குடியிருப்பு பகுதிகளில் டாஸ்மாக் கடை வேண்டாம்


குடியிருப்பு பகுதிகளில் டாஸ்மாக் கடை வேண்டாம்
x
தினத்தந்தி 13 April 2017 8:30 PM GMT (Updated: 13 April 2017 1:34 PM GMT)

சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு, ‘தேசிய நெடுஞ்சாலைகளிலும், மாநில நெடுஞ்சாலைகளிலும் இருக்கும் அனைத்து மதுக்கடைகள், கிளப்கள், நட்சத்திர ஓட்டல்களில் உள்ள பார்கள் எல்லாவற்றையும் ஏப்ரல் 1–ந்தேதி முதல் மூடவேண்டும்’ என்று உத்தரவிட்டிருந்தது.

மீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு, ‘தேசிய நெடுஞ்சாலைகளிலும், மாநில நெடுஞ்சாலைகளிலும் இருக்கும் அனைத்து மதுக்கடைகள், கிளப்கள், நட்சத்திர ஓட்டல்களில் உள்ள பார்கள் எல்லாவற்றையும் ஏப்ரல் 1–ந்தேதி முதல் மூடவேண்டும்’ என்று உத்தரவிட்டிருந்தது. இதன்காரணமாக, தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 5 ஆயிரத்து 622 கடைகளில், ஏறத்தாழ 3 ஆயிரம் டாஸ்மாக் கடைகளை மூடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருந்தது. இதில் பல கடைகள் இன்னமும் மூடப்படவில்லை. இந்த கடைகளுக்கு பதிலாக, மாற்று இடங்களை தேடி டாஸ்மாக் நிறுவனம் கடைகளை அமைத்து வருகிறது. திருப்பூர் மாவட்டம், சாமளாபுரத்தில் நெடுஞ்சாலை ஓரமாக இருந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டு, அதற்கு பதிலாக, புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. மக்கள் நடமாட்டம் உள்ள தங்கள் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடையை அமைக்கக்கூடாது என்று அந்த கிராமமக்கள் குறிப்பாக, ஏராளமான பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் தலைமையில் போலீசாரும், அதிரடிப்படையினரும் அங்கு வந்து தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயற்சி செய்தனர். அப்போது அங்கு மறியலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண்களிடம், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் வந்து அங்கிருந்த ஈசுவரி என்ற பெண்ணின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதில், தனக்கு செவித்திறன் குறைந்துவிட்டதாக அந்த பெண் கூறுகிறார். மேலும், பலரும் போலீசாரின் தாக்குதலில் காயம் அடைந்தனர். ஒட்டுமொத்த தமிழகத்தையே இந்த செயல் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க உண்ணாவிரத போராட்டம், உயர்நீதிமன்றத்தில் வழக்கு என்று எதிர்ப்புகள் வலுத்துவருகின்றன.

சாமளாபுரத்தில் மட்டுமல்லாமல், நெல்லை மாவட்டம் தென்காசி, நாகப்பட்டினம் மாவட்டம் அண்ணா பேட்டை, சேலம் ரெயில் நிலையம் எதிரே, மேச்சேரி அருகேயுள்ள குக்கன்பட்டி காட்டு வளவு கிராமம், நாமக்கல் பட்டறைமேடு, கன்னியாகுமரி மாவட்டம் கல்லுவிளை, ஈரோடு மாவட்டம் தட்டாங்காட்டுபுதூர், சிவகங்கை மாவட்டம் குருந்தனி, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, வேலூர் மாவட்டம் சின்னபேராம்பட்டு ஆத்துமேடு, கோவை பெரியநாயக்கன்பாளையம் ரங்கநாதபுரம் பகுதி உள்பட தமிழ்நாடு முழுவதும் ஏராளமான இடங்களில் மக்கள் அதிகம் கூடும்பகுதிகள், குடியிருப்பு பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை தொடங்கக்கூடாது என பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. காஞ்சீபுரம் மாவட்டம் ஆலத்தூரில் புதிய கடைக்காக கட்டப்பட்ட கட்டிடத்தை மக்களே இடித்து தள்ளியிருக்கிறார்கள். இப்போது சாமளாபுரம் கடை மூடப்பட்டுள்ளது. இதை ஒரு பாடமாகக்கொண்டு, தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை மக்கள் அதிகம் கூடும் வழிபாட்டு தலங்கள், கடைப்பகுதிகள், மருத்துவமனைகள், சந்தைகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் போன்ற பகுதிகளின் அருகிலும், குடியிருப்பு பகுதிகளிலும் தொடங்கக்கூடாது என்ற விதிப்படி செயல்படவேண்டும். அங்கெல்லாம் டாஸ்மாக் கடைகளை திறப்பதை தவிர்ப்பதோடு அல்லாமல், மக்கள் எதிர்ப்பு இருக்கும் அனைத்து இடங்களிலும் அவர்களின் கஷ்டங்களையும் உணர்ந்து அங்கெல்லாம் தொடங்காமல், ஊருக்கு ஒதுக்குப்புறமாக மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் டாஸ்மாக் கடைகளை தொடங்கவேண்டும். பொதுமக்கள் வேண்டாம் என்று சொல்லும் இடங்களை தவிர்ப்பதில் தயக்கம் காட்டக்கூடாது. டாஸ்மாக் கடைகளை தங்கள் குடியிருப்பு பகுதிகள், தாங்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் தொடங்கக்கூடாது என்று மக்கள் அதிலும் குறிப்பாக பெண்கள் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துகிறார்கள் என்றால், இந்த கடைகளால் அவர்கள் அடைந்த இன்னல்களின் வலி அவர்களுக்குத்தான் தெரியும். அதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.


Next Story