நன்னெறி பாடமாக திருக்குறள்


நன்னெறி பாடமாக திருக்குறள்
x
தினத்தந்தி 29 March 2017 8:30 PM GMT (Updated: 29 March 2017 2:31 PM GMT)

இப்போதெல்லாம் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் பள்ளிக்கூட மாணவர்கள் பற்றி வரும் செய்திகளெல்லாம் பெரும் வேதனையளிக்கிறது.

ப்போதெல்லாம் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் பள்ளிக்கூட மாணவர்கள் பற்றி வரும் செய்திகளெல்லாம் பெரும் வேதனையளிக்கிறது. பேனா எடுக்கவேண்டிய வயதில், கத்தியை எடுத்துக் கொண்டு பள்ளிக்கூடங்களிலேயே பல கத்திக்குத்து சம்பவங்கள் நடக்கின்றன. பல பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் குடிப்பழக்கத்துக்கு ஆட்பட்டுள்ள துயரமான நிகழ்வுகள் நடக்கின்றன. படிக்கும் வயதிலேயே பல மாணவிகள் பாலியல் உணர்ச்சிகளுக்கு ஆட்படுவதும், காதல் என்ற வலையில் விழுந்து ஓடிப்போவதும், படிக்கும் காலத்திலேயே கர்ப்பம் அடைவதுமான பல வருத்தத்துக்குரிய செய்திகள் வருகின்றன. இதுமட்டுமல்லாமல், நற்குணங்கள் மலரவேண்டிய இந்த ‘டீன்ஏஜ் பருவம்’ என்று கூறப்படும் பதின் பருவத்தில் துர்க்குணங்கள் என்ற முட்புதர்கள் வளர்ந்து அவர்களின் எதிர்கால வாழ்க்கையை குத்தி குதறிவிடுகின்றன. மேலும், வாழ்க்கையில் ஒரு சிறிய சறுக்கல்களைக்கூட, ஒரு சிறிய தோல்வியைக்கூட சந்திப்பதற்கு துணிவில்லாமல் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும் நடக்கின்றன.

இதற்கெல்லாம் காரணம், அந்தக்காலத்தில் பள்ளிக்கூடங்களில் நீதிபோதனை பாடங்கள் இருந்தன. இப்போது பள்ளிக்கூடங்களில் நீதிபோதனை இல்லை. பாடம், பாடம், படிப்பு, படிப்பு என்று வேறு எதற்கும் இடம்கொடுக்காமல், பள்ளிக்கூடநேரங்களில் படிப்பு ஒன்றுதான் முக்கியம் என்றவகையில் கல்வி கற்பிக்கப்படுகின்றன. இந்தநிலையில், மதுரை ஐகோர்ட்டு கிளையில் எஸ்.ராஜரத்தினம் என்பவர் திருக்குறளில் உள்ள 1,330 குறள்களையும் 6–ம் வகுப்பு முதல் 12–ம் வகுப்புவரை பாடத்திட்டத்தில் கொண்டுவரவேண்டும் என்று வழக்கை தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், கல்வியின் முதன்மை குறிக்கோளே நன்னெறி கருத்துகளின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் சமூகம் என்பதால், திருக்குறளில் இடம்பெற்றிருக்கும் அறத்துப்பால், பொருட்பால் இரண்டையும் பாடத்திட்டத்தில் சேர்த்திட தமிழக அரசுக்கு ஆணையிட்டார். ‘மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்பிக்க அவர்கள் வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவற்றையும் பின்பற்றிட திருக்குறளில் எல்லா நீதிபோதனைகளும் உள்ளன’ என்று நீதிபதி வலியுறுத்தினார். ஒழுக்கமுள்ள, நேர்மையுள்ள, அறிவாற்றல் உள்ள எதிர்காலத்தை ஒளிர வைக்கும் மாணவர் சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என்றவகையில் நீதிபதி ஆர்.மகாதேவனின் இந்த தீர்ப்பை தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது மிகவும் வரவேற்புக்குரியதாகும்.

உலக இலக்கியச்செழுமைக்கு தமிழ்மொழியில் மிகச்சிறந்த கொடையாக கருதப்படுவதும், நன்னெறி கருத்துகளுடன் வாழ்வியல் நெறிகளை இணைத்து செதுக்கப்பட்ட அறிவுக்கருவூலம் திருக்குறளில் உள்ள அறத்துப்பால் மற்றும் பொருட்பாலில் உள்ள 105 அதிகாரங்களையும் வகுப்பு வாரியாக 15 அதிகாரங்கள் என்றவகையில், 6–ம் வகுப்பு முதல் 12–ம் வகுப்புவரை வரும் கல்வியாண்டில் பயிற்றுவிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரு அதிகாரத்தில் 10 குறட்பாக்கள் இருக்கின்றன. ஆக, ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்கள் 150 குறட்பாக்களை கற்றுக்கொள்வார்கள். 12–ம் வகுப்பு படித்து முடிக்கும்போது 1,050 குறட்பாக்களை அறிந்து, புரிந்து, தெரிந்து மாணவ சமுதாயம் வெளியே வரும். இதுமட்டுமல்லாமல், திருக்குறளில் இடம்பெற்றிருக்கும் நன்னெறி கருத்துகளின் அடிப்படையில் நீதிக்கதைகள், இசைப்பாடல்கள், சித்திரக் கதைகள், அசைவூட்டப்பட்ட படங்கள் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்களை சென்றடையும் விதமான இணையவழி என திருக்குறளை அவ்வப்போது நவீனமுறையில் உருவாக்கி உடனுக்குடன் பதிப்பித்து வெளியிட மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்துக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திருக்குறள் எந்த மதத்துக்கும், எந்த இனத்துக்கும் மட்டும் சொந்தமில்லை, எல்லோருக்குமான பொதுமறை என்றவகையில் சிந்தைக்கு இனிய, செவிக்கு இனிய திருக்குறளை கற்றுக்கொடுக்கும் பணிக்கு முன்னுரிமை கொடுத்து, இதிலுள்ள அறவழிகளை மாணவர்களின் உள்ளத்தில் பதியவைத்து, அதன்படி நடக்கவைக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்குத்தான் இருக்கிறது.


Next Story