பெப்சி, கோக கோலாவுக்கு தடையா?


பெப்சி, கோக கோலாவுக்கு தடையா?
x
தினத்தந்தி 29 Jan 2017 9:30 PM GMT (Updated: 2017-01-29T17:35:21+05:30)

தமிழ்நாட்டில் மாணவர்கள், இளைஞர்களின் எழுச்சிபோராட்டமாக கடந்த 16–ந்தேதி முதல் ஏறத்தாழ ஒருவார காலம் ஜல்லிக்கட்டு மீதான தடையை எதிர்த்து போராட்டம் நடந்தது.

மிழ்நாட்டில் மாணவர்கள், இளைஞர்களின் எழுச்சிபோராட்டமாக கடந்த 16–ந்தேதி முதல் ஏறத்தாழ ஒருவார காலம் ஜல்லிக்கட்டு மீதான தடையை எதிர்த்து போராட்டம் நடந்தது. வெற்றிக்கு வித்திட்ட இந்த போராட்டத்தில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கவேண்டும் என்ற முதல்கோரிக்கைக்கு அடுத்தாற்போல், இளைஞர்கள் பட்டாளம் விடுத்த மிகமுக்கியமான கோரிக்கையான ஜல்லிக்கட்டுபோட்டியை தடைசெய்ய வேண்டுமென்று முழுமூச்சுடன் செயல்பட்ட அமெரிக்காவை தலைமையிடமாகக்கொண்டு இந்தியாவிலும் செயல்படும் பீட்டா அமைப்பை மத்திய அரசாங்கம் தடை செய்யவேண்டும் என்பதுதான். அந்தநேரத்திலேயே தமிழ்நாட்டு இளைஞர்கள் வெளிநாட்டு நிறுவனங்களால் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, இங்கு விற்பனை செய்யப்படும் பெப்சி, கோக கோலா ஆகிய குழுமங்களின் குளிர்பானங்களை இனி நாங்கள் பயன்படுத்தமாட்டோம் என்று உறுதி எடுத்துக்கொண்டனர். இந்தபோரட்டத்தின்போதே சாலையில் பெப்சி, கோக கோலா குளிர்பானங்களை கீழே ஊற்றி தங்கள் எதிர்ப்பை காட்டினார்கள்.

இதைத்தொடர்ந்து இந்த உணர்வு தமிழகம் முழுவதும் சூடுபிடித்துவிட்டது. வணிகர் சங்கங்களின் பேரவைத்தலைவர் வெள்ளையன், 1998–ம் ஆண்டே இந்த வெளிநாட்டு குளிர்பானங்களை இந்தியாவில் தடை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை அப்போதைய பிரதமர் வாஜ்பாயையும், பல முக்கிய தலைவர்களையும் சந்தித்து வலியுறுத்தினோம். ஆனால், அப்போது எங்கள்கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இப்போது இளைஞர்கள் இந்த உணர்வு கொண்டிருப்பது எங்களுக்கு பெரிதும் உற்சாகமளிக்கிறது. குடியரசு தினம் முதல் எங்கள் சங்கஉறுப்பினர்கள் தங்கள் கடைகளில் வெளிநாட்டு கம்பெனிகளின் குளிர்பானங்களான பெப்சி, கோக கோலா போன்றவற்றை விற்கமாட்டார்கள். இதற்குப்பதிலாக சுதேசி சோடா கம்பெனிகள் தயாரிக்கும் குளிர்பானங்களோடு இளநீர், மோர், பதநீர் போன்ற பானங்களை விற்பார்கள். ஏற்கனவே வெளிநாட்டு குளிர்பானங்களில் பூச்சிக்கொல்லி மருந்து கலப்படம் செய்யப்பட்டுள்ளது என்று 2006–ம் ஆண்டு ‘தினத்தந்தி’யில் வெளியிடப்பட்ட கட்டுரையை எங்கள் சங்க உறுப்பினர்களுக்கு அனுப்பியிருக்கிறோம் என்று அறிவித்துள்ளார்.

இதுபோல, வியாபாரிகளின் மற்றொரு சங்கமான வணிகர்சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வருகிற மார்ச் 1–ந்தேதி முதல் அவரது சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களின் கடைகளில் பெப்சி, கோக கோலா விற்பது நிறுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். அதற்கு முன்பாக இந்த வியாபாரிகள் எல்லாம் பொதுமக்கள் இந்த குளிர்பானத்தை அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான பிரசாரங்கள் மேற்கொள்ளவேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

இதுமட்டுமல்லாமல், பிப்ரவரி 1–ந்தேதி முதல் ஒருமாதம்வரை பள்ளிக்கூட, கல்லூரி மாணவர்கள் இணைந்து இந்த குளிர்பானங்களின் பாதிப்பை சமுதாயத்துக்கு எடுத்துச்செல்லும் வகையில் ஆங்காங்கு பிரசாரம் செய்யவும் வணிகர் சங்க பேரமைப்பு முடிவுசெய்துள்ளது என்றும் அறிவித்திருக்கிறார். மேலும் வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு பதிலாக உள்நாட்டு குளிர்பானங்களை விற்பனை செய்யவேண்டும் என்று வியாபாரிகளை கேட்டுள்ளார். ஆக, ஒட்டுமொத்த கடைகளையும் உள்ளடக்கிய 2 பெரியசங்கங்களும் அறிவித்துவிட்டன. வெளிநாட்டு குளிர்பானங்களை தடை செய்யவேண்டும் என்றகோரிக்கை நிறைவேற்றப்பட்டால், பலஆண்டுகளுக்கு முன்பு ஆங்காங்கு ஒவ்வொரு ஊரிலும் ஒருசோடா கம்பெனி இருந்ததுபோல, மீண்டும் பெரிய ஊர்கள் அனைத்திலும் சிறிய, சிறிய சோடா கம்பெனிகள் தொடங்கப்படும். இதன்மூலம் சிறியளவில் தொழில்முனைவோர் உருவாவதற்கும், அதை விற்பனைசெய்ய, கொண்டுசெல்ல என்று சிறியளவில் வேலைவாய்ப்புகள் ஏற்படுவதற்கும் நிறையவாய்ப்புகள் ஏற்படும். ஆனால், இப்போதெல்லாம் தரச்சான்றும் இருக்கவேண்டும். இப்படி பலநன்மைகள் இருந்தாலும் பெப்சி, கோக கோலா விற்பனைசெய்ய தடையென்று வியாபாரிகள் எடுத்திருக்கும் முடிவு வெற்றியடைய வேண்டுமென்றால் அது பொதுமக்களின் கையில்தான் இருக்கிறது. ‘‘டிமான்ட் அண்ட் சப்ளை’’ என்பார்கள். பொதுமக்களின் தேவைக்கேற்பதான் வழங்கல்இருக்கும். ஆகவே இந்த முடிவு வெற்றிபெறுவது என்பது சந்தையில் பெப்சி, கோக கோலாவுக்கு கிராக்கி இருக்கிறதா? அல்லது பொதுமக்கள் பெப்சி, கோக கோலா இவைகள் வேண்டாம் என்று சொல்லிவிடப்போகிறார்களா? என்பதில்தான் இருக்கிறது.

Next Story