‘நீரா’வும், பதநீரும்


‘நீரா’வும், பதநீரும்
x
தினத்தந்தி 23 March 2017 9:30 PM GMT (Updated: 2017-03-23T19:06:15+05:30)

மெரினாவில் ஜல்லிக்கட்டுக்காக நடந்த இளைஞர் பட்டாளத்தின் அறப்போராட்டத்தின்போது, தமிழக வியாபாரிகளின் இரு அமைப்புகளின் தலைவர்களான விக்கிரமராஜாவும், வெள்ளையனும், இனி தமிழ்நாட்டில் உள்ள கடைகளில் அன்னிய நாட்டு குளிர்பானங்களான ‘பெப்சி, கோக–கோலா’ போன்றவை விற்கப்படமாட்டாது.

மெரினாவில் ஜல்லிக்கட்டுக்காக நடந்த இளைஞர் பட்டாளத்தின் அறப்போராட்டத்தின்போது, தமிழக வியாபாரிகளின் இரு அமைப்புகளின் தலைவர்களான விக்கிரமராஜாவும், வெள்ளையனும், இனி தமிழ்நாட்டில் உள்ள கடைகளில் அன்னிய நாட்டு குளிர்பானங்களான ‘பெப்சி, கோக–கோலா’ போன்றவை விற்கப்படமாட்டாது. அதற்கு பதிலாக, உள்நாட்டு குளிர்பானங்கள்தான் விற்கப்படும் என்று உறுதியளித்தார்கள். ‘பெப்சி, கோக–கோலாவை’ முழுமையாக தடைசெய்ய முடியாவிட்டாலும், பெரும்பான்மையான கடைகளில் இப்போது அந்த குளிர்பானங்கள் இல்லை. உள்நாட்டு குளிர்பானங்களும், சுவையான பதநீரும், மோரும் கடைகளில் விற்கப்படவேண்டும் என்பது எல்லோருடைய பெரும் ஆசை.

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்புவரை 30 கோடி பனைமரங்கள் இருந்த தமிழ்நாட்டில், தற்போது 5 கோடி பனைமரங்கள் மட்டும் எஞ்சியிருப்பதாக கூறப்படுகிறது. பனைமரத்தின் பயன்பாட்டை நன்கு அறிந்தவர்கள் மறைந்த முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர்., காங்கிரஸ் தலைவர் குமரிஅனந்தன், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி போன்ற சில தலைவர்கள்தான். இவர்களெல்லாம் பனைமரம் ஏராளமாக வளர்க்கப்பட்டால் தமிழ்நாட்டுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? என்பதை நன்கு உணர்ந்த காரணத்தினால்தான் பனைமர வளர்ப்பை ஊக்குவித்தனர். பதநீர் போன்று, தென்னை மரத்தில் வெடிக்காத தென்னம்பாளையிலிருந்து வடித்து எடுக்கப்படும் சிப்பிவெண்மை நிறம் உள்ள தித்திப்பான சாறு ‘நீரா’ ஆகும். வெடிக்கும் நிலையில் இருக்கும் தென்னம்பாளைகளில் இருந்து ‘நீரா’ வடித்தெடுக்கப்படுகிறது. பொதுவாக ‘நீரா’ இறக்குவது 6 மாதங்கள் மட்டுமே நடைபெறும். ஒரு தென்னைமரம் நாளொன்றுக்கு சராசரியாக 2 லிட்டர் ‘நீரா’ தரும். ‘நீரா’வை நல்ல குளிர்பானமாகவும் பயன்படுத்தலாம். அதிலிருந்து தென்னை வெல்லப்பாகு, தென்னை வெல்லம், தென்னை சீனி போன்ற பலபொருட்கள் தயாரிக்கமுடியும். கேரளாவில் ‘நீரா’ விற்பனையால் அங்குள்ள விவசாயிகள் பெரிதும் பயனடைந்து வருகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் ‘நீரா’ எடுக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், 4 லட்சத்து 34 ஆயிரத்து 875 ஹெக்டேரில் 8 கோடியே 92 லட்சத்து 63 ஆயிரம் தென்னை மரங்கள் உள்ளன.

இப்போது நமது விவசாயிகள் தேங்காய்க்கு விலை இல்லாததாலும், வறட்சியின் காரணமாகவும் பெருமளவில் கஷ்டப்படுகிறார்கள். இந்தநிலையில், ‘நீரா’ எடுக்க அனுமதி அளித்தால் அவர்களுக்கு வருமானமும் பெருகும், பொதுமக்களுக்கு குளிர்பானமும் கிடைக்கும். சமீபத்தில் கோவையில் நடந்த அரசு விழாவில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, ‘‘தென்னை மரத்திலிருந்து பெறப்படும் சாறு ‘நீரா’ எனப்படும். இது ஆல்கஹால் இல்லாத இயற்கையான சத்துமிகுந்த ஆரோக்கியப்பானம். தென்னையிலிருந்து கிடைக்கும் மற்ற லாபத்தைவிட, ‘நீரா’வும், அதன் உபபொருட்களும் விவசாயிகளுக்கு மிகுந்த லாபத்தையும், பலனையும் அளிக்கக்கூடியது என்பதால், ‘நீரா’ தயாரிக்க அனுமதிக்க வேண்டுமென்று தென்னை விவசாயிகள் கோரிவருகின்றனர். அதனடிப்படையில், ‘நீரா’ தயாரிக்க அனுமதியளிப்பது தொடர்பாக அரசு பரிசீலித்து வருகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று கூறியது, தென்னை விவசாயிகளின் வயிற்றில் பால்வார்த்ததுபோல் இருக்கிறது. இந்த அறிவிப்பு விரைவில் அமலுக்கு வரவேண்டும். ‘நீரா’ விற்பனைக்கு அரசு அனுமதி கொடுத்தால், தென்னை விவசாயிகளுக்கு கைகொடுத்ததுபோல இருக்கும். நிறைய விவசாயிகளை தென்னை விவசாயத்தில் ஈடுபட ஊக்குவிக்கும். ‘நீரா’ விற்பனைக்கு அனுமதி கொடுத்தால், ஒரு விவசாயிக்கு ஒருமாதத்தில் ஒரு மரத்திலிருந்து கூடுதலாக ரூ.1,500 வருமானமாக கிடைக்கும். கேரளா மற்றும் சில மாநிலங்களைப்போல, தமிழ்நாட்டிலும் பார்த்த இடத்தில் எல்லாம் தென்னைமரங்களாக காட்சியளிக்கும். பரிசீலனையை முடித்து விரைவில் இதற்கான அறிவிப்பை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிடவேண்டும்.

Next Story