தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லையா?


தமிழர்களுக்கு  வேலைவாய்ப்பு  இல்லையா?
x
தினத்தந்தி 27 March 2017 8:30 PM GMT (Updated: 2017-03-27T18:49:28+05:30)

கடந்த டிசம்பர் 31–ந்தேதி நிலவரப்படி, தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 81 லட்சத்து 33 ஆயிரத்து 734 பேர் ஆகும்.

மிழ்நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் விசுவரூபம் எடுத்துள்ளது. கடந்த டிசம்பர் 31–ந்தேதி நிலவரப்படி, தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 81 லட்சத்து 33 ஆயிரத்து 734 பேர் ஆகும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யாதவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்தால் மிகவும் அதிகமாக இருக்கும். வேலைவாய்ப்புகளை பெருக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமையாகும்.

மத்திய அரசு பணிகளை எடுத்துக்கொண்டால், தமிழ்நாட்டில் உள்ள அலுவலகங்களில்கூட தமிழக இளைஞர்களுக்கு வேலைகிடைப்பது மிகவும் அரிதாக இருக்கிறது. இப்போதெல்லாம் ரெயில்வே, தபால் அலுவலகம் போன்ற பல மத்திய அரசு அலுவலகங்களிலும், வங்கிகள் போன்ற பொதுநிறுவனங்களிலும் வடஇந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்கிறது. ரெயில்வேயில் சின்னஞ்சிறு கிராமங்களில் இருக்கும் ரெயில் நிலையங்களில்கூட வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் ஸ்டே‌ஷன் மாஸ்டர்களாகவும், பாயிண்ட்ஸ் மேன்களாகவும் மற்றும் அடிப்படை பணியாளர்களாகவும் இருக்கிறார்கள். இதற்கு காரணம், அனைத்து பணிகளுக்குமான தேர்வுகளை ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டும் எழுதலாம் என்ற விதி இருக்கிறது. இதைப்பயன்படுத்தி வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் இந்தியில் எல்லாத்தேர்வுகளையும் எழுதி எளிதில் வெற்றிபெற்று வந்துவிடுகிறார்கள். இது மட்டுமல்லாமல், பல பணிகளுக்கு வடமாநிலங்களிலும் தேர்வுமையங்கள் இருக்கின்றன. இப்போதெல்லாம் வடமாநிலங்களில் பிளஸ்–2 தேர்வு உள்பட பல தேர்வுகளில் காப்பியடித்து எழுதுவது சர்வசாதாரணமாகிவிட்டது என்று கூறப்படுகிறது. தமிழக தேர்வு மையங்களில் காப்பியடிக்க முடியாதபடி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், வடமாநிலங்களில் அப்படி இல்லையோ? என்ற சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்தும் வகையில், சமீபத்தில் தபால்காரர்கள், மெயில் கார்டு போன்ற பணிகளில், தமிழ்நாட்டில் பணிபுரிய நடந்த தேர்வுகளில் கடினமாக கேட்கப்பட்ட தமிழ் வினாத்தாளில் மராட்டியம், அரியானா போன்ற மாநில இளைஞர்கள் சிலர் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இந்த வேலைகளுக்கான மொத்த இடமே 300 தான். ஒரு லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ள நிலையில், இந்தப் பணியில் பெரும்பாலானோர் வடமாநிலத்தவரே தேர்வு செய்யப்பட்டுவிட்டால், தமிழக இளைஞர்களை தபால்காரர்களாக பார்ப்பது அரிதாகிவிடும்.

இவ்வாறு தமிழ் வினாத்தாளில் அதிக மதிப்பெண்கள் எடுத்த வடமாநில இளைஞர்களோடு மொபைல் போனில் சில தமிழ் இளைஞர்கள் பேச முயற்சித்தபோது, அவர்களுக்கு தமிழே தெரியவில்லை என்பதைக்கண்டு மிகவும் அதிர்ச்சியடைந்தனர். தபால்காரர் தேர்வு வினாத்தாள் ‘தினத்தந்தி’க்கு கிடைத்துள்ளது. இதில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளை பார்த்தால், தமிழக இளைஞர்களுக்கே நிச்சயம் பதிலளிக்க சிரமமாக இருக்கும். எடுத்துக்காட்டாக, ‘பொழிந்திழிய’ என்பதன் இலக்கணக்குறிப்பு என்னவாகும்?. ‘போர்க்குகன்’ என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?, ‘அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை’ என்ற முதலடி கொண்ட திருக்குறளின் இரண்டாம் அடி எது? என்ற கேள்விகளுக்கு தமிழக இளைஞர்களுக்கே பதில் அளிப்பது சிரமம் என்ற நிலையில், இந்தியை தாய்மொழியாக கொண்ட வடமாநில இளைஞர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று விட்டார்கள் என்றால், நிச்சயமாக இந்தத்தேர்வுகள் முறையாக நடக்கவில்லை என்பது தெளிவாகிறது. தமிழ்நாட்டில் பணியாற்றுவதற்கான வேலைகளுக்கு தமிழ்நாட்டில் தான் தேர்வு மையங்கள் இருக்கவேண்டும். இந்தியில் எழுதுவதற்கு வாய்ப்பு அளிப்பதுபோல, தமிழிலும் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்க வேண்டும். தேர்வு மையங்களில், விடைத்தாள் திருத்தும் இடங்களில், நேர்முகத்தேர்வுகளில் எந்தவித முறைகேடுகளும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மக்களோடு தொடர்புள்ள பணிகளில் அந்தந்த மாநில இளைஞர்களுக்கு அதிக இடஒதுக்கீடு வேண்டும். இறுதியாக தபால்காரர்கள் பணிக்கு நடந்த தேர்வை ரத்து செய்துவிட்டு, மறுதேர்வு நடத்த வேண்டும்.


Next Story