தலைவர்கள் பிறந்த நாட்களில் விடுமுறை


தலைவர்கள்  பிறந்த  நாட்களில்  விடுமுறை
x
தினத்தந்தி 25 April 2017 9:30 PM GMT (Updated: 25 April 2017 5:30 PM GMT)

கடந்த மாதம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலும் சரி, அதன்பின்னர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடக்கும் பா.ஜ.க. ஆட்சியும் சரி, இந்தியா முழுவதிற்கும் பல ஆச்சரியங்களையும், உத்தரபிரதேச மக்களுக்கு பல நன்மைகளையும் வாரி, வாரி வழங்கி வருகிறது.

டந்த மாதம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலும் சரி, அதன்பின்னர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடக்கும் பா.ஜ.க. ஆட்சியும் சரி, இந்தியா முழுவதிற்கும் பல ஆச்சரியங்களையும், உத்தரபிரதேச மக்களுக்கு பல நன்மைகளையும் வாரி, வாரி வழங்கி வருகிறது. அவர் முதல்–மந்திரி பொறுப்புக்கு வந்ததே யாரும் எதிர்பார்க்காத ஒன்றாகும். 312 எம்.எல்.ஏ.க்களில், யார் முதல்–மந்திரியாக வரப்போகிறார் என்று நாடே எதிர்பார்த்தது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், பாராளுமன்ற உறுப்பினரான 44 வயதான யோகி ஆதித்யநாத் முதல்–மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அனல்பறக்கும் அரசியலுக்கு சொந்தக்காரர் என்ற பெயர் பெற்ற யோகி ஆதித்யநாத் முதல்–மந்திரி பொறுப்பை ஏற்றபோது, எல்லோருமே இவரது சுனாமி போன்ற வேகத்திலான கொள்கைக்கும், முதல்–மந்திரி பொறுப்புக்கும் ஒத்துவருமா? என்று சந்தேகப்பட்டனர். ஆனால், அவர் எடுத்துவைக்கும் ஒவ்வொரு பாதையும் உத்தரபிரதேச மக்களுக்கு நன்மையையும், மற்ற மாநிலங்கள் பின்பற்ற வைக்கும் வகையிலும் இருக்கிறது. இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் விவசாயிகள் கடன்கள் ரத்து செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கை நிலவிவரும் நேரத்தில், 86 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.36 ஆயிரம் கோடி கடனை ரத்து செய்தார். அன்றிலிருந்து தொடர்ந்து பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். தற்போது அவர் டாக்டர் அம்பேத்கர் போன்ற மாபெரும் தலைவர்களின் பிறந்த நாட்கள், நினைவு நாட்களில் பள்ளிக்கூடங்களுக்கு இனி விடுமுறை கிடையாது. அதற்கு பதிலாக, அந்த நாட்களில் பள்ளிக்கூடங்களில் அந்த மாபெரும் தலைவர்கள் பற்றி மாணவர்கள் அனைவரும் அறியும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். அம்பேத்கர் பிறந்தநாள்விழா கொண்டாட்டம் லக்னோவில் உள்ள அம்பேத்கர் மகாசபையில் நடந்தது. அப்போது அவர், ‘‘இதை சிலர் விரும்பாமல் இருக்கலாம். ஆனால், பெரிய தலைவர்களின் பிறந்த நாட்கள், நினைவு நாட்களில் பள்ளிக்கூடங்களை மூடுவது தவிர்க்கப்பட வேண்டும். பல நேரங்களில் எதற்காக நம் பள்ளிக்கூடத்திற்கு விடுமுறை விட்டிருக்கிறார்கள் என்று தெரியாத நிலை மாணவர்களிடம் இருப்பதால், இந்த நோக்கமே அடிபட்டு போய்விடுகிறது. இவ்வாறு அடிக்கடி விடுமுறை விடுவதால், பள்ளிக்கூடங்கள் குறைந்தபட்சம் 220 நாட்கள் இயங்கவேண்டும் என்பது 140 நாட்களுக்குள் சென்றுவிடுகிறது. இதனால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளார். இது நிச்சயம் வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

இப்போதுள்ள பள்ளிக்கூட மாணவர்கள் என்றாலும் சரி, கல்லூரி மாணவர்கள் என்றாலும் சரி, இந்த நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்த பெரிய தலைவர்கள் தொடங்கி, இன்றுவரை நாட்டின், மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபட்ட பெரிய தலைவர்களின் வாழ்க்கை வரலாறும் சரி, அவர்கள் கடந்துவந்த பாதையும் சரி, அவர்களுடைய முற்போக்கான சிந்தனையும் சரி, அவர்கள் ஆற்றிய மாபெரும் செயல்களும் சரி தெரியாமல் இருக்கிறது. வெறுமனே அவர்கள் பிறந்த நாட்களிலும், நினைவு நாட்களிலும் விடுமுறை விடுவதை விட்டுவிட்டு, அந்த நாட்களில் அவர்கள் பற்றிய உணர்வுகளை மாணவர்களின் உள்ளங்களில் விதைப்பது மிகவும் நல்லது. நடந்துவந்த பாதையை நன்கு அறிந்தால்தான் போகவேண்டிய பாதையை தீர்மானித்து, எதிர்கால இளைஞர் சமுதாயம் வல்லவர்களாக முடியும். மேலும், இவ்வாறு விடுமுறை விட்டுக்கொண்டே இருப்பது, மாணவர்கள் கல்வி கற்பதற்கான நேரத்தையும் குறைத்துக்கொண்டே செல்லும். யோகி ஆதித்யநாத்தின் முடிவு, தமிழ்நாட்டிலும் பின்பற்றவேண்டிய ஒன்றாகும். பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மட்டுமல்லாமல், அனைத்து அரசு அலுவலகங்கள் உள்பட எல்லா இடங்களிலும் விடுமுறை நாட்களை குறைத்து, உற்பத்தி திறனை உயர்த்தி, மாநிலத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டுசெல்வது நமது குறிக்கோளாக இருக்கட்டும்.

Next Story