தமிழ்நாடு ஒரு வறட்சி மாநிலம்


தமிழ்நாடு  ஒரு  வறட்சி  மாநிலம்
x
தினத்தந்தி 28 Dec 2016 9:30 PM GMT (Updated: 28 Dec 2016 1:56 PM GMT)

‘சோதனைமேல் சோதனை, போதுமடா சாமி’ என்பதுபோல, தமிழ்நாடு இயற்கை பாதிப்பால் மிகவும் அல்லலுற்றிருக்கிறது. தென்மேற்கு பருவமழை ஏமாற்றிவிட்டது.

‘சோதனைமேல் சோதனை, போதுமடா சாமி’ என்பதுபோல, தமிழ்நாடு இயற்கை பாதிப்பால் மிகவும் அல்லலுற்றிருக்கிறது. தென்மேற்கு பருவமழை ஏமாற்றிவிட்டது. தென்மேற்கு பருவமழையால் நமக்கு மட்டும் பாதிப்பில்லாமல், தமிழ்நாட்டில் ஓடும் பல ஆறுகளுக்கு தண்ணீர் தரும் அண்டை மாநிலங்களிலும் சரிவர பெய்யாததால், தமிழ்நாட்டுக்கு அதன் பாதிப்பு எதிரொலித்தது. அதனால்தான், வழக்கமாக ஜூன் 12–ந் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. அடுத்து வடகிழக்கு பருவமழை கைகொடுக்கும், நம் துன்பங்களெல்லாம் மாறிவிடும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் குடிநீருக்காகவும், விவசாயத்துக்காகவும் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். வடகிழக்கு பருவமழை காலம் முடியும் நேரத்தில், இதுவரை மழைபெய்யாத காரணத்தினால் வடகிழக்கு பருவமழையும் பொய்த்துவிட்டது என்றே கூறலாம்.

புத்தாண்டு பிறக்கப்போகிறது. இந்த புத்தாண்டில் குடிநீருக்காகவும், விவசாயத்துக்காகவும் தண்ணீரைத்தேடி என்ன செய்யப்போகிறோம்?, அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? என்பதை நினைத்தால் பயமாக இருக்கிறது. நேற்றைய சூழ்நிலையில், பெரும்பாலான அணைகளில் 30 சதவீதம், ஏறத்தாழ மூன்றில் ஒருபங்குகூட தண்ணீர் இல்லை. மேட்டூர், பவானிசாகர், அமராவதி, பெரியாறு, வைகை, பாபநாசம், மணிமுத்தாறு, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, கிருஷ்ணகிரி, சாத்தனூர், சோலையாறு, பரம்பிக்குளம், ஆழியாறு, திருமூர்த்தி போன்ற பெரிய அணைகளிலுள்ள நீர்மட்டத்தைப்பார்த்தால், ஜனவரிக்கு பிறகு தண்ணீர் இருக்குமோ?, அல்லது விளையாட்டு மைதானம்போல ஆகிவிடுமோ? என்ற ஒரு துயரமான நிலையே நிலவுகிறது. மாநிலம் முழுவதும் விவசாயம் பொய்த்துப்போய்விட்டது. காவிரி டெல்டா மாவட்டங்களை எடுத்துக்கொண்டால், ஜூன் 12–ந் தேதி திறக்க வேண்டிய மேட்டூர் அணை 100 நாட்கள் தாமதமாக செப்டம்பர் 20–ந் தேதிதான் திறக்கப்பட்டது, பயிர்கள் எல்லாம் கருகிக்கொண்டிருக்கிறது. நிலத்தடிநீர் வைத்திருப்பவர்கள் மட்டும் கஷ்டப்பட்டு பயிர்களை காப்பாற்ற முயற்சிக்கிறார்கள்.

இந்த நிலையில், தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்கவேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்றுவருகிறது. திருவாரூர் கலெக்டர் அலுவலகத்துக்கு முன்பு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நடந்த முற்றுகை போராட்டத்தின்போது, மகாலிங்கம் என்ற விவசாயி மாரடைப்பால் இறந்திருக்கிறார். பயிர்கள் கருகுவதைப்பார்த்து மனம் உடைந்ததாலும், தற்கொலை செய்துகொண்டதாலும், 40–க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்த நிலையில், தமிழ்நாட்டை வறட்சியால் பாதித்த மாநிலமாக அறிவிப்பது குறித்து தமிழக அரசு விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. நாட்டில் நிலவும் சூழ்நிலையை பார்த்தால், தமிழக அரசும் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, வறட்சியால் பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்பது நியாயமாக இருக்கிறது. மத்திய அரசாங்கத்திடம் தேவையான நிவாரண உதவிகளைப்பெற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால், பருவமழை முடிந்து 50 சதவீதத்துக்கும் குறைவான மழை பெய்தால்தான், வறட்சி மாநிலமாக அறிவிக்க தமிழக அரசு பரிசீலிக்க முடியும். இப்போது ஏறத்தாழ 38 சதவீதம்தான் மழை பெய்திருக்கிறது. அடுத்த 2 நாட்களுக்குள் நிச்சயமாக பெரிய மழைவர வாய்ப்பில்லை. எனவே, நிச்சயமாக வறட்சி மாநிலமாக அறிவிக்க சாத்தியம் இருக்கிறது. மத்திய அரசாங்கத்திடம் நிவாரணம் கேட்கும்போது நிலைமையை ஆராய ஒரு உயர்மட்டக்குழுவை அனுப்பும். அதன்படி, உயர்மட்டக்குழுவிடம் தமிழ்நாடு முழுவதும் நிலவும் வறட்சியைக்காட்டி, மத்திய அரசாங்கத்திடம் பெரும் நிதியை வாங்க தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும். வறட்சியால் பாதித்த மாநிலமாக அறிவித்தால், விவசாயிகளுக்கு பல்வேறு நிவாரண உதவிகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அவர்கள் வாங்கிய பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்யவோ, அல்லது திருப்பிக்கட்டுவதை தள்ளிவைக்கவோ முடியும். ஏற்கனவே, வங்கிகளில் வாங்கிய பயிர்க்கடன்களை திரும்பச் செலுத்த மத்திய அரசு டிசம்பர் 31–ந் தேதியிலிருந்து மேலும் 2 மாதம் காலஅவகாசம் கொடுத்திருக்கிறது. விளைச்சல் இல்லாத நிலையில், எவ்வாறு பயிர்க்கடன்களை கட்டுவார்கள் என்பதை கருத்தில்கொண்டு, மத்திய அரசாங்கம் தமிழக விவசாயிகளுக்கு பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்யவும் முன்வரவேண்டும்.

Next Story