமான பயணம் என்ற வகையில், பயணிகள் தங்கள் பயணத்தின் போது, ரெயில் நிலையங்களில் சுத்தமான ஒரு சூழ்நிலை வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். இது பயணிகள் ஒத்துழைப்பிலும் இருக்கிறது. அடுத்த 1½ மாதங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு பொதுபட்ஜெட்டுடன் ரெயில்வே பட்ஜெட் இணைக்கப்பட்டு, ஒரே பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட இருக்கிறது. நேற்று முன்தினம் நிதிமந்திரி, ரெயில்வேயைப் பொறுத்தமட்டில் கவர்ச்சிகரமான அறிவிப்புகளுக்கு முக்கியத்துவம் இருக்காது. செயல்பாட்டுக்குத்தான் அதிக முக்கியத்துவம் இருக்கும் என்று கூறியிருக்கிறார். இதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு பயணிக்கும் ஆகும் ஒவ்வொரு ரூபாய் பயண செலவிலும், 57 காசுகள்தான் டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இனி அவர்களுக்கான சேவைகளுக்கு பணம் கட்ட வேண்டியதிருக்கும் என சூசகமாக ரெயில் கட்டண உயர்வு இருக்கும் என்பதை தெரிவித்து விட்டார். ரெயில் பயணமும், வசதிகளும் நிறைவாக இருப்பதை உறுதி செய்து விட்டு, டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுவதை ரெயில் பயணிகள் நிச்சயமாக பொருட்படுத்தமாட்டார்கள்.


Next Story