தூர்வாருவதற்கு இதுதான் சரியான நேரம்


தூர்வாருவதற்கு இதுதான் சரியான நேரம்
x
தினத்தந்தி 11 Jan 2017 8:30 PM GMT (Updated: 11 Jan 2017 4:37 PM GMT)

தமிழ்நாட்டில் கடந்த 2015–ம் ஆண்டு வரலாறு காணாத மழைபெய்தது. அவ்வளவு மழைபெய்தும் அந்தநீரை முறையாக தேக்கிவைக்க வசதிகள் இல்லாததால், எல்லாநீரும் கடலில்போய் வீணாகக்கலந்துவிட்டது.

மிழ்நாட்டில் கடந்த 2015–ம் ஆண்டு வரலாறு காணாத மழைபெய்தது. அவ்வளவு மழைபெய்தும் அந்தநீரை முறையாக தேக்கி வைக்க வசதிகள் இல்லாததால், எல்லா நீரும் கடலில் போய் வீணாகக் கலந்து விட்டது. அந்த தண்ணீரை மட்டும் சேமித்து வைத்திருந்தால், குறைந்தது 2 முதல் 3 ஆண்டுகளுக்கு தண்ணீர் பஞ்சம் எட்டிப் பார்த்திருக்காது. கடந்த ஆண்டு ஏற்கனவே தென்மேற்கு பருவமழையும் பொய்த்து, இப்போது வடகிழக்கு பருவமழையும் 62 சதவீதம் குறைந்து விட்டதால், தமிழ்நாடு முழுவதும் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் பயிர்கள் எல்லாம் கருகி, குடிநீர் பற்றாக்குறையும் தலையெடுத்து, இந்த ஆண்டு முழுவதும் எப்படி இந்த துயரை மக்கள் சந்திக்கப்போகிறார்கள்? என்ற ஏக்கம் மாநிலம் முழுவதும் இருக்கிறது.

தமிழக அரசு உடனடியாக அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், உயர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் அடங்கிய குழுவை அமைத்து, அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப் பயணம் செய்து, அவர்களது அறிக்கையைப் பெற்று, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் ‘வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள்’ என்று அறிவித்து விட்டது. மத்திய அரசாங்கத்தின் பேரிடர் நிவாரண வரையறையின்படி, 33 சதவீதத்திற்கும்மேல் மகசூல்இழப்பு ஏற்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது. இந்ததொகை நிச்சயமாக போதாது. இது ஓரளவிற்கு ஆறுதலைத்தான் தருமேதவிர, இழப்பு முழுவதையும் ஈடுகட்டாது. எனவே, உடனடியாக மத்திய அரசாங்கத்திற்கு மாநிலத்தின் வறட்சிநிலை குறித்த முழுமையான அறிக்கையை தமிழக அரசு விளக்கமாக அனுப்பி, போதியளவில் நிதிஉதவி தருவதற்கு கோரவேண்டும். ஏற்கனவே 2015–ம் ஆண்டு மழைசேதம் குறித்து கேட்டதொகையை மத்திய அரசாங்கம் முழுமையாகத்தராமல் ஏதோ கொஞ்சம்மட்டும் தந்திருக்கிறது. ‘வார்தா’ புயல் நிவாரணமும் இன்னும் வரவில்லை. இந்தநிலையில், வறட்சி நிவாரணநிதிக்கும் அதேநிலை ஏற்பட்டுவிடாமல் உடனடியாக பெறுவதற்கு அரசாங்கமும் ஏற்பாடு செய்ய வேண்டும். அரசியல் கட்சிகளும் குரல் எழுப்ப வேண்டும். பாராளுமன்றத்தில் அனைத்து தமிழக எம்.பி.க்களின் கோரிக்கையும் இதை மையமாக வைத்தே ஒரேகுரலாக இருக்க வேண்டும். தாங்கள் வளர்த்த பயிர் தங்கள் கண்முன்னே கருகி மடிவதை காண சகிக்காமல் தற்கொலை செய்துகொண்ட 17 விவசாயிகள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கப்படுகிறது. இதுபோல, அதிர்ச்சியால் 120 பேர்களுக்குமேல் மரணம் அடைந்துள்ளனர். மாவட்ட கலெக்டர்களிடம் அறிக்கைப்பெற்று, அவர்கள் குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்கவேண்டும்.

வறட்சி காரணமாக விவசாய தொழிலாளர்கள் மட்டுமல்லாமல், விவசாயிகளும் வேலையில்லாமல் தவிக்கப் போகிறார்கள். இவர்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் 100 நாட்கள் பணிவரம்பு என்பதை, 150 நாட்களாக உயர்த்தப்படும் என்று முதல்–அமைச்சர் அறிவித்துள்ளார். இதுமட்டுமல்லாமல், ஏரிகள் தூர்வாருதல், குளங்களை சீரமைத்தல், பாசன வாய்க்கால்களை தூர்வாருவதற்கு என ரூ.3,400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 150 நாட்கள் வேலைவாய்ப்பு என்று மட்டுமல்லாமல், தொடர்ந்து இந்த ஆண்டு முழுவதும், தமிழ்நாடு முழுவதிலும் உள்ள 39,202 ஏரிகள் உள்பட அனைத்து நீர்நிலைகளையும் தூர்வாருவதற்கு இதுதான் சரியானநேரம். எல்லா நீர்நிலைகளின் கொள்ளளவும் குறைந்துப்போய் மண்மேடாகி விட்டது. ஆக, நீர்நிலைகளை தூர்வாருவதன் மூலம் கொள்ளளவையும் அதிகரிக்கலாம், வேலைவாய்ப்பும் அளிக்கலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி நீர்நிலைகளில் உள்ள ஆகாயத்தாமரைகளை அடியோடு அகற்றி, மீண்டும் தலையெடுக்காமல் இருக்க என்னென்ன ரசாயனங்களை பயன்படுத்தவேண்டுமோ? அதை பயன்படுத்த வேண்டும். இருக்கும் கொஞ்சம் நஞ்சம் ஈரப்பதத்தையும் உறிஞ்சிக் கொண்டிருக்கும் கருவேல மரங்களை அகற்றுவதற்கும் ஒரு பெரியதிட்டத்தை வகுக்க வேண்டும். இதோடு மழைநீர் சேகரிப்புக்கான வசதிகளையும் முழுமையாக உருவாக்க வேண்டும். மொத்தத்தில், அரசாங்கத்தின் முதல்பணி, முன்னுரிமை பணியாக வறட்சி நிவாரணம்தான் இருக்க வேண்டும். அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

Next Story