ஆழ்கடல் மீன்பிடி பயிற்சி


ஆழ்கடல் மீன்பிடி பயிற்சி
x
தினத்தந்தி 5 Jan 2017 8:30 PM GMT (Updated: 2017-01-05T18:44:17+05:30)

‘‘கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது, இலங்கை கடற்படையினர் பிடிக்காமல் இருந்தால் திரும்பி வருவோம். இல்லையென்றால் படகுகளையும் இழந்து, இலங்கை சிறைச்சாலையில்தான் வாழ்வோம்’’ என்ற நிலையில், ஒரு நிச்சயமற்ற முறையில் தான் தமிழக மீனவர்கள் வாழ்க்கையை நடத்திக்

‘‘கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது, இலங்கை கடற்படையினர் பிடிக்காமல் இருந்தால் திரும்பி வருவோம். இல்லையென்றால் படகுகளையும் இழந்து, இலங்கை சிறைச்சாலையில்தான் வாழ்வோம்’’ என்ற நிலையில், ஒரு நிச்சயமற்ற முறையில் தான் தமிழக மீனவர்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே, இலங்கை சிறையில் 51 மீனவர்கள் இருக்கிறார்கள். இவர்களோடு நேற்று முன்தினம் ஜெகதாப்பட்டினத்திலிருந்து 2 படகுகளில் மீன் பிடிக்க சென்ற 10 மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு, அவர்களின் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆக, தற்போது இலங்கை சிறையில் 61 மீனவர்கள் வாடிக்கொண்டிருக்கிறார்கள். தமிழக அரசு உடனடியாக தீவிர நடவடிக்கை எடுத்து, மத்திய அரசாங்கத்தோடு தொடர்பு கொண்டு இந்த மீனவர்களை விடுவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இப்போது கைப்பற்றப்பட்ட 2 படகுகளை சேர்த்து, 126 படகுகள் இலங்கை துறைமுகத்தில் பராமரிப்பு இல்லாமல் நிறுத்தப்பட்டுள்ளன.

இலங்கை பாராளுமன்றம் இந்த மாத இறுதியில் கூட இருக்கிறது. இதில், 2 மசோதாக்களை நிறைவேற்ற திட்டமிட்டிருக்கிறார்கள். அதில் ஒரு மசோதா, இலங்கை கடற்பகுதியில் மடிவலையை பயன்படுத்தி இழுவை படகுகள் மூலம் மீன் பிடிப்பதை முற்றிலுமாக தடைசெய்வது, அடுத்தது இலங்கை அரசாங்கத்தால் கைப்பற்றப்படும் வெளிநாட்டு மீன்பிடி படகுகள் மீது ரூ.7 கோடி வரை பல கட்டங்களாக அபராதம் வசூலிக்கலாம் என்பது மற்றொரு மசோதாவாகும். ஆக இரண்டு மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டால், இந்திய மீனவர்கள் எல்லை தெரியாமல் தாண்டினால்கூட அவர்கள் படகுகள் நிச்சயமாக அவர்களுக்கு கிடைக்காது. அதுமட்டுமல்லாமல், கைது நடவடிக்கைகளும் நிச்சயம் தொடர்ந்து கொண்டே இருக்கும். கடலில் மீன் பிடிப்பதை பாரம்பரிய உரிமை என்று தமிழகம் கூறினாலும், இலங்கையிலுள்ள தமிழ் மீனவர்கள் அந்த அரசாங்கத்திடம் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி யாரையும் மீன் பிடிக்க விடக்கூடாது என்று வலியுறுத்துகிறார்கள். இலங்கை அரசாங்கமும் இதில் பிடிவாதமாக இருக்கிறது. இதுவரை, எத்தனையோ பேச்சுவார்த்தைகள் நடந்தாலும், இந்தப் பிரச்சினைக்கு ஒரு சிறு அளவுகூட தீர்வு காண முடியவில்லை. கடந்த 2–ந் தேதி கொழும்பு நகரில் இந்திய–இலங்கை மந்திரிகள் மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தையில், படிப்படியாக இந்திய மீனவர்கள் மடிவலையைப் பயன்படுத்தி, இழுவை படகுகள் மூலம் மீன் பிடிப்பதை நிறுத்தி, அவர்களுக்கு மாற்று மீன்பிடி முறைகள் கற்றுக் கொடுக்கப்படும் என்று இந்திய அரசாங்கம் கூறியிருக்கிறது. இனி இலங்கை கடற்பகுதிக்குள் சென்று மீன் பிடிப்பது இயலாத காரியம். ஆக, வேறு ஆழ்கடல் பகுதிக்குச் சென்று மீன்பிடிக்கும் வகையில், நமது மீனவர்களுக்கு பயிற்சி அளித்து, அதற்குரிய வசதிகளை செய்துகொடுப்பதுதான் சாலச்சிறந்ததாகும்.

தற்போது சென்னையில், கடந்த 3–ந் தேதி முதல் 20 மீனவர்களுக்கு மத்திய மீன்வளத்துறை கடல்சார்–பொறியியல் பயிற்சி நிறுவனம் (சிப்னெட்) இலங்கை கடற்பகுதிக்குள் செல்லாமல் மற்ற பகுதிகளில் காந்த அதிர்வுகள் உள்ளிட்ட பல நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, எப்படி ஆழ்கடலில் எந்த பகுதியில் மீன்கள் அதிகம் இருக்கிறது?, அந்த பகுதியில் போய் மீன்பிடித்தால் அது பிரச்சினைக்கு உட்படாத பகுதியா என்று கண்டுபிடிப்பது எப்படி?, இலங்கை நாட்டு எல்லைக்குள் தப்பித்தவறி சென்றுவிடாமல் இருக்கும் வகையில், அந்த எல்லைக்கு செல்லும்போது எச்சரிக்கை எக்கோ கருவியை எப்படி பயன்படுத்துவது? என்பது உள்பட மாற்று பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வருகிற 13–ந் தேதிவரை இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுமிகவும் வரவேற்புக்குரியது. ஆனால், ஒரே நேரத்தில் 20–க்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு மட்டும் பயிற்சி அளிப்பது என்பது நிச்சயமாக போதாது. பாக்ஜல சந்திக்குள் 3,500 மீன்பிடி படகுகள் செல்கின்றன. இதில் ஏறத்தாழ 25 ஆயிரம் மீனவர்கள் செல்கிறார்கள். ஆக, மிக குறுகிய காலகட்டத்தில் மீனவர்கள் அனைவருக்கும் இதுபோன்று இலங்கை கடல் எல்லைக்குள் செல்லாமல், ஆழ்கடலுக்குள் சென்று மீன்பிடிப்பதற்கான மாற்று மீன்பிடி பயிற்சிகளை அளித்து, அதற்குரிய வசதிகள் கொண்ட படகுகளாக மாற்றவும், தேவையான கருவிகளை வழங்கவும், மத்திய அரசாங்கம் உதவிசெய்தால்தான் இந்த பிரச்சினைக்கு ஒருதீர்வு காணமுடியும்.

Next Story