கரும்பு விலைக்கு முத்தரப்புக்குழு


கரும்பு  விலைக்கு  முத்தரப்புக்குழு
x
தினத்தந்தி 8 Jan 2017 9:30 PM GMT (Updated: 2017-01-08T23:06:57+05:30)

கரும்பு உற்பத்திசெய்யும் விவசாயிகளும், கரும்பை அரைத்து சர்க்கரையாக உற்பத்திசெய்யும் சர்க்கரை ஆலைகளும், ஆண்டுதோறும் விவசாயிகள், ஆலைஅதிபர்கள், அரசுஅதிகாரிகள் கொண்ட முத்தரப்புக்குழு இருதரப்புக்கும் கட்டுப்படியாகும் வகையில் கரும்புக்கு விலையை நிர்ணயிக்கவேண்டும்.

ரும்பு உற்பத்திசெய்யும் விவசாயிகளும், கரும்பை அரைத்து சர்க்கரையாக உற்பத்திசெய்யும் சர்க்கரை ஆலைகளும், ஆண்டுதோறும் விவசாயிகள், ஆலைஅதிபர்கள், அரசுஅதிகாரிகள் கொண்ட முத்தரப்புக்குழு இருதரப்புக்கும் கட்டுப்படியாகும் வகையில் கரும்புக்கு விலையை நிர்ணயிக்கவேண்டும். அதற்குரியவகையில், முத்தரப்புக் குழுவை அமைத்திடவேண்டும் என்று கோரிக்கை விடுத்துவந்தனர். இந்த ஆண்டு அந்தகோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. நடப்புஆண்டு கரும்பு பருவத்துக்கான சர்க்கரை விலையை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். அந்தஅறிவிப்பில், நடப்பு 2016–17 கரும்புபருவத்திற்கு நியாயமான மற்றும் ஆதாயவிலையாக டன் ஒன்றுக்கு கடந்த ஆண்டுபோல ரூ.2,300 என மத்தியஅரசு நிர்ணயம் செய்துள்ளது.

மத்தியஅரசு நிர்ணயித்த ஆதாயவிலையான ரூ.2,300 என்பதற்கு பதிலாக, தமிழக கரும்புவிவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.2,850 அதாவது, கூடுதலாக ரூ.550 என தமிழக அரசு நிர்ணயித்துள்ளது என்று இந்தவிலை அறிவிப்பை வெளிவிட்டுவிட்டு, இறுதியில் கரும்பு விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைத்திடவும், சர்க்கரை ஆலைகளின் லாபத்தில் உரியபங்குபெறும் வகையிலும், கரும்புவிலை நிர்ணயம்செய்வது தொடர்பாக அரசுக்கு உரிய பரிந்துரைகளை அளிக்க விவசாயிகள், சர்க்கரை ஆலை பிரதிநிதிகள் மற்றும் அரசுஅதிகாரிகள் கொண்ட ஒருகுழுவை அமைத்திடவும் நான் உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்–அமைச்சர் அறிவித்துள்ளார். எல்லோரும் வரவேற்கத்தக்க அறிவிப்பு இது. ஆனால், இருதரப்புக்குமே திருப்தியளிக்காத கரும்புவிலையை அரசு நிர்ணயித்திருப்பதற்கு பதிலாக, இந்த முத்தரப்பு கமிட்டியைகூட்டி, அவர்கள் விவாதித்து, அவர்கள் பரிந்துரை செய்திருக்கலாம் என்பதே விவசாயிகளுடைய மற்றும் ஆலை அதிபர்களுடைய கோரிக்கையாக இருக்கிறது. விவசாயிகளைப் பொறுத்தமட்டில், கடந்த 3 அரவை ஆண்டுகளாக அரசு நிர்ணயித்தவிலையை ஆலைஅதிபர்கள் இன்றுவரை வழங்கவில்லை. மத்தியஅரசு நிர்ணயம் செய்தவிலையை மட்டுமே தந்தார்கள். அந்தவகையில், ரூ.1,500 கோடி நிலுவையில் இருக்கிறது. அந்த நிலுவைத்தொகையை ஆலைஅதிபர்கள் தருவதுபற்றி அரசு எதுவும் அறிவிக்கவில்லை. தமிழக அரசு அறிவித்தவிலையை 12 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளும், 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளும் கொடுக்கமுடிந்தபோது, 28 தனியார் ஆலைகளுக்கு மட்டும் ஏன் கொடுக்கமுடியவில்லை? அந்த நிலுவைத்தொகையை பெற்றுத்தருவதற்கு அரசு எந்த முயற்சியும் எடுக்கப்போவதாக அறிவிக்கவில்லையே?. இது ஏமாற்றமாக அல்லவா இருக்கிறது? என்பது விவசாயிகளின் ஆதங்கம்.

மேலும், வெளிச்சந்தையில், சர்க்கரைவிலை முன்பு கிலோவுக்கு ரூ.31 ஆக இருந்தது. இப்போது ரூ.42 ஆகிவிட்டது. இந்த நிலையிலும், அதேவிலையா?, உருண்டை மண்டவெல்லம் தயாரிக்கும் சிறுசிறு தொழிற்சாலைகள் எல்லாம் டன்னுக்கு ரூ.3,500 கொடுக்கும்போது, சர்க்கரை ஆலை ஏன் கொடுக்கமுடியவில்லை? என்று கேட்கிறார்கள். அதேசமயத்தில், ஆலை அதிபர்கள் வெளிச்சந்தையில் ரூ.42 என்றால், நாங்கள் விற்கும் விலை ரூ.33, ரூ.34 தான். வரியெல்லாம் சேர்த்துதான் ரூ.42–க்கு வெளிச்சந்தையில் விற்கப்படுகிறது. நாங்கள் விற்கும்விலை எங்கள் உற்பத்தி செலவுக்கே குறைவான விலைதான். ஏற்கனவே, தனியார் ஆலைகள் ரூ.1,350 கோடி கடனில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. நிதிஆதாரத்தில் வலுவிழந்து இருக்கிறோம். 2013–ம் ஆண்டு ரங்கராஜன்கமிட்டி அளித்த பரிந்துரையின்படி, வருவாய் பகிர்மானக்கொள்கையை அரசும், விவசாயிகளும் ஏற்றுக்கொள்ளவேண்டும். சர்க்கரை, சர்க்கரைபாகு என்று சொல்லப்படும் ‘மொலசஸ்’, கரும்புச்சக்கை ஆகிய மூன்றையும் நாங்கள் விற்று, அதில் கிடைக்கும் லாபத்தொகையை 70 சதவீதம் விவசாயிகளுக்கும், 30 சதவீதம் நாங்களும் எடுத்துக்கொள்ள தயாராக இருக்கிறோம். அரசு நியமித்துள்ள முத்தரப்புக்கமிட்டி இந்தகொள்கையை நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும் என்கிறார்கள். ஆக, இருதரப்பையும் திருப்திப்படுத்தும் ஒருவிலை நிர்ணயம் செய்யவேண்டும் என்றால், அது இனி முத்தரப்பு கமிட்டியிடம்தான் இருக்கிறது. உடனடியாக முத்தரப்புக்கமிட்டி கூடி சிலநாட்களுக்குள் புதிய விலைநிர்ணயம், கரும்பு விவசாயிகள் நிலுவைத்தொகையை பெறுவது தொடர்பான பரிந்துரையை அளிக்கவேண்டும்.

Next Story