மாணவர்கள் ‘நீட்’ தேர்வுக்கு தயாராக இல்லை


மாணவர்கள் ‘நீட்’ தேர்வுக்கு தயாராக இல்லை
x
தினத்தந்தி 2 March 2017 8:30 PM GMT (Updated: 2017-03-02T19:27:50+05:30)

தமிழ்நாட்டில் நேற்று பிளஸ்–2 தேர்வு தொடங்கியுள்ளது. 8 லட்சத்து 98 ஆயிரத்து 763 மாணவர்கள் தேர்வு எழுதி வருகிறார்கள்.

மிழ்நாட்டில் நேற்று பிளஸ்–2 தேர்வு தொடங்கியுள்ளது. 8 லட்சத்து 98 ஆயிரத்து 763 மாணவர்கள் தேர்வு எழுதி வருகிறார்கள். மருத்துவக் கல்லூரிகளில் சேரவிரும்பும் மாணவர்கள் இப்போது ‘நீட்’ நுழைவுத்தேர்வு சர்ச்சையால் குழம்பிக் கொண்டு இருக்கிறார்கள். தனியார் மற்றும் நிகர் நிலை பல்கலைக்கழகங்களின் மருத்துவ மாணவர்களின் சேர்க்கை கடந்த ஆண்டு முதலே ‘தேசிய அளவிலான தகுதிகாண் நுழைவுத்தேர்வு’ என்று கூறப்படும் ‘நீட்’ மூலமே நடக்கிறது. அரசு மருத்துவக்கல்லூரிகளுக்கு கடந்த ஆண்டு மட்டும் ‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு அளித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த ஆண்டும் தமிழக மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு அளிப்பதற்காக தமிழக சட்டசபையில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டு, தமிழக கவர்னரின் கையெழுத்தைப் பெற்று, இப்போது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி, ‘நீட்’ தேர்வு நடத்தப்படுவதால், ஜனாதிபதி ஒப்புதல் கொடுப்பார் என்பதை சந்தேகத்திற்கு இடமில்லாமல், முழுமையாக எதிர்பார்க்க முடியாது. அப்படியே கொடுத்தாலும், உச்சநீதிமன்றம் அதற்கு என்ன சொல்லப்போகிறது? என்பதும் பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.

இந்தநிலையில், ‘நீட்’ தேர்வுக்காக மாணவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பங்களை அனுப்பும் கடைசிநாள் கடந்த 1–ந்தேதியோடு முடிவடைந்து விட்டது. ஒரு வேளை ‘நீட்’ தேர்வில் கலந்துகொள்வதிலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு கிடைக்கவில்லை என்றால், ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மட்டும் இந்தத்தேர்வில் கலந்துகொள்ள முடியுமே தவிர, மற்றவர்களால் நிச்சயமாக முடியாது. தமிழ்நாட்டிலுள்ள கல்வித்தரத்தில் விண்ணப்பித்த எல்லோருமே ‘நீட்’ தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள் என்று சொல்லிவிட முடியாது. ஏனென்றால்,  கடந்த   ஆண்டு   தமிழ்நாட்டில்   இருந்து ‘நீட்’ தேர்வில்  கலந்து  கொண்டவர்கள் 41.9  சதவீதம்  பேர்தான்   தேர்வு   ஆகியிருக்கிறார்கள்.  ‘நீட்’  தேர்வு   என்பது  சி.பி.எஸ்.இ. எனும் மத்திய கல்வித்திட்டத்திலுள்ள 11–வது, 12–வது வகுப்பு பாடங்களின் அடிப்படையில்தான் கேள்விகளை கொண்டதாக இருக்கும்.

தமிழக அரசின் மாநில கல்வித் திட்ட மாணவர்களின் கல்வித்தரம் அந்தளவுக்கு நிச்சயமாக இருக்காது. அப்படியென்றால், தமிழக மாணவர்களுக்கு கண்டிப்பாக சிறப்பு பயிற்சி வேண்டும். பள்ளிக்கல்வி அமைச்சராக மாபா.பாண்டியராஜன் இருந்தபோது இணையதளம் மூலம் சிறப்புபயிற்சி நடத்தப்படும் என்று சொல்லியிருந்தார். ஆனால், அப்படி எந்தவகுப்பும் நடத்தப்படவில்லை என்று அதிகாரிகள் இப்போது கூறுகிறார்கள். ஆக, ‘நீட்’ தேர்வுபற்றி எந்தவிதமான ஏற்பாடும் இல்லாதநிலையில், மாணவர்கள் தவித்துக் கொண்டு இருக்கும் போது, இப்போது கல்வி அமைச்சராக பொறுப்பேற்று இருக்கும் செங்கோட்டையனிடம், ‘நீட் தேர்வு இந்த ஆண்டு நடக்கும் என்று பரவலாக பேசப்படுகிறதே’ என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘மாணவர்கள் எல்லோருமே இதற்கு தயார்நிலையில்தான் இருக்கிறார்கள். ‘நீட்’ தேர்வு தொடர்பாக எந்த முடிவு வந்தாலும் அதற்காக தங்களை தயார் படுத்தியுள்ளனர்’ என்று கூறியிருக்கிறார். இது, மாணவர்களின் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக கல்வித்திட்டத்தின்கீழ் பயின்ற எந்தமாணவர்களும் இப்போது ‘நீட்’ தேர்வுக்கு தயாராக அதற்குரிய தரத்துடன் இல்லை. இதற்காக தனியார் நடத்தும் சிறப்பு பயிற்சி வகுப்புகளில் கட்டணம் செலுத்தி படிக்கும்நிலையிலும் மாணவர்கள் இல்லை. எனவே, அரசு இப்போது செய்ய வேண்டியது மத்திய அரசாங்கம் ஒப்புதல் தருமா?, தராதா? என்பதை உடனடியாக உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். சந்தேகமிருந்தால், பிளஸ்–2 தேர்வு முடிந்தவுடன் அந்தந்த பள்ளிக்கூடங்களிலிருந்து ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பம் செலுத்தியவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்தவேண்டும். ‘நீட்’ தேர்வுக்கான விண்ணப்பம் அனுப்புவதற்கான கடைசி தேதியையும் தமிழக மாணவர்களுக்கு நீட்டிப்புச் செய்ய கோரிக்கை விடுப்பதற்கு வாய்ப்பிருக்கிறதா? என்பதையும் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். ‘நீட்’ தேர்வு நடந்து, அதில் கலந்து கொள்ள தகுதியில்லாத நிலை மாணவர்களுக்கு ஏற்பட்டால் அதற்கு அவர்கள் பொறுப்பல்ல.


Next Story