விவசாயிக்கு தற்கொலை செய்யும் நிலைமை வரலாமா?


விவசாயிக்கு  தற்கொலை  செய்யும் நிலைமை வரலாமா?
x
தினத்தந்தி 30 Jan 2017 8:30 PM GMT (Updated: 30 Jan 2017 1:50 PM GMT)

‘‘உழவன் சேற்றில் கால் வைத்தால்தான், நாம் சோற்றில் கை வைக்க முடியும்’’ என்பது காலம்காலமாக தமிழ்நாட்டில் நிலவும் ஒரு வழக்குமொழி.

‘‘உழவன் சேற்றில் கால் வைத்தால்தான், நாம் சோற்றில் கை வைக்க முடியும்’’ என்பது காலம்காலமாக தமிழ்நாட்டில் நிலவும் ஒரு வழக்குமொழி. உழவுத் தொழிலின் மேன்மையை எல்லோரும் பேசுகிறோம். ஈராயிரம் ஆண்டுகளுக்குமுன்பு ஐயன் வள்ளுவன், ‘உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃது ஆற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து’ அதாவது, பிறதொழில்கள் செய்பவர்கள் அனைவரையும் தாங்குவதால் உழவுத்தொழில் செய்பவர் உலகத்தவருக்கு அச்சாணி போன்றவர் ஆவர். இப்படிப்பட்ட பெருமை படைத்த விவசாயிகள் சமீபகாலங்களாக நாடுமுழுவதிலும் தற்கொலை செய்து கொள்ளும் துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில்கூட, சமீபத்தில் நிலவும் கடும் வறட்சியினால் தாங்கள் வளர்த்த பயிர்கள் தங்கள் கண்ணெதிரே கருகிக்கொண்டிருப்பதை பார்க்க முடியாமலும், கடன் தொல்லையாலும், 140–க்கும் மேற்பட்ட விவசாயிகள் அதிர்ச்சியினாலும், தற்கொலை செய்து கொண்டும் உயிரிழந்திருக்கிறார்கள்.

நாடுமுழுவதிலும் இவ்வாறு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைமையைக் கண்டு, உச்சநீதிமன்றம் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. இதுதொடர்பான ஒருவழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்சு, ‘‘விவசாயிகள் தற்கொலையைத் தடுக்க மத்திய, மாநிலஅரசுகள் என்ன கொள்கை வைத்திருக்கிறார்கள்?’’ என்று கேட்டிருக்கிறார்கள். ‘‘விவசாயிகள் தற்கொலைக்கு முக்கியக் காரணம், பயிர்கள் கருகிப்போவதும், கடன் தொல்லையும்தான்’’ என்று தெளிவாக தெரிவித்து, இத்தகைய தற்கொலைகள் மனிதஉரிமை விவகாரம். நாட்டுக்கே உணவளிக்கும் விவசாயிகளின் தற்கொலையை தடுப்பதற்கு அரசாங்கம் ஏன் இன்னும் ஒரு தேசியகொள்கையை வகுக்கவில்லை?. இயற்கைபேரிடர் நேரங்களில் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு ஒரு கொள்கை வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. இதுதொடர்பாக மத்திய, மாநில அரசாங்கங்களுக்கு பலவித கேள்விக்கணைகளையும் தொடுத்துள்ளது.

விவசாயி தற்கொலை செய்து கொள்வதற்கு கடன்தான் காரணம் என்று 2007–ம்ஆண்டு ராதாகிருஷ்ணா கமிட்டியே தெளிவாக தெரிவித்துள்ளது. அப்போது நிதிஅமைச்சகம், விவசாய கடன்தொடர்பாக நியமித்த கமிட்டிதான் இது. 10 ஆண்டுகள் ஆகின்றன. இந்தகமிட்டி அளித்த பரிந்துரையின்படி, இன்னும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவ்வப்போது வறட்சியோ, வெள்ளமோ ஏற்படும்போது மத்திய, மாநிலஅரசுகள் கூட்டுறவு கடன்களை தள்ளுபடிசெய்வது, வட்டிகட்டுவதற்கான காலஅவகாசத்தை தள்ளிவைப்பது போன்ற உத்தரவுகளை பிறப்பிக்கின்றன. ஆனால், இத்தகைய கடன்கள் வாங்குகிற விவசாயிகள் மிககொஞ்சம்பேர்தான். பெரும்பாலான கடன்களை தனியாரிடம்தான் வாங்குகிறார்கள். 2008–ம் ஆண்டு நியமிக்கப்பட்ட ரங்கராஜன்கமிட்டி, 66 சதவீத விவசாயிகள் இவ்வாறு முறைசாரா கடன்களைத் தான் நம்பியிருக்கிறார்கள் என்று தெரிவித்தது.

ஆக, விவசாயிகளின் கடன்களை ரத்துசெய்வது மட்டும் நிவாரணமாக அமைந்துவிடுவதில்லை. விவசாயி கடன்தொல்லையினால் தற்கொலை செய்கிறான் என்றால், அவன் விளைவிக்கும் விளைபொருட்களுக்கு சரியான விலை கிடைப்பதில்லை. சாகுபடிசெய்யும் செலவும் மிக அதிகமாகி விட்டது. வேளாண்செலவுகள் மற்றும் விலைகள் தொடர்பாக அரசு நியமித்த கமி‌ஷன் கடந்த 1990–ம்ஆண்டு முதலே விவசாயி கடனில் அல்லாடுவதை விளக்கிக் கூறுகிறது. எனவே, உற்பத்திச்செலவை குறைப்பதற்கான நடவடிக்கையை அரசு விரைவில் எடுக்க வேண்டும். வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான தேசிய விவசாயிகள் ஆணையம் 2007–ம்ஆண்டிலேயே பல்வேறு பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை அவர்களின் சாகுபடி செலவுக்குமேல் குறைந்தபட்சம் 50 சதவீதம் அதிகமாக நிர்ணயிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறது. எனவே, விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க வேண்டுமென்றால், பேரிடர்காலங்களில் தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும். உற்பத்தி செலவை குறைக்க வேண்டும். விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும் என்பது போல, பல ஆக்கப்பூர்வமானத்திட்டங்களை உள்ளடக்கிய விவசாயக் கொள்கையை மத்திய, மாநிலஅரசுகள் உடனடியாக வகுக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தின் கருத்து, விவசாயிகளுக்கு ஒரு புதியநம்பிக்கையை அளிக்கிறது. விவசாயி தற்கொலை என்பது தமிழ்நாட்டில் இனி இல்லை என்ற நிலையை ஊக்குவிக்க மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டும் வகையில், தமிழக அரசு உடனடியாக ஒரு நல்ல கொள்கையை வகுத்து, இந்தியாவுக்கே வழிகாட்ட வேண்டும்.


Next Story