போர்முனையில் பெண் ராணுவ அதிகாரிகள்


போர்முனையில் பெண் ராணுவ அதிகாரிகள்
x
தினத்தந்தி 20 Feb 2017 8:30 PM GMT (Updated: 20 Feb 2017 6:22 PM GMT)

பெண்கள் முன்னேற்றத்தில் இந்தியநாட்டு தலைவர்கள், நீண்ட நெடுங்காலமாக மிகமுனைப்புடன் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

பெண்கள் முன்னேற்றத்தில் இந்தியநாட்டு தலைவர்கள், நீண்ட நெடுங்காலமாக மிகமுனைப்புடன் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அது நிறைவேறிய நிலையில், இன்று பெண்கள் கால்பதிக்காத இடமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு எல்லா பணிகளிலும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். சீருடை அணியும் பணியான காவல்துறை, வனத்துறை மட்டுமல்லாமல், முப்படைகளிலும் பெண்களின் பணி சிறப்பாக இருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட போது, குடியரசு தின அணிவகுப்பில் ராணுவத்தில் பணியாற்றும் பெண் அதிகாரிகளின் அணிவகுப்பு அனைவரையும் கவர்ந்தது.

இந்த ஆண்டு பட்ஜெட்டில் ராணுவ அமைச்சகத்துக்கு மட்டும் ரூ.3 லட்சத்து 59 ஆயிரத்து 854 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்திய ராணுவத்தில் 41 ஆயிரம் அதிகாரிகளும், 11 லட்சத்து 32 ஆயிரம் ராணுவ வீரர்களும் பணியாற்றுகிறார்கள். விமானப்படையை எடுத்துக் கொண்டால், 12 ஆயிரம் அதிகாரிகளும், 1 லட்சத்து 30 ஆயிரம் விமானப்படை வீரர்களும் பணியாற்றுகிறார்கள். கடற்படையை எடுத்துக் கொண்டால், 9 ஆயிரம் அதிகாரிகளும், 52 ஆயிரம் மாலுமிகளும் உள்ளனர். கடலோர காவல்படையில் 1,400 அதிகாரிகளும், 10 ஆயிரம் மாலுமிகளும் உள்ளனர். ஆரம்பகாலத்தில் முழுக்க முழுக்க ஆண்கள்தான் முப்படைகளிலும் பணியாற்றிவந்தனர். 1992–ம் ஆண்டுதான் முதலாவதாக ராணுவம், பெண்கள் பணியாற்றுவதற்காக தனது கதவைத் திறந்தது. அப்போது 50 பெண்கள் ராணுவ பணியில் சேர்ந்தனர். இன்றைய சூழ்நிலையில், 1,436 பெண்கள் ராணுவத்திலும், 1,331 பெண்கள் விமானப்படையிலும், 532 பெண்கள் கடற்படையிலும் பணியாற்றுகிறார்கள். ஆரம்பகாலங்களில் இவர்களுக்கு ஆண் அதிகாரிகளைப்போல கஷ்டமான பணி ஒதுக்கப்படாமல், ஆங்காங்குள்ள தளங்களில் மட்டும் பணிகள் ஒதுக்கப்பட்டன.

சமீபகாலமாக, ஆணுக்கு பெண் இளைத்தவர் இல்லை, எங்களையும் எல்லா பணியிலும் ஈடுபடுத்தவேண்டும் என்று பெண்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். இந்திய விமானப்படை, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலாவதாக 3 பெண் விமானிகளை போர் விமானிகளாக தேர்ந்தெடுத்திருக்கிறது. ஆனால், பணியில் சேர்ந்த 4 ஆண்டுகளுக்குள் தாய்மை அடையக் கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளது. ஏனெனில், அவர்களது பயிற்சி பாதித்து விடும் என்பதால்தான். இதுபோல, ராணுவத்திலும் போர்முனையில் பணியாற்ற பெண்களை அனுப்ப வேண்டும் என்று பெண் அதிகாரிகள் தரப்பில் கோரிக்கை வலுக்கிறது. பொதுவாக, போர்க்களத்தில் பெண் அதிகாரிகள் பணியாற்ற அனுமதிப்பதில்லை. ஒருவேளை போர்க்களத்தில் எதிரிநாடுகள் அவர்களை போர்க்கைதிகளாக பிடித்துவிட்டால், அவர்களது பெண்மைக்கு பங்கம் நேரிடலாம் என்ற ஒரு காரணமாகவும் இருக்கலாம். இப்போது ராணுவத் தளபதி போர்முனையில் பெண்கள் பணியாற்றமுடியாத சூழ்நிலை என்னென்ன? என்பதை ஓரளவுக்கு தெளிவாக விளக்கிவிட்டார். பெண் அதிகாரிகளை, ஆண் அதிகாரிகளைப்போல போர்முனையில் பணியாற்ற அனுப்பினால், ஆண் அதிகாரிகளுக்கு இணையாக அத்தனை பணிகளையும் செய்ய வேண்டியதிருக்கும். போர்முனையில் ராணுவ டாங்கியில் பணியாற்றும் வீரர்கள் இரவில் அந்த டாங்கியின் அடியில் படுத்துத் தூங்கி விடுவார்கள். இதுமட்டுமல்லாமல், போர்முனையில் போரிடும் வீரர்களுக்கு இரவில் எந்த வசதியும் இருக்காது. ஒரு கம்பளியை வைத்துக் கொண்டு அனைவரும் மூடிக் கொண்டு தூங்கி விடுவார்கள். கழிப்பறை வசதி இருக்காது. ஆண்கள் சமாளித்துக் கொள்வார்கள். இதுபோன்ற கஷ்டங்களை எங்களால் சமாளித்துக் கொள்ள முடியும் என்று பெண் அதிகாரிகள் கூறினால், நாங்கள் அவர்களை போர்முனையில் பணியாற்ற அனுமதிப்பது குறித்து பரிசீலிப்போம். எனவே, முடிவெடுக்க வேண்டியது பெண் அதிகாரிகள்தான் என்று அவர் கூறியிருக்கிறார். ஆகவே, போர்முனைக்கு பெண் அதிகாரிகளை நியமிப்பதை, பெண் அதிகாரிகளும், உயர் அதிகாரிகளும் ஒன்றாக விவாதித்து, சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்த பிறகே முடிவெடுக்க வேண்டும்.

Next Story