துணைவேந்தர் இல்லாத பல்கலைக்கழகங்கள்


துணைவேந்தர் இல்லாத பல்கலைக்கழகங்கள்
x
தினத்தந்தி 7 Feb 2017 9:30 PM GMT (Updated: 7 Feb 2017 1:29 PM GMT)

நாட்டின் முன்னேற்றம், கல்வி வளர்ச்சியில்தான் இருக்கிறது. இதில், தொடக்கக்கல்வி இன்றியமையாதது என்றாலும், உயர்கல்விதான் வாழ்க்கையின் வாசலை திறந்துவைக்கும்.

நாட்டின் முன்னேற்றம், கல்வி வளர்ச்சியில்தான் இருக்கிறது. இதில், தொடக்கக்கல்வி இன்றியமையாதது என்றாலும், உயர்கல்விதான் வாழ்க்கையின் வாசலை திறந்துவைக்கும். அந்தவகையில், மத்திய அரசாங்கமும் சரி, தமிழக அரசும் சரி, கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. கடந்த 2015–16–ம் ஆண்டில் மாணவர் சேர்க்கை, கல்லூரிகளில் மிக அதிகமாக இருந்தது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் மட்டும் உயர்கல்வித்துறைக்கு என ரூ.3 ஆயிரத்து 679 கோடியே ஒரு லட்சம் நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கல்லூரிகளையும், ஆங்காங்குள்ள பல்கலைக்கழகங்கள்தான் நிர்வகிக்கின்றன. தற்போது தமிழ்நாட்டில் 19 பல்கலைக்கழகங்களும், 2 மத்திய பல்கலைக்கழகங்களும், 29 நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் உள்ளன.

ஒரு பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க துணைவேந்தர்தான் முதன்மை செயல்அலுவலராக பணியாற்றுகிறார். அவர் பொறுப்பில்தான், அந்த பல்கலைக்கழகமும், அதன்சார்பு கல்லூரி நிர்வாகங்களும் மொத்தமாக இயங்குகின்றன. சிண்டிகேட், செனட், ஆட்சி மன்றகுழு அனைத்துக்கும் அவர்தான் தலைவர். அந்த பல்கலைக்கழகத்துக்கான நிதிநிலை அறிக்கையை தயார்செய்வது, கணக்கு வழக்குகளை சரிசெய்வது, ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்புவது, பாடத்திட்டங்களை தயார் செய்வது உள்பட பல பணிகள் அவரது பொறுப்பில்தான் இருக்கிறது. முக்கிய கூட்டங்கள் அனைத்துக்கும் அவர்தான் தலைமை வகிக்கவேண்டும். ஆக, துணைவேந்தர் என்பவர் ஒரு விமானத்தின் விமானி போலவும், கப்பலின் கேப்டன் போலவும், மோட்டார் வாகனங்களை உவமையாக எடுத்துக்கொண்டால், அதன் டிரைவர் போலவும் இயங்குபவர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி தமிழ்நாட்டிலுள்ள 4 முக்கிய பல்கலைக்கழகங்களில் காலியாக இருப்பது மிகவும் வேதனைக்குரியதாக இருக்கிறது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், கடந்த 2015–ம் ஆண்டு ஏப்ரல் 9–ந் தேதிக்கு பிறகு புதிய பல்கலைக்கழக துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை. இந்த பல்கலைக்கழகத்தின் பல முக்கிய பணிகள் முடங்கிப்போய்விட்டன. இதுபோல, அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவியும், புகழ்பெற்ற சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியும், டாக்டர் அம்பேத்கர் சட்டபல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவியும் காலியாக இருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகம் என்பது தமிழ்நாட்டிலுள்ள 560 பொறியியல் கல்லூரிகளுக்கும் ஒரு தாய்வீடாக திகழும் பல்கலைக்கழகமாகும். இந்த பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் துணைவேந்தர் பதவி காலியாக இருக்கிறது. பொறியியல் கல்லூரிகளின் தலைமை பொறுப்புக்கு துணைவேந்தர் இல்லாமல், ஏராளமான நிர்வாக பணிகள் ஸ்தம்பித்துவிட்டன.

இதுபோல, இந்தியாவிலேயே மிக பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான 1857–ல் தொடங்கப்பட்ட சென்னை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் இல்லாமலிருப்பது, கல்வியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திரமடைந்து இதுவரையில் 43 துணைவேந்தர்கள் இருந்திருக்கிறார்கள். அந்த காலத்தில் ‘‘மெட்ராஸ் பல்கலைக்கழகம்’’ என்றால் சர்வதேச பல்கலைக்கழகங்கள் முழுவதிலும் ஒரு தனிமதிப்பு இருந்தது. அந்த பெயரை மீட்டெடுக்கவேண்டும் என்று எல்லோரும் கோரிவந்த நிலையில், இப்போது சென்னை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் இல்லாமலிருப்பது மிகவும் கவலைக்குரியதாகும். பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு ‘வேந்தர்’ என்பவர் ‘கவர்னர்’தான். தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், கவர்னர் பதவியும் முழுநேர கவர்னராக இல்லை. மராட்டிய கவர்னரான வித்யாசாகர் ராவ் தான் தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக இருக்கிறார். எனவே, விரைவில் ஒரு முழுநேர கவர்னரை நியமிக்க வேண்டியது மத்திய அரசாங்கத்தின் பொறுப்பு. அதுபோல, இந்த 4 பல்கலைக்கழகங்களுக்கும் உடனடியாக துணைவேந்தர்களை நியமிக்கப்பட வேண்டிய பொறுப்பை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு, அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். புதிய கல்விக்கொள்கைகளை வரையறுக்க மத்திய அமைச்சரவையின் முன்னாள் செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையில் நியமிக்கப்பட்ட கமிட்டி, பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர் பதவிகளில் அரசியல் தலையீடுகூடாது என்று பரிந்துரைத்துள்ளது. துணைவேந்தர் நியமனங்களில் இந்த கருத்தும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

Next Story