இது ஒரு மினி பொதுவாக்கெடுப்பா?


இது ஒரு மினி பொதுவாக்கெடுப்பா?
x
தினத்தந்தி 16 Jan 2017 8:30 PM GMT (Updated: 16 Jan 2017 2:17 PM GMT)

பொதுவாக மத்தியிலும் சரி, மாநிலங்களிலும் சரி, பொதுத்தேர்தல் முடிந்து வெற்றிப் பெற்ற கட்சிகள் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் போது, தவிர்க்க

பொதுவாக மத்தியிலும் சரி, மாநிலங்களிலும் சரி, பொதுத்தேர்தல் முடிந்து வெற்றிப் பெற்ற கட்சிகள் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் போது, தவிர்க்க முடியாத சில காரணங்களினால் பாராளுமன்ற தொகுதியிலோ, சட்டசபை தொகுதியிலோ இடைத்தேர்தல் நடக்கும். இடைத்தேர்தலில் வெற்றிப் பெற வேண்டும் என்பதில் ஆளுங்கட்சி மிகத் தீவிரமாக இருக்கும். ஏனெனில், இடைத்தேர்தலில் வெற்றிப் பெற்று விட்டால், ‘‘அரசு நிறைவேற்றி வரும் அத்தனை திட்டங்களுக்கும் மக்கள் ஆதரவு அளித்து விட்டார்கள். நல்லாட்சி என்று தீர்ப்பு வழங்கி விட்டார்கள்’’ என்று பெருமைப்பட்டுக் கொள்ளும். எதிர்க்கட்சி வெற்றிப் பெற்றால், ‘‘பொதுத்தேர்தலில் உங்களுக்கு ஓட்டு போட்ட மக்கள் இப்போது தங்கள் தவறை உணர்ந்து விட்டார்கள். இந்த அரசு மீது அவர்களுக்கு திருப்தியில்லை. தங்கள் அதிருப்தியின் வெளிப்பாடாகத்தான் இந்த தேர்தலில் ஆளுங்கட்சியை தோற்கடித்து விட்டனர்’’ என்று உரத்தக் குரலில் முழங்குவார்கள். அதேபோன்ற நிலைமைதான் இப்போது நடக்கப் போகும் 5 மாநில சட்டசபை தேர்தல்களால் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருக்கிறது.

நவம்பர் 8–ந் தேதி திடீரென 500, 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்து விட்டது. கருப்பு பணத்தை ஒழிக்கவும், கள்ள நோட்டுகளை ஒழிக்கவும், பொருளாதாரத்தை சீர்படுத்தவும் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று கூறும் மத்திய அரசாங்கம், இதை மக்கள் பெரிதும் ஆதரிக்கிறார்கள் என்று பறைசாற்றுகிறது. ஆனால், எதிர்க்கட்சிகளோ இது மக்களை ஏமாற்றும் செயல், இதனால் மக்கள் அவதிப்படும் நிலைமை சொல்லிமாளாது. பொருளாதார வளர்ச்சிக்கு பெரிய அடி, மக்கள் கடும்கோபத்தில் இருக்கிறார்கள் என்கிறார்கள். யார் சொல்வது சரி என்பது பொதுமக்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர் மனதில் தெரியும் என்றாலும், அவர்கள் உணர்வு ஒட்டுமொத்தமாக எப்படி இருக்கிறது? என்பதை வெளிப்படுத்தும் வகையில், உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் பிப்ரவரி 4–ந் தேதி முதல் மார்ச் 8–ந் தேதிவரை சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. உத்தரபிரதேச மாநிலத்தேர்தல் என்றாலே, நாடு முழுவதும் மிகவும் உன்னிப்பாக கவனிக்கும் தேர்தலாகும். நாட்டிலேயே மிக அதிகமான சட்டமன்ற, பாராளுமன்ற தொகுதிகளைக்கொண்ட மிகப்பெரிய மாநிலம் உத்தரபிரதேசம். அங்கு 403 சட்டசபை தொகுதிகள் இருக்கிறது. 13 கோடியே 85 லட்சம் மக்கள் இந்த தேர்தலில் ஓட்டுபோடப்போகிறார்கள். பஞ்சாபில் 117 சட்டசபை தொகுதிகளும், உத்தரகாண்டில் 70 சட்டசபை தொகுதிகளும், மணிப்பூரில் 60 சட்டசபை தொகுதிகளும், கோவாவில் 40 சட்டசபை தொகுதிகளும் தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறது. ஆக, மொத்தம் 16 கோடியே 80 லட்சத்துக்கும்மேல் வாக்காளர்கள் இந்த தேர்தலில் ஓட்டு போடப் போகிறார்கள். உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சி தற்போது ஆட்சியில் இருக்கிறது. ஆனால், 2014–ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 80 இடங்களில், 71 இடங்களில் பா.ஜ.க. வெற்றிப்பெற்றிருக்கிறது. இதுபோல, பஞ்சாபில் பா.ஜ.க., அகாலிதளம் கூட்டணி அரசு இருக்கிறது. உத்தரகாண்டிலும், மணிப்பூரிலும் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. கோவாவில் பா.ஜ.க. ஆட்சி செய்கிறது. இந்த தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றிப்பெற்றால், இப்போது எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு மக்கள் அங்கீகாரம் அளித்துவிட்டார்கள் என்று பெருமைப்பட்டுக்கொள்ளலாம். இந்த 5 சட்டமன்ற தேர்தல்களிலும் பா.ஜ.க. வெற்றிப்பெற்றால், அதன் காரணமாக அடுத்த ஆண்டு இந்த மாநிலங்களில் நடைபெறும் மேல்–சபை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதில் வெற்றிப் பெற்று, அதன் எதிரொலியாக பாராளுமன்ற மேல்–சபையில் இப்போது பலவீனமாக இருக்கும் நிலைமாறி, தனிப்பெரும்பான்மை பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி பா.ஜ.க.வுக்கு கிடைக்கவில்லையென்றால், பிரதமர் நரேந்திரமோடிக்கு, மக்களிடம் ஆதரவு இல்லை என்று அரசியல் ரீதியாக எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு வாய்ப்புகள் கொடுத்ததுபோலவும், எதிர்க்கட்சிகளை ஓரணியில் கொண்டு வருவதற்கும் வழிவகுத்து விடும். எனவே, இந்த 5 மாநில தேர்தல் என்பது அந்த மாநில மக்களின் மாநிலத்துக்கான வெற்றி என்பது மட்டுமல்லாமல், பா.ஜ.க. அரசின் செயல்பாடுகளுக்கு ஒரு ‘மினி பொது வாக்கெடுப்பு’ போல் ஆகிவிடும்.


Next Story