சிறு வியாபாரிகளுக்கு சிறிய நிவாரணம்


சிறு வியாபாரிகளுக்கு சிறிய நிவாரணம்
x
தினத்தந்தி 17 Jan 2017 9:30 PM GMT (Updated: 17 Jan 2017 5:18 PM GMT)

கடந்த நவம்பர் மாதம் 8–ந் தேதி திடீரென நாடு முழுவதிலும் புழக்கத்தில் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார்.

டந்த நவம்பர் மாதம் 8–ந் தேதி திடீரென நாடு முழுவதிலும் புழக்கத்தில் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். அந்தநேரத்தில், 17 லட்சத்து 74 ஆயிரத்து 200 கோடி ரூபாய் புழக்கத்திலிருந்தது. இதில், செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.15 லட்சத்து 44 ஆயிரம் கோடியாகும். பொதுமக்கள் தங்கள் கைவசமுள்ள பழைய நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம், டெபாசிட் செய்துகொள்ளலாம் என்று பல அறிவிப்புகள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டாலும், நடைமுறை சிக்கல்களால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஆரம்பத்தில் ஏ.டி.எம்.களில் ரூ.2,000 எடுக்க அனுமதி வழங்கி, இறுதியில் ரூ.4,500 எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. வாரத்திற்கு வங்கியிலுள்ள சேமிப்புக்கணக்கிலிருந்து ரூ.24 ஆயிரம் எடுத்துக்கொள்ளலாம் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதுபோல, வியாபாரிகள் வங்கியில் வைத்திருக்கும் நடப்புக்கணக்கில் வாரத்திற்கு ரூ.50 ஆயிரம் எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே நாட்டில் பணப்புழக்கம் சரிவர இல்லாத நிலையில், வியாபாரம், தொழில்கள், சிறு நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், வங்கிகளிலுள்ள பணத்தை எடுக்க விதிக்கப்பட்டுள்ள இந்த கட்டுப்பாடும் பொதுமக்களை, சிறுவியாபாரிகளை, சிறுதொழில் முனைவோரை பெரிதும் பாதித்தது. இந்த நிலையில், 70 நாட்களுக்குப்பிறகு இப்போது பணம் எடுக்கும் வரம்பு சற்று தளர்த்தப்பட்டுள்ளது. ஏ.டி.எம்.களில் ரூ.4,500–லிருந்து ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், உச்சவரம்பு வாரத்துக்கு ரூ.24 ஆயிரம்தான் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வியாபாரிகளை பொறுத்தமட்டில், நடப்புக்கணக்கில் இப்போது ரூ.50 ஆயிரம் எடுத்துக்கொள்ளலாம் என்ற வரம்பு ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, இந்த கணக்கு வைத்திருக்கும் வியாபாரிகள் குறிப்பாக சிறுவியாபாரிகள் ரூ.1 லட்சம் தங்கள் நடப்புக்கணக்கிலிருந்து எடுத்துக்கொள்ளலாம் என்பது இப்போதைக்கு காயத்துக்கு வலிநிவாரணியைப்போலத்தான் இந்த நடவடிக்கை. இதே வசதி வங்கிகளில் ஓவர் டிராப்ட் எடுப்பதற்கும், ரொக்கக்கடன் கணக்குக்கும் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது வரவேற்கத்தக்கதாகும்.

ஏ.டி.எம்.களைப் பொறுத்தமட்டில், சேமிப்புக்கணக்கு வைத்திருப்பவர்கள் பணம் எடுத்தால் அதற்கான கட்டணம் கிடையாது என்று ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிப்பு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், பெரும்பாலான தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் ஏ.டி.எம்.கள் இன்னும் மூடியே கிடக்கின்றன. அடுத்தவங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுத்தால், ரூ.15, ரூ.20 என்று கட்டணம் வசூலிக்கிறார்கள். நாடு முழுவதும் உள்ள ஏ.டி.எம்.களில் தினமும் ரூ.7 ஆயிரம் கோடி நிரப்பப்படுகிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத்தொகை போதாது. கூடுதலாக பணம் நிரப்பி, அனைத்து ஏ.டி.எம்.களையும் உடனடியாக திறக்கவேண்டும். இந்த ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால், வேகமாக வளர்ச்சியடையும் நாடு என்று இந்தியாவுக்கு கிடைத்த பெயர் பறிபோய்விட்டது. இந்த நிதிஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.6 சதவீதமாக இருக்கும் என்று ஏற்கனவே அறிவித்திருந்த சர்வதேச பண நிதியம் (இன்டர்நே‌ஷனல் மானிடரி பண்டு), இப்போது இந்த பாதிப்பால் 6.6 சதவீதம்தான் இருக்கும் என்றும், அடுத்த ஆண்டு 7.2 சதவீதம்தான் இருக்கும் என்றும் கூறியுள்ளது. நாட்டின் வளர்ச்சி விகிதம் குறைந்துகொண்டிருக்கும் இந்த நிலையில், கட்டுப்பாடுகளை இன்னும் எவ்வளவு வேகமாக தளர்த்தமுடியுமோ அந்தவகையில் தளர்த்தி, வங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலும் விரைவில் வழக்கமான பணப்பரிமாற்றம் நடக்க ஏற்பாடு செய்யவேண்டும். சேமிப்புக்கணக்கில் ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கும் வரம்பை வாரத்திற்கு ரூ.24 ஆயிரம் என்பதை உடனடியாக உயர்த்தவேண்டும். வங்கிகளில் இருக்கும் பணம் தேவைக்கேற்ப எப்போதும் எளிதில் எடுத்துக்கொள்ளலாம் என்றநிலை அடுத்த சில நாட்களுக்குள் வரவேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Next Story