ஆறுதல் பரிசா?, ஊக்கப்பரிசா?


ஆறுதல் பரிசா?, ஊக்கப்பரிசா?
x
தினத்தந்தி 3 Jan 2017 9:30 PM GMT (Updated: 2017-01-03T22:39:36+05:30)

கடந்த நவம்பர் 8–ந் தேதி முதல் இன்று வரை பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கும், பணத்தை வங்கியில் டெபாசிட் செய்வதற்கும், வங்கியில் தங்கள் கணக்கிலுள்ள பணத்தை எடுப்பதற்கும், ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பதற்கும் நீண்டவரிசை என்று 50 நாட்களுக்கும் மேலாக மக்கள் கால்கடுக்க நின்று வாழ்க்கையை கழித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

டந்த நவம்பர் 8–ந் தேதி முதல் இன்று வரை பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கும், பணத்தை வங்கியில் டெபாசிட் செய்வதற்கும், வங்கியில் தங்கள் கணக்கிலுள்ள பணத்தை எடுப்பதற்கும், ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பதற்கும் நீண்டவரிசை என்று 50 நாட்களுக்கும் மேலாக மக்கள் கால்கடுக்க நின்று வாழ்க்கையை கழித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

‘‘இது ஒரு தற்காலிக வலி. ஆனால், நிரந்தரபலன் கிடைக்கும் என்று அரசு சொன்னாலும், இப்போதும் நான் வலியை அனுபவித்துக்கொண்டேதான் இருக்கிறேன்’’ என்று மக்கள் கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். கடந்த டிசம்பர் 31–ந் தேதி மாலை பிரதமர் மோடி, நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர், ‘மக்கள் படும் கஷ்டத்தை உணர்ந்து, அவர்களுக்கு ஆறுதல் பரிசா?, ஊக்கப்பரிசா? என்று சொல்லும் அளவில் சில சலுகைகளை வெளியிட்டார். விவசாயிகள், மூத்த குடிமக்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வைத்திருப்பவர்கள், பெண்கள், கிராமங்களில் உள்ள ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் எல்லோருக்கும் பயனளிக்கும் வகையிலும் சில அறிவிப்புகளை வெளியிட்டார். ‘பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா’ என்ற திட்டத்தில், வீடுவாங்க கடன் வாங்குபவர்களுக்கு இதுவரை 9 சதவீத வட்டியில் கடன் வழங்கப்பட்டு வந்தது. இந்த கடன் விகிதத்தை 4 சதவீதம் குறைத்துள்ளார். இதுபோல, ரூ.12 லட்சம் வீட்டுக்கடன் வாங்குபவர்களுக்கு 3 சதவீதம் அவர்களின் வட்டியை தள்ளுபடி செய்துள்ளார். கிராமங்களிலுள்ள ஏழைகள் புதிதாக வீடு கட்டுவதற்கு என்றாலும், ஏற்கனவே வீடு வைத்து அதை விரிவாக்க வேண்டுமென்றாலும் சரி, ரூ.2 லட்சம் கடன் 3 சதவீத வட்டியில் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார். இந்த கடன்தொகை பெறுவதற்கான வரம்பு ஆண்டுக்கு ரூ.6 லட்சமாகும். அதாவது, மாதம் ரூ.50 ஆயிரம் வரை வருமானம் பெறுபவர்கள் இந்த வட்டிசலுகையை அனுபவித்துக்கொள்ளலாம். நிச்சயமாக இது சரிந்துகிடக்கும் ரியல் எஸ்டேட் தொழிலை கைதூக்கிவிட உதவும். இந்தத்திட்டத்துக்கான வழிமுறைகள், எத்தனை பேருக்கு வழங்கப்படும், எங்கு இதற்காக விண்ணப்பிக்க வேண்டும் என்பது போன்ற விவரங்களை இன்னும் பல நடுத்தர வர்க்கத்தினர், ஏழை மக்கள், கிராமங்களில் உள்ளவர்களுக்கு தெரியாமல் இருக்கிறது. இதை அவர்களுக்கு தெரிவிக்கும் வகையில், மத்திய அரசு மிக விரிவாக இதை விளம்பரப்படுத்த வேண்டும்.

இதேபோல, விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்களுக்கு 60 நாட்கள் வட்டி ரத்து. சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடன் உத்தரவாத வரம்பு ரூ.2 கோடியாக உயர்த்தப்படும். அவர்களுக்கு வங்கிகள் வழங்கும் கடன்உதவி 20 முதல் 25 சதவீதம் உயர்த்தப்படும். கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.6 ஆயிரம் மானிய உதவித்தொகை வழங்கப்படும். மூத்த குடிமக்களின் வங்கி டெபாசிட்டுக்கு 10 ஆண்டுகளுக்கு ரூ.7.5 லட்சம்வரை 8 சதவீத வட்டி வழங்கப்படும் என்பதுபோன்ற பல அறிவிப்புகளை வெளியிட்டார். மருத்துவமனைகளில் பிரசவம் பார்க்கும் ஏழை பெண்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த ரூ.4 ஆயிரம் நிதிஉதவி, ரூ.6 ஆயிரமாக உயர்த்தப்பட்டு, அவர்கள் வங்கிகணக்கில் செலுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதிஉதவி திட்டத்தின்கீழ், தமிழக அரசு சார்பில் ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு மூன்று தவணைகளில் ரூ.12 ஆயிரம் வழங்கப்படுகிறது. மத்திய அரசாங்கத்தின் இந்த திட்டப்பலனை, தமிழக அரசின் திட்டத்தோடு இணைத்து, இன்னும் நிறைய கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.12 ஆயிரம் நிதிஉதவி வழங்க ஏற்பாடுகளை செய்யவேண்டும். பிரதமர் அறிவித்த அனைத்து சலுகைகளும் மிகவும் வரவேற்புக்குரியவை. ஆனால், அவற்றை கொண்டுபோய்ச்சேர்க்கும் சரியான நடவடிக்கைகளில்தான் இதன் வெற்றியே இருக்கிறது.

Next Story